நடிகர் திலீப் வீடு- அலுவலகங்களில் வணிகவரி அதிகாரிகள் ரெய்டு- ரொக்கம், வெளிநாட்டு கரன்சி பறிமுதல்!

|

நடிகர் திலீப் வீடு- அலுவலகங்களில் வணிகவரி அதிகாரிகள் ரெய்டு- ரொக்கம், வெளிநாட்டு கரன்சி பறிமுதல்!

கொச்சி: பிரபல மலையாள நடிகர் திலீப்பின் கொச்சி வீடு மற்ரும் அலுவலகங்களில் வணிக வரி அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அப்போது திலீப் வீட்டில் இருந்து ரூ.13 லட்சம் ரொக்கப் பணம் மற்றும் ஏராளமான ஆவணங்கள், வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக திகழ்பவர் திலீப்.

நிதி நிறுவனம்

திலீப்பின் சகோதரர் அனூர் கொச்சியில் தனியார் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் மீது தொடர் புகார்கள் வந்தன.

இதைத் தொடர்ந்து நேற்று இந்த நிதி நிறுவனத்தில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

திலீப் வீட்டில்

அடுத்து கொச்சியில் உள்ள திலீப்பின் வீடு மற்றும் அலுவலகத்தில் நேற்று வணிகவரி மற்றும் சேவை வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.

சோதனை நடந்து கொண்டிருந்த போதே திலீப்பை உடனடியாக வணிகவரித் துறை அலுவலகத்திற்கு விசாரணைக்கு வருமாறு அதிகாரிகள் கூறினர். அதற்கு திலீப் தனக்கு சில வேலைகள் இருப்பதால் விசாரணைக்கு வர முடியாது என்றும், தனக்கு அவகாசம் தர வேண்டும் என்றும் கேட்டார். ஆனால் அதிகாரிகள் அதற்கு மறுத்து விட்டனர்.

விசாரணை

இதையடுத்து திலீப் உடனடியாக வணிகவரித்துறை அலுவலகத்திற்கு சென்றார். அங்கு பல மணி நேரம் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இரவு 10 மணிக்குத் தான் விசாரணை முடிந்து அவர் வீட்டுக்கு திரும்பினார்.

அப்போது கூடியிருந்த செய்தியாளர்கள் முன்பு திலீப் பேசுகையில், "எனது வீட்டில் இருந்து ஏராளமான ரொக்கப் பணம் மற்றும் வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக வெளியான செய்திகள் எனக்கு மிகுந்த வேதனையை தருகிறது.

வெறும் 350 டாலர்கள்தான்

சாலக்குடியில் நான் கட்டி வரும் தியேட்டர் செலவுக்கு வங்கியில் இருந்து பணம் எடுத்து வைத்திருந்தேன். அதைத் தான் அதிகாரிகள் எடுத்தனர். அவர்களுக்கு உரிய விளக்கம் கொடுத்துள்ளேன். எனது மைத்துனர் அமெரிக்காவில் இருந்து வந்துள்ளார். அவர் கொடுத்த 350 அமெரிக்க டாலர்களைத்தான் அதிகாரிகள் எடுத்தனர். இதுதொடர்பாகவும் அதிகாரிகளிடம் விளக்கம் அளித்துள்ளேன்.

நான் கடந்த 18 ஆண்டுகளாக சினிமா உலகில் இருக்கிறேன். எனது வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம் போலத்தான். நான் எதையும் மறைத்தது கிடையாது," என்றார்.

 

Post a Comment