மும்பை: கார் விபத்து வழக்கில் சிக்கியுள்ள பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும் சூழல் உருவாகியுள்ளது.
கடந்த 2002-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28-ந்தேதி மும்பை அதிகாலை பந்த்ரா பகுதியில் நடிகர் சல்மான்கான் காரில் சென்று கொண்டிருந்த போது, திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. ரோட்டோரத்தில் தூங்கிய 5 பேர் மீது மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
நடிகர் சல்மான் கான் மீது போலீசார் இந்திய தண்டனை சட்டம் 304(1) பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை கடந்த 2006-ம் ஆண்டு முதல் நடந்து வருகிறது.
இதனிடையே மகாராஷ்டிரா மாநில அரசு நடிகர் சல்மான் கானுக்கு எதிராக மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஒரு மனுதாக்கல் செய்தது. சல்மான் கான் மீது இந்திய தண்டனை சட்டம் 304(2) பிரிவின்கீழ் விசாரணை நடத்த வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த மனுவை ஏற்றுக் கொண்ட மாஜிஸ்திரேட்டு சல்மான் கான் மீது 304(2)-வது சட்டப் பிரிவின்கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.
சட்டப்பிரிவு 304(2)-ன் கீழ் வழக்கு விசாரணை நடந்தால் நடிகர் சல்மான் கானுக்கு அதிகபட்சம் 10 ஆண்டுகள் வரை தண்டனை கொடுக்க வாய்ப்புள்ளது.
அதிகபட்ச குற்றம் செய்திருப்பதாக இந்த வழக்கு மாற்றப்படும் பட்சத்தில், இந்த வழக்கு விசாரணை செசன்ஸ் கோர்ட்டில் நடைபெறும். மும்பை செசன்ஸ் கோர்ட்டில் வரும் 11-ந்தேதி நடிகர் சல்மான்கான் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் இதை எதிர்த்து மும்பை உயர்நீதிமன்றத்தில் மனு செய்ய நடிகர் சல்மான் கான் முடிவு செய்துள்ளார்.
மான் வேட்டை வழக்கு
1988-ல் ராஜஸ்தானில் படப்பிடிப்புக்குச் சென்ற போது மான் வேட்டையாடிய வழக்கில் வசமாக சிக்கியுள்ளார் சல்மான் கான். வனவிலங்குகள் சட்டப்படி குற்றம் நிரூபிக்கப்பட்டால் 3 வருடம் சிறைத் தண்டனை கிடைக்கும். விரைவில் இந்த வழக்கில் தீர்ப்பு வெளியாக உள்ளது. இந்த நிலையில் கார்விபத்து வழக்கும் சல்மான் கானுக்கு சிக்கலாக உருவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment