சென்னை: உடல்நலக்குறைவு காரணமாக காலமான பழம்பெரும் நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் உடல் சென்னை பெசன்ட் நகரில் உள்ள மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
சென்னை தேனாம்பேட்டை, எல்டாம்ஸ் சாலையில் உள்ள வீட்டில் இருந்த, எஸ்.எஸ்.ராஜேந்திரனுக்கு, இரண்டு தினங்களுக்கு முன், மூச்சு திணறல் ஏற்பட்டது. எனவே, ஆழ்வார்பேட்டையில் உள்ள மீனாட்சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
மூச்சு திணறல் அதிகமானதால், நேற்று, அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று காலை 10.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி அவர் உயிர் பிரிந்தது.
மறைந்த நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரனுக்கு பங்கஜம், நடிகை விஜயகுமாரி, தாமரைச்செல்வி என்ற மூன்று மனைவிகளும், இளங்கோவன், ராஜேந்திர குமார், கலைவாணன், செல்வராஜ், பாக்யலட்சுமி, ரவிக்குமார், கண்ணன் 7 பிள்ளைகள் உள்ளனர்.
திரை உலகினர் அஞ்சலி
எஸ்.எஸ்.ராஜேந்திரனின் உடல், சென்னை தேனாம்பேட்டை, எல்டாம்ஸ் சாலையில் உள்ள வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. எஸ்.எஸ்.ஆரின் உடலுக்கு அரசியல் பிரபலங்கள் மற்றும் திரைநட்சத்திரங்கள் அஞ்சலி செலுத்தினர்.
திமுக சார்பில் கருணாநிதி, ஸ்டாலின், ராசா, பொன்முடி, டி.கே.எஸ்.இளங்கோவனும், அதிமுக சார்பில் ராஜேந்திர பாலாஜி, காங்கிரஸ் சார்பில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், ஜி.கே.வாசன், பா.ஜ., சார்பில் தமிழிசை செளந்திரராஜன் உள்ளிட்ட அரசியல் பிரபலங்களும், பிரபு, பாக்யராஜ், கேயார், விஜயகாந்த், முக்தா சீனிவாசன், சச்சு, ஒய்.ஜி.மகேந்திரன், சிவக்குமார், ராஜசேகர், வைரமுத்து, சரத்குமார், ராதாரவி, விஜயகுமார் உள்ளிட்ட திரைநட்சத்திரங்களும் அஞ்சலி செலுத்தினர்.
உடல் தகனம்
பின்னர் எஸ்.எஸ்.ஆரின் உடல், எல்டாம்ஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து பெசன்ட் நகர் மயானத்திற்கு ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. அங்கு, அவரது 6 மகன்களும் இறுதி சடங்குகளை செய்தனர். பின்னர் இறுதியாக அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.
Post a Comment