பழம்பெரும் நடிகர் ‘எம்எல்ஏ’ தங்கராஜ் மாரடைப்பால் மரணம்

|

பழம்பெரும் நடிகர் ‘எம்எல்ஏ’ தங்கராஜ் மாரடைப்பால் மரணம்

சென்னை: பழம்பெரும் நடிகர் எம்.எல்.ஏ. தங்கராஜ் நேற்று மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 80.

சினிமாக்களில் எம்.எல்.ஏ வேடமா? கூப்பிடு தங்கராஜை என்று கூறும் அளவிற்கு பிரபலமானவர் தங்கராஜ். அதேபோல் சீரியல்களிலும் எம்.எல்.ஏ வேடம்தான் அவருக்கு மிகபொருத்தமாக அமைந்து வந்தது. இதற்கு காரணம் அவர் எம்.ஜி. ஆருடன் அவர் நடித்த ‘பல்லாண்டு வாழ்க' படத்தில், எம்.எல்.ஏ வேடம் ஏற்றிருந்தார். இதனால் அவரை எம்.எல்.ஏ. தங்கராஜ் என்று பாசமாக கூப்பிட்டனர்.

கும்பகோணத்தில் பிறந்த தங்கராஜ், முதலில் மேடை நாடகங்களில் நடித்தார். பிறகு ‘மாங்கல்யம்' என்ற படத்தில் அறிமுகமானார்.

தொடர்ந்து ‘ராஜராஜசோழன்', ‘திசை மாறிய பறவைகள்', ‘கருடா சவுக்கியமா?', ‘சுப்ரபாதம்' உட்பட 300க்கு மேற்பட்ட படங்களில் நடித்தார். அஜீத் நடிப்பில் ரிலீசான ‘ராஜா', தங்கராஜ் நடித்த கடைசி படமாகும்.

மேலும், ஏராளமான டி.வி தொடர்களிலும் அவர் நடித்துள்ளார். அவருக்கு சாந்தா என்ற மனைவியும், சுமதி என்ற மகளும் உள்ளனர். சுமதி சினிமாவிலும், டி.வி தொடரிலும் நடிக்கிறார்.

சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்த தங்கராஜ், நேற்று மதியம் 1 மணியளவில் கடுமையான மூச்சுத்திணறல் காரணமாக சிரமப்பட்டார். இதையடுத்து மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். நந்தனம் வீட்டில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது. தங்கராஜின் உடல் இன்று மதியம் கண்ணம்மாபேட்டை சுடுகாட்டில் தகனம் செய்யப்படுகிறது.

 

Post a Comment