சீமான் கதையைக் காப்பியடித்த லிங்குசாமி- இயக்குநர் சங்கத்தில் பஞ்சாயத்து!

|

சீமான் கதையைக் காப்பியடித்த லிங்குசாமி- இயக்குநர் சங்கத்தில் பஞ்சாயத்து!

சென்னை: தன் கதையைக் காப்பியடித்துவிட்டார் இயக்குநர் லிங்குசாமி என இயக்குநரும் நாம் தமிழர் கட்சித் தலைவருமான சீமான் இயக்குநர் சங்கத்தில் புகார் தந்துள்ளார்.

சீமான் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கவிருந்த பகலவன் கதையில் இப்போது ஜெயம் ரவி நடிக்கிறார்.

நேர்மையான டாக்டர் ஒருவர் சமூக அநியாயங்களைத் தட்டிக் கேட்க முடிவு செய்கிறார். வெறும் டாக்டராக இருந்தால் அது முடியாது என்பதால், ஐபிஎஸ் அதிகாரியாகி, நினைத்ததை முடிக்கிறார்.

நடிகர் சூர்யாவை வைத்து தான் இயக்கும் படத்துக்கு இந்தக் கதையைத்தான் அப்படியே காப்பியடித்திருக்கிறாராம் லிங்குசாமி.

லிங்குசாமி - சூர்யா படத்தின் கதை இதுதான் என்பது தெரிந்ததும், இயக்குநர் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளார் இயக்குநர் சீமான். சங்க நிர்வாகிகள் இருதரப்பிலும் விசாரித்துள்ளனர்.

அதில் சீமான் கதையைத்தான் லிங்குசாமி சூர்யாவுக்குப் பயன்படுத்தப் போகிறார் என்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

இயக்குநர் சீமான் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு வெளியான தனது தம்பி படத்திலேயே இந்தக் கதைக்கான முடிச்சை வைத்திருப்பார். "இந்த சமூகத்துக்கு சாதாரண மனுசனா இருந்து எதையும் செய்ய முடியாது. அதிகாரத்துக்கு வா. வந்து செய். நல்லா படிச்சு கலெக்டராகு, போலீசாய்க்கோ... நீ நினைச்சதை அப்பதான் செய்ய முடியும்' என மாதவன் பேசுவதுபோல ஒரு காட்சியே வைத்திருப்பார் சீமான். அதற்கு அடுத்த ஆண்டு அவர் உருவாக்கிய நான்கு கதைகளில் ஒன்றுதான் இந்த பகலவன் என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே கதையைக் காப்பியடித்த லிங்குசாமி, இப்போது சூர்யாவுக்காக வேறு கதையை யோசிக்க வேண்டி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

 

Post a Comment