இளையராஜாவின் பாடல்களைப் பயன்படுத்த அகி மியூசிக் உள்பட 5 நிறுவனங்களுக்குத் தடை நீட்டிப்பு!

|

இசையமைப்பாளர் இளையராஜாவின் காப்புரிமை பெற்ற இசை வடிவங்களைப் பிற நிறுவனங்கள் காப்புரிமை தராமல் பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீட்டித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் இந்த நிறுவனங்கள் வெளியிட்ட இசைத்தட்டுகள், ஐட்யூனில் விற்றுவந்த பாடல்களை தொடர்ந்து விற்பனை செய்ய உடனடித் தடை விதித்ததுடன், கடைகளில் உள்ள அந்த இசைத் தட்டுகளை பறிமுதல் செய்யவும் போலீசாருக்கு உத்தரவிட்டது.

இளையராஜாவின் பாடல்களைப் பயன்படுத்த அகி மியூசிக் உள்பட 5 நிறுவனங்களுக்குத் தடை நீட்டிப்பு!

கடந்த 1976-ஆம் ஆண்டு முதல் இசையமைத்து வரும் இளையராஜா, ஆறாயிரம் பாடல்களுக்கு மேல் இளையராஜா இசையமைத்துள்ளார். சர்வதேச சினிமாவில் ஆயிரம் படங்களுக்கு மேல் இசையமைத்தவர் என்ற பெருமையை இளையராஜா பெற்றுள்ளார்.

இந்நிலையில் அகி மியூசிக் என்ற நிறுவனம் உள்பட ஐந்து நிறுவனங்கள் இளையராஜாவின் இசை வடிவங்களை வெவ்வேறு கட்டத்தில் பயன்படுத்தி வந்தன. அகி மியூசிக் நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாக இளையராஜாவின் பெரும்பாலான பாடல்களை மறு வெளியீடு செய்து பெரும் வருவாய் ஈட்டி வந்தது.

ஐட்யூனில் இளையராஜாவின் பாடல்களுக்கு பெரும் வருவாயும் வரவேற்பும் கிடைத்தன. ஆனால் இளையராஜாவுக்கு கோடிக்கணக்கில் காப்புரிமைத் தொகையைத் தராமல் இந்த நிறுவனம் ஏமாற்றி வந்தது. இதனை நீதிமன்றத்துக்குக் கொண்டு சென்றார் இளையராஜா.

காப்புரிமை பெறப்பட்ட தனது பாடல்களை இந்த நிறுவனங்கள் பயன்படுத்துவதால், அதற்குத் தடை விதிக்கக் கோரி இசையமைப்பாளர் இளையராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த மனுவை கடந்த முறை விசாரணை செய்த நீதிபதி எஸ்.தமிழ்வாணன், இளையராஜாவின் இசை வடிவங்களைப் பயன்படுத்த இடைக்காலத் தடைவிதித்து உத்தரவிட்டார்.

இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணை நீதிபதி ஆர்.சுப்பையா முன்பு வியாழக்கிழமை மீண்டும் வந்தது. இந்த வழக்கில் ஏற்கெனவே விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை அக்டோபர் 20-ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார்.

 

Post a Comment