சென்னை: தனது பரதேசிக்கு எதிர் பார்க்கப்பட்ட விருதுகள் கிடைக்கவில்லையே என்ற அதிர்ச்சி டைரக்டர் பாலாவுக்கும் இருக்கிறதாம். ஆனால் மிகவும் மனதுடைந்தது அதர்வாவும், செழியனும் தானாம்.
பாலா படத்தில் நடித்தால், நிச்சயம் விருது இருக்கும் என்பது நடிகர்களின் கருத்து. இதை ஏற்கனவே, சூர்யாவும், விக்ரமும், ஆர்யாவும் நிரூபித்திருக்கிறார்கள். அதர்வாவுக்கும் விருது கனவு இருந்தது.
ஆனால், தமிழைப் பொறுத்தவரை சிறந்த பிராந்திய மொழி திரைப்படத்துக்கான விருது பாலாஜி சக்திவேலின் வழக்கு எண் 18/9 படத்துக்கு கிடைத்துள்ளது. சிறந்த ஒப்பனைக்கான விருதையும் இப்படம் தட்டிச் சென்றுள்ளது.விஸ்வரூபம் சிறந்த நடனம், சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு என்ற இரு பிரிவுகளில் விருது பெற்றுள்ளது.
சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இயக்கம், சிறந்த ஒளிப்பதிவு என அனைத்து வித விருதுகளையும் வழங்கிட உச்சபட்ச தகுதிகள் இருந்தும் ஏனோ, தேசிய விருதுகள் பரதேசிக்குக் கிடைக்காமல் போய்விட்டன.
சிறந்த உடை அலங்காரம் என்கிற பிரிவில் மட்டுமே பரதேசிக்கு விருது கிடைத்திருக்கிறது. இயக்கம், ஒளிப்பதிவு, வசனம், நடிப்பு என நான்கு பிரிவுகளில் பரதேசிக்கு விருதுகள் எதிர்பார்க்கப்பட்டன.
பாலாவைக் காட்டிலும் விருது அறிவிப்பை மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்த இருவர் அதர்வாவும், ஒளிப்பதிவாளர் செழியனும்தான். விருது அறிவிப்பில் தனது பெயர் இல்லை எனத் தெரிந்ததும் கதறித் அழுதிருக்கிறார் அதர்வா. செழியனுக்கும் விருது அறிவிப்பில் சொல்ல முடியாத அளவுக்கு வருத்தமாம்.
தமிழ்ப் படங்கள் விருது விவகாரங்களில் புறக்கணிக்கப்படுவது தொடர்ந்து நிகழும் ஒன்று தான். ஆனாலும், அனைத்து விதங்களிலும் மிக நேர்த்தியாக உருவாக்கப்பட்ட பரதேசி படம் பெரிய அளவில் விருதுகளை வாங்காதது அனுராக் காஸ்யப் உள்ளிட்ட இந்தி இயக்குனர்களையே அதிர வைத்திருக்கிறது.
சரி, விருது அறிவிப்பின்போது பாலாவின் மனநிலை எப்படி இருந்ததாம்...?
''பத்துக்கும் மேற்பட்ட விருதுகளை பரதேசி வாங்கும்னு பாலா சார் நம்பிக்கையோடு இருந்தார். விருது அறிவிப்பில் பரதேசிக்கு முக்கியத்துவம் இல்லைன்னு தெரிஞ்ச உடனே, 'செழியனுக்காவது கிடைச்சிருக்கணுமே...' சொன்னார். அவ்வளவுதான்... அதற்குமேல விருது அறிவிப்பில் பாலா சார் பெரிசா ரியாக்ட் பண்ணிக்கலை." என்கிறார் உதவி இயக்குனர் ஒருவர்.
Post a Comment