தம் அடிக்கும் காட்சியில் தோன்றியதற்காக நடிகர் மோகன்லால் மீது அரசு வழக்கு!

|

Smoking Poster Mohanlal Too Lands In Trouble

திருவனந்தபுரம்: புகைப் பிடிக்கும் காட்சியில் தோன்றியதற்காக நடிகர் மோகன் லால் மீது கேரள அரசு வழக்குப் பதிவு செய்துள்ளது.

திரைப்படங்களில் புகை பிடிப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தாலும், திரைப்படங்களை விளம்பரப்படுத்த ஒட்டப்படும் போஸ்டர்களில், அதுபோன்ற காட்சிகள் இடம் பெறக்கூடாது' என, கடந்த ஆண்டு மத்திய அரசு உத்தரவிட்டது.

இந்த உத்தரவின் அடிப்படையில், கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில், 'பாதுகாப்பான திருவனந்தபுரம்' என்ற பெயரில், மாநில அரசின் சுகாதாரத் துறை அதிகாரிகள், பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று முன் தினம் மலையாள நடிகை மைதிலி நடித்த திரைப்படத்தில், அவர் புகைப்பிடிப்பது போன்ற சில காட்சிகள் போஸ்டர்களாக தயாரிக்கப்பட்டு, நகர் முழுவதும் ஒட்டப்பட்டிருந்தன.

இந்தப் போஸ்டர்களை அகற்றிய, சுகாதாரத் துறை அதிகாரிகள், நடிகை மீது வழக்கு பதிய உத்தரவிட்ட்டனர்.

ஆனாலும், அடுத்ததாக பிரபல நடிகர் மோகன்லால் நடித்து நேற்று வெளியான, 'கர்மயோதா' என்ற மலையாள திரைப்படத்திற்கான போஸ்டர்களிலும், அவர் புகை பிடிப்பது போன்ற காட்சி இடம்பெற்றிருந்தது.

இதை பார்த்த, மாநில சுகாதார துறை அதிகாரிகள், அந்த சுவரொட்டிகளை அகற்ற நடவடிக்கை எடுத்ததோடு, நடிகர் மோகன்லால், படத்தின் இயக்குனர், மேஜர் ரவி, தயாரிப்பாளர் மற்றும் திரைப்படம் வெளியாகி உள்ள தியேட்டர்களின் மேலாளர்கள் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளனர்.

அதன்படி, வழக்கு பதியப்பட்டுள்ளது. இந்த வழக்கில், குற்றம் நிரூபிக்கப்பட்டால், இரண்டாண்டு சிறை அல்லது 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்படலாம்.

இப்படியொரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது, அதுவும் விவிஐபிக்கு எதிராக செய்யப்பட்டுள்ளது நாட்டிலேயே இதுதான் முதல் முறை.

 

Post a Comment