ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்ததாக வந்தது முழுக்க முழுக்க வதந்தி!- விஷால்

|

சென்னை: ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்ததாகவும், அக்கட்சியின் தமிழக தலைவராக நியமிக்கப்பட இருப்பதாகவும் தன்னைப் பற்றி வந்த செய்திகள் முழுக்க வதந்தி என்று தெரிவித்துள்ளார் விஷால்.

தமிழக ஆம் ஆத்மி கட்சி தலைவராக நடிகர் விஷால் நியமிக்கப்பட உள்ளதாக சில தினங்களாக பரபரப்பு செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.

அன்னா ஹசாரே ஊழலுக்கு எதிராக போராட்டம் துவங்கியபோது நடிகர், நடிகைகள் பலர் ஆதரவு தெரிவித்தனர். விஜய் டெல்லிக்குப் போய் ஆதரவு தெரிவித்தார். நடிகர் விஷாலும் ஆதரவு தெரிவித்து அறிக்கைவிட்டார். நடிகர் சங்க விவகாரத்திலும் கேள்விகள் கேட்டு சர்ச்சைக்கு உள்ளானார்.

ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்ததாக வந்தது முழுக்க முழுக்க வதந்தி!- விஷால்

ஊழலுக்கு எதிராக போராடும் ஆம் ஆத்மி கட்சி டெல்லியில் ஆட்சி அமைத்துள்ள சூழ்நிலையில் அக்கட்சிக்கு இந்தியா முழுவதும் வரவேற்பு ஏற்பட்டு உள்ளது. பல்வேறு மாநிலங்களில் இளைஞர்கள் அக்கட்சியில் சேர்ந்த வண்ணம் உள்ளனர்.

தமிழகத்திலும் ஆம் ஆத்மி கட்சிக்கு உறுப்பினர் சேர்க்கும் பணி நடக்கிறது. நடிகர் விஷாலையும் இக்கட்சிக்கு இழுக்க முயற்சி நடப்பதாக பேசப்படுகிறது. விஷால் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தால் அவருக்கு தமிழக ஆம் ஆத்மி கட்சியின் தலைவராக நியமிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது என்று செய்திகள் வெளியாகின.

ஆனால் விஷால் இதுபற்றி ட்வீட்டரிலோ, வேறு மீடியா மூலம் கூட எந்தக் கருத்தும் கூறவில்லை.

அவரிடம் இதுபற்றி கேட்டபோது, "இதில் உண்மை இல்லை. நான் வெளிப்படையானவன். எதுவாக இருந்தாலும் நிச்சயம் சொல்வேன். இது திட்டமிட்ட வதந்தி மாதிரிதான் உள்ளது," என்றார்.

 

Post a Comment