வீட்டு வேலையே எனக்குத் தெரியாது. ஆனால் அடித்தளம் படத்தில் தண்ணீர் குடத்தை தூக்கும் காட்சியில் இடுப்புல குடமே நிக்கல, என்றார் படத்தின் நாயகி ஆருஷி.
படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ஆருஷி தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். அவர் கூறுகையில், "முதலில் கதையே சொல்லாமல்தான் என்னை கேமிராவுக்கு முன்னால் நிற்க வைத்தார் டைரக்டர் இளங்கண்ணன். ஒரு அழுக்கு புடவையை கொடுத்தார்.
'ஐயோ, இதை போய் கட்டணுமா' என்று நினைத்துக் கொண்டே கட்டினேன். டல் மேக்கப் போட்டாங்க. நிறைய செங்கல்லை எடுத்து தலையில் அடுக்கினாங்க. ஒரு வேலையும் செய்யாமல் செல்லமா வளர்ந்தவள் நான். அதன் கஷ்டம் அப்போதுதான் புரிந்தது. அவர் சொல்லிக் கொடுத்ததை நான் சரியாக செய்த பிறகுதான் எனக்கு இந்த படத்தின் கதையையே சொன்னார்.
படப்பிடிப்பு சின்ன குடிசையில் நடந்தது. அந்த வீட்டை நானே பெருக்கி, நானே பாத்திரம் தேய்த்து வேலை செய்வேன். இதற்கு முன் வீட்டில் ஒரு வேலையும் நான் செய்தது இல்லை. அங்கே எல்லா வேலைகளையும் நானே செய்யும்போது கூட பொறுத்துக் கொண்டேன். ஆனால் தண்ணி எடுக்க குடத்தை இடுப்பில் வைத்தபோதுதான் படாத பாடு பட்டுவிட்டேன்.
-குடம் இடுப்பிலேயே நிற்க மாட்டேங்குது. குடத்தின் மேல் கான்சன்ட்ரேஷன் போச்சுன்னா டயலாக் மறந்துடுது. டயலாக்கை மனசில் வைத்துக் கொண்டால் குடம் தடுமாறுது. எப்படியோ கஷ்டப்பட்டு இந்த படத்தில் நடித்தேன். அதற்கான பலன் கைகூடி வரும்னு நம்புறேன்," என்றார் ஆருஷி.
விழாவில் கலந்து கொண்டு படத்தின் குறுந்தகட்டை பெற்றுக் கொண்ட கட்டிட தொழிலாளர்களுக்கு எஸ்.சேதுபதிராஜன் உடைகள் மற்றும் உதவித் தொகையை வழங்கினார்.
விழாவில் படத்தின் கதாநாயகன் அங்காடித்தெரு மகேஷ், இசையமைப்பாளர் தாஜ்நூர், கவிஞர் நா.முத்துக்குமார், ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம், அம்மா கிரியேஷன்ஸ் சிவா ஆகியோர் கலந்து கொண்டார்கள். இயக்குனர் பி.எல்.ஆர்.இளங்கண்ணன் நன்றி கூறினார்.
Post a Comment