நடிகைகளின் சம்பளத்தில் 20 சதவீதம் பிடித்தம்- கேயார் அறிவிப்பு

|

நடிகைகளின் சம்பளத்தில் 20 சதவீதம் பிடித்தம்- கேயார் அறிவிப்பு

சென்னை: படங்களின் விழாக்கள், விளம்பர நிகழ்ச்சிகளுக்கு வராத நடிகைகள் மீது நடவடிக்கை எடுக்கும் விதமாக, இனி அவர்களின் சம்பளத்தில் 20 சதவீதம் வரை பிடித்துக் கொள்ளப்படும் என தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கேயார் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

சமீப காலமாகவே, படங்களின் விழாக்கள் மற்றும் விளம்பர நிகழ்ச்சிகளில் கதாநாயகிகள் மட்டும் பங்கேற்காமல் தவிர்ப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். இதனால் சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர்கள் புலம்புகின்றனர்.

ஆல் இன் ஆல் அழகுராஜா, கோலாகலம், உயிர்மொழி போன்ற படங்களின் விழாக்களில் தொடர்ந்து அவற்றின் நாயகிகள் தவிர்த்துவிட்டனர்.

இதைத் தொடர்ந்து, விழாக்களுக்கு வராத நடிகைகள் சம்பளத்தில் 20 சதவீதத்தை பிடித்தம் செய்து வைத்துக் கொள்வது என்றும் படங்களின் பாடல் வெளியீட்டு விழாவில் பங்கேற்கும் நடிகைகளுக்கு மட்டும் அந்த தொகையை திருப்பி கொடுப்பது என்றும் தயாரிப்பாளர் சங்கம் முடிவு செய்துள்ளது.

இதன் மூலம் ரூ.1 கோடி சம்பளம் வாங்கும் நடிகைகள் ரூ.20 லட்சத்தை குறைத்து வாங்க வேண்டி இருக்கும். பட விழாக்களுக்கு வராமல் போனால் அந்த தொகையை இழக்க வேண்டி வரும்.

இப்போது த்ரிஷா, காஜல் அகர்வால், தமன்னா, அமலா பால் போன்ற முன்னணி நாயகிகள் நடித்து வரும் பெரிய படங்களில், அவர்களுக்கு தரவேண்டிய சம்பளத்தில் 20 சதவீதத்தை படம் வெளியாகும் வரை தராமல் நிறுத்த முடிவு செய்துள்ளனர்.

இது குறித்து தயாரிப்பாளர் சங்க தலைவர் கேயார் கூறுகையில், "நடிகைகள் படங்களின் பாடல் வெளியீட்டு விழாவுக்கும், பத்திரிகையாளர் சந்திப்புகளுக்கும் வருவது இல்லை என்று தயாரிப்பாளர் பலர் புகார் அளித்துள்ளனர். எனவே நடிகைகளுக்கு இனி முழு சம்பள தொகையையும் கொடுப்பது இல்லை என்று தயாரிப்பாளர் சங்கம் முடிவு எடுத்து உள்ளது.

20 சதவீதம் சம்பளத்தை பிடித்தம் செய்து பாடல் வெளியீட்டு விழாவுக்கு வந்த பிறகு அதில் 10 சதவீதத்தை கொடுப்பது என்றும், மீதி 10 சதவீதத்தை படத்தை விளம்பரபடுத்தும் நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பிறகு கொடுப்பது என்றும் முடிவு எடுத்துள்ளோம்.

நடிகைகளை அவர்களின் படவிழாக்களுக்கு போக வேண்டாம் என தடுக்கும் மேனேஜர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்," என்றார்.

 

Post a Comment