நான் சிகப்பு மனிதன் படத்தின் தலைப்புக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
ரஜினிகாந்த், பாக்யராஜ், அம்பிகா நடித்து 1985-ல் வெளியான படம் நான் சிகப்பு மனிதன். இந்தப் படத்தை பூர்ணச்சந்திரராவ் என்பவர் தயாரித்திருந்தார்.
இந்தப் படத்தின் நெகடிவ் உரிமையை சேலத்தைச் சேர்ந்த ஒரு பட வெளியீட்டாளருக்கு விற்பனை செய்துவிட்டார் பூர்ணச்சந்திரராவ். அவர் அதை சென்னையில் உள்ள நாகப்பனுக்கு பின்னர் விற்றார்.
இந்த நிலையில் விஷால் நடிக்கும் படத்துக்கு நான் சிகப்பு மனிதன் என்று தலைப்பிட்டு தயாரித்து வந்தனர். படம் வெளியாகும் நிலையில், தடை கோரி வழக்குத் தொடர்ந்தார் நாகப்பன். தலைப்புக்கான உரிமை மற்றும் காப்பி ரைட் உரிமை அனைத்தும் தன்னிடம் உள்ளதாகவும் அவர் தன் வழக்கில் தெரிவித்திருந்தார்.
இதனை எதிர்த்து வழக்குத் தொடர்ந்த விஷால் பிலிம் பேக்டரி, நாகப்பன் இந்தத் தலைப்புக்கு உரியவர் அல்ல என்றும், அவர் இந்தத் தலைப்பை குறிப்பிட்ட ஆண்டுகளுக்குப் பிறகு பதிவு செய்யவில்லை என்றும் வாதாடியது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட உயர்நீதிமன்ற நீதிபதி தமிழ்வாணன், இந்தப் படத்தின் தலைப்பு மீது நாகப்பனுக்கு சட்டரீதியான உரிமையில்லை என்றும், நெகடிவ் உரிமையை வைத்திருப்பதால் பேச்சளவில் உரிமை கொண்டாட முடியும் என்றும் கூறினார். ஆனால் இதற்காக படத்தை தடை செய்யத் தேவையில்லை என்று கூறிய நீதிபதி, வழக்கை அடுத்த வாரத்துக்கு ஒத்தி வைத்தார்.
இதனால் படம் இன்று எந்தத் தடையுமின்றி வெளியாகிறது.
Post a Comment