கேரளாவின் சித்ராஞ்சலி ஸ்டுடியோவில் விறுவிறு படப்பிடிப்பில் கோச்சடையான்!

|


Kochadayan Movie
ரஜினியின் கோச்சடையான் இப்போது மையம் கொண்டுள்ள இடம் திருவனந்தபுரத்தில் உள்ள சித்ராஞ்சலி ஸ்டுடியோ.

சென்னையில் இல்லாத வசதியா இந்த ஸ்டுடியோவில் என்ற கேள்வி எழுகிறதல்லவா... உண்மைதான். ஹாலிவுட் ஸ்டுடியோக்களுக்கு நிகரான வசதிகள், பாதுகாப்பு, யாரும் அத்தனை சுலபத்தில் புக முடியாத அளவு பிரைவசி உள்ள இடம் இது.

கோவளம் சாலையில் திருவல்லவம் மலைப்பகுதியில் அழகிய லொகேஷனில் அமைந்துள்ளது சித்ராஞ்சலி. மத்திய மாநில அரசுகளின் பல விருதுகளை இந்த ஸ்டுடியோ வென்றுள்ளது. கேரள அரசே நடத்துகிறது. ஆனால் தமிழ் சினிமாக்காரரர்களுக்கே பெரிதாக தெரியாத இடம் இது.

ரஜினி இங்கு படப்பிடிப்பு நடத்த விரும்பியது தெரிந்ததும் கேரள அமைச்சரும் ரஜினி ரசிகருமான கே பி கணேஷ் குமார், படப்பிடிப்புக்கான அனைத்து ஏற்பாடுகளையும் முன்நின்று செய்துள்ளார். மீடியா ஆட்கள் யாருக்கும் படப்பிடிப்புத் தளத்தில் அனுமதியில்லை.

இந்த ஸ்டுடியோவுக்குள் தீபிகா - ரஜினி காட்சிகள் படமாக்கம் இன்றுடன் முடிந்துவிடும். அடுத்து சில காட்சிகளை கேரளாவின் அழகிய லொகேஷன்களில் படமாக்கத் திட்டமிட்டுள்ளார் சௌந்தர்யா. நடிகர் ஆதியும் இந்த ஷெட்யூலில் பங்கேற்கிறார்.

பாடல் காட்சிகள் உள்ளிட்ட பகுதிகள் அடுத்தகட்டமாக படமாக்கப்படும் என்று தெரிகிறது. ஜூலை இறுதியில் பாடல்களை வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளதாக தயாரிப்பாளர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
 

Post a Comment