திருவனந்தபுரம்: கேரள சோலார் பேனல் மோசடி வழக்கில் நடிகை ஷாலு மேனனிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
கேரளாவில் சோலார் பேனல் மோசடி விவகாரம் தொடர்பாக தொழில் அதிபர் பிஜூ ராதாகிருஷ்ணன், அவரது மனைவி சரிதா நாயர் ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இதில் பிஜூ ராதாகிருஷ்ணன் மீது அவரது முதல் மனைவியை கொலை செய்ததாகவும் புகார் எழுந்துள்ளது. அது தொடர்பாகவும் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விவகாரத்தில் கேரள முதல்வர் உம்மன்சாண்டியின் பாதுகாவலர் உள்பட 3 அரசு ஊழியர்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளனர். உம்மன் சாண்டி ராஜினாமா செய்யக்கோரி எதிர்க்கட்சி தலைவர் அச்சுதானந்தன் தலைமையில் கம்யூனிஸ்டு கட்சியினர் தொடர் போராட்டத்திலும் ஈடுபட்டு வருகிறார்கள்.
தொழில் அதிபர் பிஜூ ராதாகிருஷ்ணனுடன் நடிகை ஷாலு மேனனுக்கு தொடர்பு இருப்பதாக புகார் கூறப்பட்டது. அதனை ஆரம்பத்தில் ஷாலு மேனன் மறுத்து இருந்தார்.
இந்த நிலையில் நடிகை ஷாலுமேனனை விசாரணைக்கு ஆஜராகும்படி போலீசார் சம்மன் அனுப்பினர்.
இதைத்தொடர்ந்து நேற்று மாலை 4.15 மணிக்கு திருவல்லா டி.எஸ்.பி. அலுவலகத்துக்கு தனது தாயார் கலா தேவியுடன் சென்று ஷாலு மேனன் ஆஜரானார்.
அவரிடம் கூடுதல் டி.ஜ.பி. ஹேமச்சந்திரன், திருவனந்தபுரம் போலீஸ் கமிஷனர் பிரஜி ஜேக்கப், கோட்டயம் டி.எஸ்.பி. அஜித் ஆகியோர் 3 மணி நேரம் விசாரணை நடத்தினர். அவரது தாயார் கலா தேவியிடமும் போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணைக்குப் பின் வெளியில் வந்த ஷாலு மேனன் பத்திரிகையாளர்களின் கேள்விகளைக் கண்டு கொள்ளாமல் காரில் ஏறிச் சென்றார்.
Post a Comment