கடல் பட நஷ்டத்துக்காக மணிரத்னத்திடமிருந்து நான் பணத்தை திரும்பக் கேட்கமாட்டேன் என்று இயக்குநர் லிங்குசாமி தெரிவித்துள்ளார்.
மணிரத்னம் இயக்கிய கடல் படத்தை கோவை, மதுரை, சென்னை ஆகிய மூன்று ஏரியாக்களில் வெளியிட்டது லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ். இந்த உரிமையை 6 கோடி கொடுத்து வாங்கியிருந்தார்கள்.
படம் வெளிவந்த பிறகு ஒரு கோடி மட்டுமே வசூலானதாகவும், ரூ 5 கோடி நஷ்டம் ஏற்பட்டதால் அதை மணிரத்னம் திருப்பித் தரவேண்டும் என லிங்குசாமியின் தம்பி சுபாஷ் சந்திர போஸ், போலீஸ் கமிஷனரை சந்தித்து மனு கொடுத்தார். இது பரபரப்பைக் கிளப்பியது. இந்த நிலையில் அதை மறுத்து லிங்குசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கை:
கடல் திரைப்படத்தின் விநியோக உரிமையை சென்னை, கோவை, மதுரை ஆகிய மூன்று ஏரியாக்களுக்கு வாங்கி வெளியிட்டது எங்களது திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம்.
இந்தப் படத்தை வாங்கியவர்கள் மணிரத்தினத்திடம் நஷ்ட ஈடு கேட்டு வருவதாக தொடர்ந்து செய்திகள் அடிபட்டு வருகிறது.
ஒரு படம் வெற்றி பெறுவது, தோல்வி அடைவது, லாபம், நஷ்டம் எல்லாம் நம் கையில் இல்லை.
மணி சார் மிகப்பெரும் கலைஞன். எனக்கு மானசீக குரு. அவருடைய பல படங்கள் எனக்கு இன்ஸ்பிரேஷனாக இருந்துள்ளது. அவரிடம் போய் உங்கள் படத்தை வாங்கினேன் நஷ்ட ஈடு கொடுங்கள் என்று சொல்லி எந்த சூழ்நிலையிலும் கேட்க மாட்டேன்.
இது சார்பாக நானோ என் அலுவலகத்தில் இருந்தோ யாரும் போக மாட்டோம் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு லிங்குசாமி அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
Post a Comment