பெங்களூரு: பாகிஸ்தான் நடிகை வீணா மாலிக் நடித்த சில்க் ஸ்மிதா வாழ்க்கை வரலாறு படத்துக்கு கர்நாடக நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
இந்தி, மலையாளம், தமிழில் சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கைக் கதை படமாக வெளி வந்துவிட்டது.
அடுத்து கன்னடத்தில் சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை 'சில்க் சக்கத் ஹாட்' என்ற பெயரில் படமாக்கியுள்ளனர். இதில் சில்க்ஸ்மிதா வேடத்தில் பாகிஸ்தான் நடிகை வீணா மாலிக் படு கவர்ச்சியாக நடித்துள்ளார்.
கடந்த வாரம் இப்படம் கர்நாடகா முழுவதும் ரிலீசானது. இதற்கு ஸ்ரீராம சேனா அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். எதிரி நாடான பாகிஸ்தானைச் சேர்ந்த வீணா மாலிக் நடித்துள்ளதால் இப்படத்தை திரையிடக் கூடாது என போராட்டங்கள் நடத்தினர். மங்களூர், மைசூர், பெல்காம் பகுதிகளில் தியேட்டர்களில் புகுந்தும் ரகளையில் ஈடுபட்டனர். தியேட்டர் அதிபர்களும் மிரட்டப்பட்டார்கள்.
படத்தில் ஏராளமான ஆபாச காட்சிகள் இருப்பதாகக் கூறி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சில்க் சக்கத் ஹாட் படத்துக்கு செப்டம்பர் 10-ந்தேதி வரை தடை விதித்து தீர்ப்பு கூறினார்.
இந்தத் தீர்ப்பால் அதிர்ச்சியடைந்த படத்தின் இயக்குநர் திரிசூல், "பாகிஸ்தான் நடிகை நடித்தார் என்பதற்காக எனது படத்தை எதிர்ப்பதில் எந்த நியாயமும் இல்லை," என்றார்.
Post a Comment