மான்டேஜ் மீடியா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள படம், 'மதுபானக்கடை'. கார்த்திவேல், தியானா, அரவிந்த் அண்ணாமலை, 'பூ' ராமு உட்பட பலர் நடித்துள்ளனர். திரைக்கதை, வசனம் ஐயப்பன். பாடல்கள், என்.டி.ராஜ்குமார். படத்தை இயக்கியுள்ள கமலக்கண்ணன் கூறியதாவது: மதுபானக்கடையில் நடக்கும் கதைதான் படம். முதல்நாள் இரவு பத்து மணிக்கு கடை அடைக்கப்படுவதிலிருந்து மறுநாள் இரவு அடைக்கப்படுவதுவரை டாஸ்மாக்கில் நடக்கும் விஷயங்களை சொல்லியிருக்கிறோம். முழுக்க முழுக்க காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து படம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் ஹீரோ, ஹீரோயின் என்று யாரும் இல்லை. ஹீரோ என்று பார்த்தால் மதுபானக்கடைதான். ஒரு லொகேஷனை மட்டும் மையப்படுத்தி படம் வருவது தமிழில் இதுதான் முதன்முறை. இதில் நவீன கவிஞர் என்.டி.ராஜ்குமார் பாடல் எழுதியிருப்பதோடு முக்கிய கேரக்டரில் நடிக்கவும் செய்திருக்கிறார். படம் முடிந்துவிட்டது. இம்மாத இறுதியில் ரிலீஸ் செய்யும் முயற்சியில் இருக்கிறோம். படத்தின் புரமோஷனுக்காக புதுமையான வீடியோ ஆல்பம் உருவாக்கியுள்ளோம். அதாவது மதுபானக்கடை தொடர்பாக, 20 ஆயிரம் ஸ்டில்ஸ் எடுத்து, அதில் 4, 500 போட்டோவை பயன்படுத்தி ஆல்பம் உருவாக்கியிருக்கிறோம். இந்த கான்செப்ட் இந்திய சினிமாவில் முதல் முயற்சி. இவ்வாறு கமலக்கண்ணன் கூறினார்.
Post a Comment