சென்னை: விஜய்யின் தலைவா படத்தை வெளியிடுவது குறித்து நேற்று இரவெல்லாம் விவாதம் நடத்திய விநியோகஸ்தர்களும் திரையரங்கு உரிமையாளர்களும் கடைசியில் படத்தைத் திரையிடும் முடிவைக் கைவிட்டனர்.
விஜய்யின் ‘தலைவா' படம் ரிலீசாவதில் சிக்கல் தொடர்கிறது. நேற்று தமிழகம் முழுவதும் இப்படம் வெளியாக இருந்தது. தியேட்டர்களுக்கு வெடி குண்டு மிரட்டல்கள் வந்ததால் படத்தை நிறுத்தினர். விஜய் ரசிகர்களில் சிலர் இதனால் ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபட்டனர்.
ஆனால் கேரளா, ஆந்திரா, கர்நாடகம் மற்றும் மும்பையில் ‘தலைவா' படம் திட்டமிட்டபடி நேற்று ரிலீசானது. வெளிநாடுகளிலும் வெளியாகி விமர்சனங்கள் வந்துவிட்டன.
இதற்கிடையில் போலீஸ் டி.ஜி.பி. ராமானுஜம் தலைவா படம் வெளியாவதை தள்ளி வைக்குமாறு தமிழக காவல் துறை கோரவோ அல்லது ஆலோசனை கூறவோ இல்லை என்று அறிக்கை வெளியிட்டார்.
எனவே ‘தலைவா' படம் இன்று வெளியாகும் என எதிர்பார்த்தனர். டி.ஜி.பி. அறிக்கையை தொடர்ந்து தியேட்டர் அதிபர்களும், விநியோகஸ்தர்களும் அவசர கூட்டம் நடத்தினார்கள். நள்ளிரவு வரை விவாதித்தார்கள்.
படத்தை க்யூபில் வெளியிடுவதற்கான கீ கூட கொடுக்கப்பட்டுவிட்டது. சில திரையரங்குகளில் விடியும் வரை கூட காத்திருக்காமல் படத்தை திரையிட்டும் விட்டனர்.
இந்த நிலையில் தயாரிப்பாளர்கள் - விநியோகஸ்தர்கள் - தியேட்டர் உரிமையாளர்களிடைடே ஒருமித்த கருத்து ஏற்படவில்லை.
தலைவா வெளியாகாது என்பது தெரிந்துவிட்டதால், பல தியேட்டர்களை ஐந்து ஐந்து ஐந்து படத்துக்கும், பெரும்பான்மையான அரங்குகள் சென்னை எக்ஸ்பிரசுக்கும் ஒதுக்கப்பட்டது ‘தலைவா'வுக்கு மேலும் சிக்கலை உண்டாக்கிவிட்டது.
மேலும் ‘தலைவா' படத்துக்கு வரி விலக்கு கிடைக்காதது பற்றியும் தியேட்டர் அதிபர்கள் சுட்டி காட்டினர். தணிக்கை குழு தலைவா படத்துக்கு ‘யு' சான்றிதழ் அளித்துள்ளது. வரி விலக்கு குழுவினர் படத்தை பார்த்து அதிகமான ஆங்கில வார்த்தைகள், வன்முறைகி காட்சிகளைக் காரணம் காட்டி வரி விலக்கு அளிக்க மறுத்துவிட்டது அரசு.
இதையெல்லாம் விட முக்கியம் அரசுக்கு எதிரான படம் என்ற முத்திரை இன்னும் இந்தப் படத்தின் மீதிருந்து விலக்கப்படவில்லை என்பதைச் சுட்டிக் காட்டிய திரையரங்க உரிமையாளர்கள் தலைவாவை இப்போதைக்கு வெளியிட முடியாது என கைவிரித்துவிட்டனர்.
Post a Comment