பத்திரிகையாளர் - எழுத்தாளர் தென்னிலவன் மரணம்!

|

Journalist Thennilavan Passes Away

கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு, சிகிச்சைப் பெற்று வந்த பத்திரிகையாளரும், எழுத்தாளருமான தென்னிலவன் இன்று சென்னையில் மரணமடைந்தார். அவருக்கு வயது 47.

தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க பத்திரிகையாளராகவும், எழுத்தாளராகவும், கவிஞராகவும் திகழ்ந்தவர் தென்னிலவன். கும்பகோணத்தைச் சேர்ந்தவர்.

ஜெமினி சினிமா பத்திரிகையின் ஆரம்ப நாட்களில் தென்னிலவனின் பங்களிப்பு மிகப் பெரிய அளவில் இருந்தது.

பின்னர் பிலிம்டுடே உள்ளிட்ட 8 பத்திரிகைகளின் பொறுப்பாசிரியராக பணியாற்றி வந்தார்.

ஒரே நாளில் ஒரு குறுநாவலை எழுதி முடிக்கும் ஆற்றல் பெற்றிருந்தார் தென்னிலவன். ஏராளமான குறுநாவல்கள், சிறுகதைகள் மற்றும் கவிதைகள் எழுதியுள்ள அவர், பிரபல பத்திரிகை தொடர்பாளரும் விஜய்யின் மேனேஜருமான பிடி செல்வகுமாரிடம் பணியாற்றி வந்தார். நடிகர் விஜய் மற்றும் அவர் தந்தை எஸ் ஏ சந்திரசேகரனுக்கு மிகவும் உதவியாக இருந்தார் தென்னிலவன்.

அவருக்கு குடலில் கேன்சர் இருப்பது மிகச் சமீபத்தில்தான் கண்டறியப்பட்டது. ஆனால் முற்றிய நிலையில் நோய் இருந்தது. அவருக்கு விஜயா மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

சக பத்திரிகையாளர்கள், நண்பர்கள் மற்றும் திரைத் துறையைச் சேர்ந்த சிலரது நிதி உதவியுடன் அவருக்கு ஆரம்ப சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. ஆனால், அறுவைச் சிகிச்சை செய்ய பெரும் பணம் தேவைப்பட்டது. இதற்கிடையே, புற்று நோய் குடலிலிருந்து நுரையீரல், கல்லீரல் பகுதிகளில் பரவி, அவரது உடல்நிலையை மிகவும் மோசமாக்கிவிட, எந்த சிகிச்சையும் பலனளிக்காமல் இன்று காலமாகிவிட்டார்.

தென்னிலவன் இறுதி ஊர்வலம் இன்று மாலை 5 மணிக்கு சென்னையில் உள்ள பிடி செல்வகுமார் இல்லத்திலிருந்து புறப்படுகிறது. முகவரி: 27/3, வ உசி தெரு / தேவராஜ் நகர், சாலிகிராமம், சென்னை. தொலைபேசி: ஜெ பிஸ்மி - 9444037638.

 

Post a Comment