தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான கபடியை ரியாலிட்டி ஷோ வாக ஒளிபரப்புகிறது ஜெயா டிவி. கேபிஎல் எனப்படும் கபடி பிரீமியர் லீக் போட்டியில் சனிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் திருவள்ளூர் அணியை எதிர்த்து ஆடிய காஞ்சிபுரம் அணி 79 புள்ளிகள் எடுத்து வெற்றி பெற்றது.
தமிழகத்தின் 32 மாவட்டங்களை சேர்ந்த மகளிர் கபடி அணியினரின் இந்த வீர விளையாட்டு ஒவ்வொருவாரமும் சனி இரவு 9.30 மணிக்கும் ஞாயிறு மதியம் 1.30 மணிக்கும் ஒளிபரப்பாகிறது. செப்டம்பர் 8 ம் தேதி இரவு நடைபெற்ற லீக் ஆட்டத்தில் காஞ்சிபுரம் அணியும், திருவள்ளூர் அணியும் விளையாடின.
ஆரம்பம் முதலே காஞ்சிபுரம் அணியின் கை ஓங்கியது. இறுதியில் திருவள்ளூர் அணி 32 புள்ளிகள் மட்டுமே பெற்றது. காஞ்சிபுரம் அணி 79 புள்ளிகள் பெற்று வெற்றி பெற்றன.
நிகழ்ச்சியின் போது விளையாட்டு வீராங்கனைகளின் குடும்ப பின்னணி பற்றியும், அவர்களின் வாழ்க்கைப்போராட்டம் பற்றியும், விடாமுயற்சி பற்றியும் ஒளிபரப்புகின்றனர். ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் எவ்வாறு தனது குடும்ப சுமையையும் பொருட்படுத்தாமல் தனது மகளை கபடி வீராங்கனையாக உருவாக்குவதற்கு சிரமப்பட்டார் என்பதை சனிக்கிழமை ஒளிபரப்பினார்கள்.
கலக்கல் கபடியில் வெற்றி பெறும் அணிக்கு பத்து லட்சம் ரூபாய் பரிசும், வெற்றிக்கோப்பையும் வழங்கப்பட இருக்கிறது. இரண்டாவது இடம் பெறும் அணிக்கு 5 லட்சம் ரூபாயும், ஒவ்வொரு வீரங்கனைக்கும் ஸ்போர்ட்ஸ் சைக்கிள் பரிசாக அளிக்கப்பட இருக்கிறது. மூன்றாவது, நான்காவது இடம் பெறும் அணிக்கு தலா 2 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்பட உள்ளது.
இந்த கலக்கல் கபடி ரியாலிட்டி ஷோ ரசிகர்களிடம் பெறும் வரவேற்பினை பெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு தேவா இசை அமைத்து தீம் பாடலை பாடியிருக்கிறார். இதனை இடை இடையே ஒளிபரப்பி உற்சாகப்படுத்துகின்றனர். இந்த நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பில் நிஜ கபடி வீராங்கனைகளுடன் திரைப்பட நட்சத்திரங்கள். நடிகைகள் அஞ்சலி, விஜயலட்சுமி, கஸ்தூரி மற்றும் சின்னத்திரை நட்சத்திரங்களும் இணைந்து ஆடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment