நடிப்பு: அர்ஜூன், சேரன், விமல், பானு, சுர்வின், லாசினி, தம்பி ராமையா
இசை: யுவன் சங்கர் ராஜா
ஒளிப்பதிவு: போஜன் கே தினேஷ்
தயாரிப்பு: பாரத்குமார், மகேந்திரன், மஹா அஜய் பிரசாத்
இயக்கம்: எஸ்எம் வசந்த்
மீண்டும் ஒரு காதல் கதையுடன் களமிறங்கியிருக்கிறார் இயக்குநர் வசந்த். மூன்று ஜோடிகளின் காதல்களை ஒரு தொகுப்பாக, கிட்டத்தட்ட நாவல் மாதிரி தந்திருக்கிறார். ஆனால் அதை சுவாரஸ்யமாக அவரால் தர முடியாமல் போனதுதான் படத்தின் பிரச்சினை!
மலையும் மலை சார்ந்த இடமுமான ஊட்டியில் சாப்ட்வேர் பணியிலிருக்கும் விமல், சக பணியாளர் லாசினியை விழுந்து விழுந்து காதலிக்கிறார். ஆனால் கடைசியில் காதலிலிருந்து விலகிக் கொள்கிறார். அது ஏன் என்ற கேள்விக்கு, தான் சந்தித்த இரண்டு ப்ளாஷ்பேக் காதல்களைச் சொல்கிறார்.
அதில் ஒன்று 'கடலும் கடல் சார்ந்த இடமுமான' நாகர்கோயிலில் வசிக்கும் என்ஜிஓ சேரன் - பிஸியோதெரபிஸ்ட் பானு காதல் கதை.
அடுத்தது, 'நிலமும் நிலம் சார்ந்த இடமுமான' சென்னையைச் சேர்ந்த நீச்சல் பயிற்சியாளர் அர்ஜூன் - வீராங்கனை சுர்வின் காதல். இந்த மூன்று காதல்களையும் ஒரு நாவலாக எழுதி வெளியிடும் நிகழ்ச்சியில், அந்த காதல்களின் க்ளைமாக்ஸை சொல்கிறார் விமல். அதை மூன்று மணிநேர கொட்டாவிகளைச் சகித்துக் கொண்டு தியேட்டரில் பார்த்துக் கொள்ளுங்கள்.
ஒவ்வொரு காதலுக்கும் நீள நீளமான வர்ணனைகள்... காட்சியமைப்புகள். அவை சுவாரஸ்யமாக இருந்தாலாவது பார்க்கலாம். வசனங்களுக்கும் சில சீரியஸ் காட்சிகளுக்கும் கண்டமேனிக்கு சிரித்து வைக்கிறார்கள் பார்வையாளர்கள்.
உதாரணம்... இரவில் யாருக்கும் தெரியாமல் நீச்சல் பயிற்சிக்குப் போகும் சுர்வின் காட்சியமைப்பு.
இந்த மூன்று காதல்களில் பரவாயில்லை எனும் அளவுக்கு பக்குவமாக அமைந்திருப்பது சேரன் - பானு கதைதான். முதல் முறையாக அளவோடு நடித்திருக்கிறார் சேரன். பானுவின் தோற்றம், நடிப்பு இரண்டுமே அழகு!
அர்ஜூன் - சுர்வின் காதலில் ஈர்ப்பே இல்லை. 110 மீட்டர் 51 செகன்ட்ஸ் என்ற அர்ஜூனின் இலக்குதானே அவர்கள் காதலுக்கு வில்லனாகிறது?
விமல் - லாசினி காதல்... ப்ச்... அட, நடிகர்களாகக் கூட அந்த இருவரும் தேறவில்லை.
இந்தப் படத்தின் பெரும் பலம் யுவன் சங்கர் ராஜாவின் அசத்தலான பாடல்கள் மற்றும் சுண்டியிழுக்கும் பின்னணி இசை. காதலுக்கு ஒரு தீம் மியூசிக் போட்டிருக்கிறார் பாருங்கள்... ஆஹா!
அடுத்தது, போஜன் கே தினேஷின் ஒளிப்பதிவு. சமீப கால படங்களில் ரசிக்க வைத்த காட்சிப் பதிவு இதுதான்.
இயக்குநர் வசந்த் வித்தியாசமாக சினிமா எடுக்க பிரயாசைப்பட்டிருக்கிறார். ஆனால் ஆமை வேகம், சுவாரஸ்யம் குறைந்த காட்சியமைப்புகள் அவரது முயற்சியை பலிகொண்டுவிட்டன!
-எஸ்எஸ்
+ comments + 2 comments
ARJUN to retire from tamil films
SERAN can act only in serious role and he is a better director than actor
Vimal can act only in rurral subjects and can not give variety roles he can do only comedy
Vasanth is a past director
WHY FILMS WILL NOT BE A FLOP
total flop movie
Post a Comment