சென்னையை சாக்கடைகள் கொண்ட நகராக மாற்றிய அவப்பெயர் நம் தலைமுறைக்கு உண்டு!- கமல்

|

சென்னை: இன்று 375 வது பிறந்த நாள் காணும் சென்னை மாநகருக்கு நடிகர் கமல் ஹாஸன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

2004-ம் ஆண்டு முதல் ஆகஸ்ட் 22-ந் தேதியிலிருந்து சென்னை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

சென்னை மாநகரம் பிறந்து 375 ஆண்டுகள் ஆவதையொட்டி, சமூக வலைத்தளங்களில் அவரவர் உணர்ச்சிகரமாக கருத்திட்டு வருகின்றனர். இந்த சென்னை தினத்தை முன்னிட்டு நடிகர் கமல் ஹாஸன் வெளியிட்டுள்ள அறிக்கை:

சென்னையை  சாக்கடைகள் கொண்ட நகராக மாற்றிய அவப்பெயர் நம் தலைமுறைக்கு உண்டு!- கமல்

ஒரு கடற்கரை கிராமமாக தொடங்கி, கிழக்கிந்திய கம்பெனி, போர்த்துகீசியர், டச்சு, பிரெஞ்சு போன்ற பலர் படையெடுத்து வெல்ல முயன்று கடைசியில் ஆங்கிலேயர் தக்க வைத்துக்கொண்ட ஒரு அழகான தீவு.

இரண்டாற்றின் கரை என்று ஸ்ரீரங்கத்தை சொல்வார்கள். சென்னையும் இரண்டாற்றின் கரைதான். அதற்கு இன்று 375 வயதாகி இருக்கிறது. இந்த இளம் தாயை, இரு நதி கொண்ட இரண்டாற்றின் கரையாகிய இந்த ஊரை, இரண்டு சாக்கடைகள் கொண்ட நகரமாக மாற்றிய அவப்பெயர் நம் தலைமுறைக்கு உண்டு.

இதை மாற்றும் திறமையும் நமக்கு உண்டு. அதை செய்தால் சரித்திரத்தில் நாம் இரண்டு நதிகளை சுத்திகரித்து புதுப்பித்த வித்தகர்களாக போற்றப்படுவோம். இல்லையேல் நாம் வாழ்ந்த இக்காலத்தின் சரித்திரம் நல்ல இரு நதிகளை சாக்கடையாக மாற்றிய ஜனக்கூட்டத்தின் சரித்திரமாக எழுதப்படும்.

அதை நினைவில் கொண்டு பெற்றதை கொண்டாடுவோம், கற்றதை போற்றுவோம். பிறந்த நாள் வாழ்த்துக்கள் எனது சென்னைக்கு!

-இவ்வாறு கமல் ஹாஸன் கூறியுள்ளார்.

 

Post a Comment