சென்னை: குட்டிப் புலி படத்தில் என் பாடலை முன் அனுமித பெறாமல் பயன்படுத்தியுள்ளனர் என்று வருத்தப்பட்டுள்ளார் இசைஞானி இளையராஜா.
இன்றைக்கு வரும் பெரும்பாலான படங்களில் வேறு இசையமைப்பாளர் இசையமைத்திருந்தாலும்கூட, பெருமளவு இளையராஜாவின் பாடல்களையும் பின்னணி இசையையும் எடுத்தாள்கின்றனர்.
சிலர் அனுமதி பெற்று அப்படிச் செய்கிறார்கள். பலர் கேட்பதே இல்லை.
சுப்பிரமணியபுரம் படத்தில் இளையராஜாவின் சிறுபொன்மணி அசையும்... என்ற புகழ்பெற்ற பாடலை ஒரு காட்சியில் அப்படியே பயன்படுத்தியிருந்தார் சசிகுமார். மேலும் அந்தப் படத்தில் இடம் பெற்ற பிரதான பாடலான கண்கள் இரண்டால்..., அப்படியே கவிக்குயிலில் வந்த சின்னக் கண்ணன் அழைக்கிறான் பாடலின் அப்பட்டமான நகலாகும்.
அதற்கடுத்து நாடோடிகள், சுந்தரபாண்டியன் போன்ற படங்களிலும் கூட ஆங்காங்கே இளையராஜா இசையை எடுத்தாண்டனர்.
சமீபத்தில் சசிகுமார் நடித்து திரைக்கு வந்துள்ள குட்டிப் புலி படத்தில், இன்னும் ஒரு படி மேலே போய், ஒரு முழு டூயட்டுக்கும் இளையராஜாவின் பாடலை பயன்படுத்தியுள்ளனர். ரஜினியின் கழுகு படத்தில் இடம்பெற்ற மிகப் புகழ்பெற்ற "பொன்னோவியம் கண்டேனம்மா எங்கெங்கும்...' என்ற பாடலை அப்படியே பயன்படுத்திக் கொண்டுள்ளனர். மேலும் பல இடங்களில் பின்னணி இசைக்கப் பதில் இளையராஜா பாடல்களையே உபயோகித்துள்ளனர். இந்தப் பாடல்கள் இடம்பெற்ற காட்சிகளை ரசிகர்கள் வெகுவாக ரசிக்கின்றனர்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள இளையராஜா, 'குட்டிப்புலி படத்தில் அந்தப் பாடலை பயன்படுத்திக் கொள்ள என்னிடம் எந்த முன் அனுமதியும் கேட்கவில்லை. சம்பந்தப்பட்டவர்கள் கேட்டிக்கலாம்..' என்று வருத்தப்பட்டுள்ளார்.
இளையராஜா இசையமைத்த அனைத்துப் படங்களின் இசை - பாடல்கள் உரிமையும் அவரிடமே உள்ளது குறிப்பிடத்தக்கது.
Post a Comment