சென்னை: நடிகை ஸ்ரீப்ரியா தான் இயக்கும் புதிய படத்துக்கு மாலினி 22 பாளையங்கோட்டை என்று தலைப்பிட்டுள்ளார். இந்தப் படம் தெலுங்கிலும் வெளியாகிறது.
எழுபதுகளின் பிற்பகுதியில் முன்னணி நடிகையாகத் திகழ்ந்தவர் ஸ்ரீப்ரியா. ரஜினியுடன் அதிகப் படங்களில் நடித்தவர்களில் ஒருவர். தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் சில படங்களில் நடித்த ராஜ்குமாரை திருமணம் செய்து செட்டிலாகிவிட்டார். ஆனாலும் அவ்வப்போது படங்களில் தலை காட்டி வந்த ஸ்ரீப்ரியா, இப்போது படம் இயக்குகிறார்.
இந்தப் படத்தை அவரது கணவர் ராஜ்குமாரே தயாரிக்கிறார்.
மலையாளத்தில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய '22 பீமேல் கோட்டயம்' என்ற படத்தைத்தான் தமிழ் மற்றும் தெலுங்கில் இயக்குகிறார். இப்படத்திற்கு தமிழில் 'மாலினி 22 பாளையங்கோட்டை' என்று பெயரிட்டுள்ளர்.
இதில் கதாநாயகியாக நித்யா மேனன், புதுமுக நாயகனாக கிரிஷ் இணைந்து நடிக்க மற்றும் கோட்டா சீனிவாசராவ், கோவை சரளா மற்றும் பலர் நடிக்கிறார்கள். இந்தபடத்தின் படப்பிடிப்பு வரும் 15-ந்தேதி தொடங்க உள்ளது.
இப்படத்துக்கான பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று வாணிமகாலில் நடந்தது. படம் குறித்து ஸ்ரீப்ரியா கூறுகையில், "இந்தப் படம் மலையாளத்தில் பார்த்தபோது எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. இப்படம் மூலம் விழிப்புணர்வு ஏற்படும் என்ற நம்பிக்கையுடன் ரீமேக் செய்கிறேன்.
அதனால்தான் எல்லா மொழிகளிலும் வெளிவர வேண்டும் என்று விரும்புகிறேன். இதனால் முதலில் தமிழ் மற்றும் தெலுங்கில் கணவர் தயாரிக்க நான் இயக்குகிறேன். நித்யா மேனன் நாயகியாக நடிக்கிறார். புதுமுகம் கிரீஷ் ஹீரோ. நித்யா மேனன் கண்கள் எனக்கு ரொம்பப் பிடிக்கும். ஒரு நடிகைக்கு கண்கள் பெரிதாக இருந்தாலே பாதி நடிப்பு முடிந்துவிட்டது என நினைப்பவள் நான்...,'' என்றார்.
Post a Comment