தமிழகத்தின் அத்தனை அரங்குகளும் கோச்சடையானுக்கே!

|

சென்னை: பொங்கல் ஸ்பெஷலாக வரும் கோச்சடையானுக்காக தமிழகத்தின் பெரும்பாலான அரங்குகளும் இப்போதே ரிசர்வ் செய்யப்பட்டுள்ளன.

ரஜினி படம் வெளியான சில வாரங்களுக்குப் பிறகே மற்ற படங்களுக்கு அரங்குகள் ஒதுக்க முடியும் என திரையரங்க உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழ் சினிமாவைப் பொருத்தவரை, ரஜினி படங்கள் வெளியாகும் தேதிதான் நிஜமான பண்டிகைக் காலம். தியேட்டரின் டிக்கெட் கவுண்டர் தொடங்கி, வாகனங்களுக்கு டோக்கன் கொடுப்பவர், திண்பண்டம் விற்பவர் என அத்தனை பேருக்கும் லாபம் தருவது ரஜினியின் படம் மட்டுமே.

தமிழகத்தின் அத்தனை அரங்குகளும் கோச்சடையானுக்கே!

முன்பு சிவாஜி படத்தோடு ஒரு இந்திப் படம் வெளியானபோது, 'சிவாஜி படத்தின் வாகன நிறுத்தக் கட்டணத்தோடு வேண்டுமானால் இந்தப் படத்தின் வசூலை ஒப்பிடலாம்' என பிரபல பாலிவுட் விமர்சகர் தரண் ஆதர்ஷ் எழுதியது நினைவிருக்கலாம்!

எனவே ரஜினியின் படங்களுக்கே திரையரங்க உரிமையாளர்கள் முன்னுரிமை தருவதில் வியப்பில்லை.

இந்தப் பொங்கலுக்கு அஜீத் நடித்த வீரம், விஜய் நடித்த ஜில்லா போன்ற படங்கள் வருவதாக இருந்தன. கமலின் விஸ்வரூபம் 2 கூட பொங்கலுக்கு வெளியாகும் என்றார்கள்.

ஆனால் கோச்சடையான் ரிலீஸ் தேதி அறிவிப்பு, அத்தனை பேரையும் ஸ்தம்பிக்க வைத்துவிட்டது என்றால் மிகையல்ல.

திரையரங்க உரிமையாளர்களும், தங்கள் அரங்குகளை ரஜினியின் கோச்சடையானுக்கே ஒதுக்கியுள்ளனர். குறிப்பாக மல்டிப்ளக்ஸ் அரங்குகள் அத்தனை திரைகளிலும் முதல் வாரம் முழுக்க கோச்சடையானை மட்டுமே திரையிட விருப்பம் தெரிவித்துள்ளனர்.

ஒற்றைத் திரை அரங்குகள் நிலை பற்றிச் சொல்லவே வேண்டாம். அவை அதிகபட்ச வசூல் பார்ப்பதே ரஜினி படங்கள் ரிலீசாகும்போதுதான்.

இப்போதுள்ள நிலையில், தமிழகத்தில் மட்டும் குறைந்தது 900 அரங்குகளில் கோச்சடையான் திரையிடப்படும் எனத் தெரிகிறது.

 

Post a Comment