நடிகை வீட்டு நாய் காணாமப் போச்சுன்னா எவ்ளோ பெரிய பிரச்சினை...!

|

Pakistani Actress Meera Loses Her Sherdil

லாகூர்: பாகிஸ்தானைச் சேர்ந்தவரும், பாலிவுட்டில் புகுந்துள்ளவருமான மீரா தனது நாயைக் காணவில்லை என்று லாகூர் போலீஸில் புகார் கொடுத்துள்ளாராம். நாய் காணாமல் போவதாக மீரா புகார் கொடுப்பது இது முதல் முறையல்ல, 2வது முறையாகும்.

முதலில் தனது நாய் காணாமல் போய் விட்டதாக மும்பை போலீஸிடம் கண்ணீரும் கம்பலையுமாக புகார் கொடுத்தார். இப்போது தனது சொந்த ஊரான லாகூரில் வைத்து ஜெர்மன் ஷெப்பர்ட் ரக நாய் ஷெர்டில் காணவில்லை என்று ஒரு புகார் கொடுத்துள்ளாராம். அவரது சார்பில் தம்பி அசன் இந்தப் புகாரைக் கொடுத்துள்ளாராம்.

லாகூரில் டிபன்ஸ் காலனி பகுதியில் மீரா வீடு உள்ளதாம். அங்கு புகுந்த சிலர் நாயைத் திருடிக் கொண்டு போய் விட்டதாக புகார் கூறுகிறது. சம்பவத்தின்போது நாயானது, வீட்டுக்கு வெளியே உலவிக் கொண்டிருந்ததாக அதை கடைசியாக நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர். இதை வைத்து போலீஸார் தீவிரமாக விசாரணையை தொடங்கியுள்ளனராம்.

இந்த நாயின் மதிப்பு இந்திய ரூபாய் மதிப்பில் ரூ. 3 லட்சமாம். எனவே படு சீரியஸாக போலீஸார் நாயைத் தேட ஆரம்பித்துள்ளனராம். மோப்ப நாய்களையும் கூட இதில் பயன்படுத்தி வருகின்றனராம். எப்படியாவது பிடிச்சுடுவோம் என்றும் மீராவுக்கு உறுதியளிக்கப்பட்டுள்ளதாம்.

மீரா பாகிஸ்தான் டிவி சீரியல்களில் நடித்தவர். பாலிவுட்டில் நடிக்க ஆர்வமாக இருப்பவர். அடிக்கடி மும்பைக்கு வந்து போகிறார்.

மீரா நாயை மட்டுமல்ல பணத்தையும் கூட அடிக்கடி தொலைத்து விடுவாராம். கடந்த வாரம் கூட தனது பர்ஸில் வைத்திருந்த 10,000 டாலர் பணத்தை யாரோ அபேஸ் செய்து விட்டார்களாம். இப்போது நாயைத் தொலைத்து விட்டார்.

பார்த்து சூதானாமா இருக்க வேணாமா மீரா...!

 

Post a Comment