சென்னை: திரைப்படத் தலைப்பைப் பதிவு செய்வதில் பெரும் மோசடி செய்ததாக சினிமா கில்டு தலைவர் கிரிதாரிலால் மீது ஜாகுவார் தங்கம் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
தென்னிந்திய திரைப்படம் - தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பாளர் சங்கத்தின் (கில்டு) கவுரவ செயலாளர் ஜாக்குவார் தங்கம் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இன்று ஒரு புகார் மனு கொடுத்தார். அதில், "தென் இந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பாளர் சங்க தலைவராக இருப்பவர் கிரிதாரிலால். இவர் 2009 ஆண்டு முதலே இந்த பதவியை வகித்து வருகிறார். இந்த சங்கத்தின் செயலாளராக இருப்பவர் தேவராஜ் குணசேகரன்.
நீண்ட நாட்களாக இந்த பதவியை வகிக்கும் இவர்கள் பல்வேறு முறைகேடுகளை செய்து வருகிறார்கள். இவர்களது மோசடி காரணமாக சங்கத்துக்கு கெட்ட பெயர் ஏற்பட்டுள்ளது.
சினிமா படத்தின் தலைப்புகளை பதிவு செய்வதும், அதை பாதுகாப்பதும் சங்கத் தலைவரின் முக்கிய பணியாகும். ஆனால் யாராவது புதிய படத்தின் தலைப்பை பதிவு செய்ய வந்தால், ஏற்கனவே அதே தலைப்பு பதிவு செய்யப்பட்டு விட்டதாகவும், பணம் கொடுத்தால் அதை வாங்கித் தருவதாகவும் பேரம்பேசி பல லட்சம் பெற்றுக் கொண்டு மோசடி செய்துள்ளார்.
‘சரவணன் என்கிற சூர்யா', ‘இந்தியா-பாகிஸ்தான்' ஆகிய படத்தலைப்புகளை பதிவு செய்யும் போது இதுபோன்ற மோசடி நடந்துள்ளது. இதனால் சங்கத்துக்கு கெட்ட பெயரும் தலைகுனிவும் ஏற்பட்டிருக்கிறது. இதுதவிர, தியாகராய நகரில் ரூ.85 லட்சம் மதிப்புள்ள கட்டிடத்தை சங்கத்துக்கு ரூ.1 கோடியே 45 லட்சம் செலவில் வாங்கப்பட்டுள்ளது. வெளியூர்களுக்கு தலைவரும், செயலாளரும் பயணம் செய்வதற்கு லட்சக்கணக்கில் வீண் செலவு செய்யப்பட்டுள்ளது.
செயலாளர் திருட்டு வி.சி.டி. விற்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது. எனவே இதுபோன்ற முறைகேடுகளில் ஈடுபட்டுள்ள சங்க தலைவர், செயலாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்று குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment