மறக்கமுடியாத காமெடிக் காட்சிகள் நிறைந்த படங்கள் என ஒரு பட்டியல் போட்டால், அதில் வின்னர், கிரி, தலைநகரம் என சுந்தர் சி இயக்கிய படங்கள் நிச்சயம் இடம்பெறும்.
என்றைக்குப் பார்த்தாலும் சிரிப்பாய் சிரித்து வயிற்றைப் புண்ணாக்கிவிடும் படங்கள் இவை. இவற்றில் காமெடி நாயகனாக கொடி கட்டிப் பறந்தவர் வடிவேலுதான்.
இந்த இருவரின் கூட்டணியை மீண்டும் எப்போது திரையில் பார்க்க முடியும் என பலரும் ஏங்கிக் கொண்டிருக்க, 'அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்லை' என்கிறார் சுந்தர் சி.
காரணத்தை நேரடியாகச் சொல்லாவிட்டாலும், மறைமுகமாகக் குறிப்பிடத் தவறவில்லை சுந்தர் சி.
அது.. வடிவேலு கேட்கும் அசாதாரண சம்பளம். ஆனால் இப்போது சுந்தருடன் கூட்டணி சேர்ந்திருக்கும் சந்தானமோ, அப்படியெல்லாம் சம்பளம் கேட்பதில்லையாம்.
"என் படங்களில் நடிக்க இதுவரை இந்தத் தொகைதான் வேண்டும் என ஒரு நாளும் அடம் பிடித்ததில்லை சந்தானம். என்ன தருகிறேனோ அதை மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொள்வார். அதற்காக அவர் சம்பளத்தை அநியாயத்துக்கு குறைத்தும் தர மாட்டேன். இந்த பண்புதான், அவருடன் எத்தனை படங்கள் வேண்டுமானாலும் செய்யத் தூண்டுகிறது," என்றார் சுந்தர் சி, சமீபத்தில் நடந்த அரண்மனை பட பிரஸ் மீட்டில்.
வேறு தயாரிப்பாளர் படம் என்றால் சுந்தர் சி இந்த அளவு சம்பளக் கணக்குப் பார்க்க மாட்டார். இப்போது அவர் எடுப்பதெல்லாம் சொந்தப் படமல்லவா.. அதனால்தான் வடிவேலுவின் சம்பளம் பெரிய தடையாக இருக்கிறது, இருவரும் இணைய!
Post a Comment