சென்னை: விஸ்வரூபம் படத்தை டி.டி.ஹெச். மூலம் ஒளிபரப்பும் முடிவை நடிகர் கமல்ஹாசன் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
சங்கத்தின் கூட்டம் கோவையில் புதன்கிழமை நடைபெற்றது. தமிழகம் முழுவதும் இருந்து சங்கத்தின் நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்றனர்.
கூட்ட முடிவுகள் குறித்து தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்க பொதுச் செயலர் ஆர். பன்னீர்செல்வம் நிருபர்களிடம் கூறியது:
நடிகர் கமல்ஹாசனின் விஸ்வரூபம் படம் மூலம் தமிழ்நாடு சினிமாவில் இப்போது புதிதாக பிரச்னை ஏற்பட்டுள்ளது. வரும் ஜன. 10-ல் டி.டி.ஹெச். மூலம் விஸ்வரூபம் படத்தை ஒளிபரப்பிவிட்டு ஜன. 11-ஆம் தேதி திரையரங்குகளின் மூலம் வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல் நாளில் டி.டி.ஹெச். மூலம் ஒளிபரப்பிவிட்டு அடுத்த நாள் திரையரங்குகளில் வெளியிட்டால் ரசிகர்கள் வரமாட்டார்கள். புதிய படங்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்புவதாலும் திருட்டு சி.டி. அதிகமாக இருப்பதாலும் திரையரங்குகளுக்குக் கூட்டம் வருவதில்லை.
தமிழகத்தில் திரையரங்குகளை நம்பி சுமார் 30 லட்சம் குடும்பங்கள் உள்ளன. தமிழகம் முழுவதும் 3,000 திரையரங்குகள் இருந்த இடத்தில் இப்போது வெறும் 1,500 திரையரங்குகள்தான் உள்ளன. இந்த நிலை நீடித்தால் விரைவில் தமிழகத்தில் திரையரங்குகளே இல்லாமல் போகும்.
விஸ்வரூபம் படத்தை டி.டி.ஹெச். மூலம் வெளியிடும் தன் முடிவை நடிகர் கமல்ஹாசன் மறுபரிசீலனை செய்ய வேண்டும். அவ்வாறு இல்லாமல் டி.டி.ஹெச். மூலம் வெளியிட்டால் இனிமேல் தமிழகத்தில் எந்தத் திரையரங்கிலும் கமல்ஹாசன் திரைப்படம் திரையிட அனுமதிக்க மாட்டோம்.
விஸ்வரூபம் படத்தை டி.டி.ஹெச்.ல் வெளியிட்ட பின் வெளியிடும் சம்பந்தப்பட்ட திரையரங்கு உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் சம்பந்தப்பட்ட உரிமையாளர் மீது தொழில் ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். அவருக்குத் தொழில் தொடர்பாக எந்த ஒத்துழைப்பும் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்திடம் இருந்து கிடைக்காது," என்றார்.
Post a Comment