சென்னை: பிலிம்சேம்பர் எனப்படும் தென்னிந்திய சினிமா வர்த்தக சபையின் கட்டிட வளாகத்தில் புதிய திரையரங்குகள் அமைக்க ரூ 1 கோடியை நன்கொடையாகக் கொடுத்து பிரமிக்க வைத்துள்ளனர் நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி.
சமீப காலமாக எங்கும் எதிலும் சூர்யாவின் பெயர்தான் நிறைந்து நிற்கிறது. மாணவர்களுக்கு கல்வி உதவி, ரசிகர்களுடன் சந்திப்பு, சமூக நலப்பணிகள், அடுத்தடுத்த புதிய படங்கள் என பரபரப்பாக செயல்பட்டு வருகிறார்.
இப்போது பிலிம்சேம்பர் வளாகத்தில் புதிய திரையரங்கம் கட்ட ரூ 1 கோடியை நன்கொடையாகக் கொடுத்திருக்கிறார், தன் தம்பி கார்த்தியுடன் இணைந்து.
அண்ணா சாலையில் உள்ள பிலிம்சேம்பர் வளாகத்தில் ஏற்கெனவே ஒரு பகுதி புதுப்பிக்கப்பட்டு கட்டப்பட்டுள்ளது.
இப்போது அடுத்த பகுதியை இடித்துவிட்டுக் கட்டப் போகிறார்கள். இந்தப் பகுதியில் ஒரு தியேட்டர் மற்றும் அதன் மாடியில் அலுவலகங்கள் உள்ளன. இவற்றை இடித்துவிட்டு, மூன்று புதிய திரையரங்குகளை கட்டப் போகிறார்கள்.
இதற்காகத்தான் சூர்யா - கார்த்தி அவ்வளவு பெரிய தொகையைக் கொடுத்துள்ளனர்.
இந்த திரையரங்குக்கு சூர்யா மற்றும் கார்த்தியின் பெயரையே சூட்டிவிடலாம் என பிலிம்சேம்பர் நிர்வாகிகள் முடிவு செய்தபோது, எங்கள் பெயரை விட எங்கள் தாய் - தந்தை பெயரைச் சூட்டுங்கள் என்று கூறிவிட்டார்களாம் சூர்யாவும் கார்த்தியும்.
எனவே புதிதாகக் கட்டப்படும் 3ல் ஒரு திரையரங்குக்கு சூர்யா, கார்த்தி ஆகியோரின் தந்தை சிவகுமார், தாயார் லட்சுமி ஆகியோரின் பெயர்கள் சூட்டப்படும், என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment