மூவி ஃபண்டிங் எனும் மூடுமந்திரம் -3

|

-இயக்குநர் முத்துராமலிங்கன்

அப்படி திடீரென எழுந்துபோவார் என நான் எதிர்பார்த்திருக்கவில்லை.

சில நொடிகளின் உறைப்பில் ‘கோபம் இருக்கும் இடத்தில் ஒரு வலுவான காரணம் இருக்கும்' என்று என் சிந்தனையில் ஓடியது.

ஜெய்லானி கிளம்பி முப்பது செகண்ட்தான் ஆகியிருக்கும். வேகமாய் எழுந்துபோய் பால்கனி வழியாக எட்டிப்பார்த்தபோது, அவர் பைக்கை ஸ்டார்ட் பண்ணிக்கொண்டிருந்தார்.

மூவி ஃபண்டிங் எனும் மூடுமந்திரம் -3

‘சார் மேல வாங்க. அடுத்த அஞ்சாவது நிமிசத்துலருந்து நீங்க சொன்ன வேலையை ஆரம்பீச்சிரலாம்'.

‘சும்மா' இருப்பதற்குப் பதில் எதையாவது செய்துதான் பார்ப்போமே' என்பதுதான் எனது அப்போதைய திட்டமாயிருந்தது.

அடுத்து ஒரு எட்டு மணிநேரத்துக்கு ‘மூவி ஃபண்டிங்' தொடர்பான வேலைகளை எந்தப் புள்ளியிலிருந்து துவங்கலாம், என்னவிதமான சாதக பாதகங்களை எதிர்கொள்ள நேரிடும் என்ற அம்சங்கள் குறித்துப் பேசி விடைபெற்றோம்.

மூவி ஃபண்டிங் எனும் மூடுமந்திரம் -3

சினிமா கற்றுக் கொள்ள ஆர்வமுள்ளவர்கள், முக்கியமாய் நடிக்கத்துடிப்பவர்கள் சின்னச்சின்னதாய் முதலீடு செய்ய முன்வருவார்கள். அடுத்தபடியாக தெரிந்த நண்பர்கள் உதவமுன்வருவார்கள் என்பது அப்போதைய எங்கள் கணக்காக இருந்தது.

இத்திட்டத்தின் முதல் ஸ்பான்சராக எனக்குப்பட்டவர் எனது முதல்பட தயாரிப்பாளர் கலைக்கோட்டுதயம் தான்.

மூவி ஃபண்டிங் திட்டம் தொடர்பான விபரங்கள் அனைத்தையும் பொறுமையாகக் கேட்டவர், எங்கள் இருவரின் படங்களையும் தாண்டி, இந்த நிறுவனம் தொடர்ந்து படங்கள் தயாரிக்கும் என்ற எங்கள் எண்ணத்தை புரிந்துகொண்டு ‘நீங்கள் தயாரிக்கும் அனைத்துப்படங்களுக்கும் என் பங்களிப்பாக இருக்கட்டும்' என்று சுமார் 11 லட்சத்து அறுபதினாயிரம் மதிப்புக்கு ‘பிளாக் மேஜிக்' கேமராவும் அது தொடர்பான லென்ஸ்கள் மற்றும் உபகரணங்கள் வாங்கிக்கொடுக்க சம்மதித்து, அதனை அடுத்த இரண்டே வாரங்களில் நிறைவேற்றவும் செய்தார்.

கேமரா கிடைத்ததே எங்களுக்கு கொம்பு முளைத்தது போலிருக்க, தானே ஒரு வெப் டிசனரும் கூட என்பதால் ஜெய்லானி 'மூவி ஃபண்டிங்' நிறுவனத்துக்கு ஒரு தரமான வெப்சைட்டை வடிவமைத்திருந்தார்.

மூவி ஃபண்டிங் எனும் மூடுமந்திரம் -3

துவக்கிய ஓரிரு தினங்களிலேயே, வெப்சைட்டை தினமும் பார்வையிடுபவர்களின் எண்ணிக்கை சில ஆயிரங்களில் இருந்ததே ஒழிய ரெஸ்பான்ஸ் என்று எதையும் காணோம்.

இன்னொரு பக்கம் சில இணை, துணை இயக்குநர்கள் எங்களிடம் போனில் தொடர்பு கூட கொள்ளாமல், தங்கள் புராஜக்டை எங்கள் வெப்சைட்டில் லிஸ்ட் பண்ண ஆரம்பித்தார்கள்.

நண்பர்களிடம் ஆரம்பத்தில் இதுகுறித்து சொன்னபோது கேள்விக்குறிகளோடும், ஆச்சரியக்குறிகளோடும் எதிர்கொண்டார்கள். அனைவரிடமும் கேட்பதற்கு நிறைய கேள்விகள் இருப்பதை புரிந்துகொள்ளமுடிந்தது.

அங்கங்கே சில பாஸிடிவ் லைட்களும் எரியத்தான் செய்தன.

‘இப்பதான் டைரக்டர் மீரா கதிரவன் கிட்ட பேசுனேன். நல்ல விசயம் பண்ணுங்க. என்னால முடிஞ்ச சப்போர்ட்டை நான் பண்றேன்னார்' என்பார் ஜெய்லானி.

‘ஆமா சார் நான் கூட சூர்யா வடிவேல்[ ‘சிநேகாவின் காதலர்கள்' படத்தில் ஒரு சிறு வேடத்தில் நடித்தவர்] சார் கிட்ட பேசுனேன். என்னால முடிஞ்ச அளவுக்கு நான் இன்வெஸ்ட் பண்றேன்னு சொன்னார்' என்பேன்.

ஆனாலும் இது போதாது. ‘நடிகர், நடிகைகள் தேவை' விளம்பரம் தருவது ரொம்ப பழைய்ய ஸ்டைல். போக அது ஒரு ‘உப்புமா பட' இமேஜை உண்டாக்கக்கூடியது. இதை அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்துவதற்கு என்ன செய்யலாம் என்ற தீவிர யோசனைக்குப் பிறகு ஒரு பத்திரிகையாளர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்துவிட்டு அவர்களிடம் விளக்கினால் என்ன? என்று முடிவு செய்தோம்.

கண்டிப்பாக அது ஒரு டர்னிங் பாயிண்டான முடிவுதான்.

கடந்த அக்டோபர் 16. பிரசாத் லேப்பில், மக்கள் தொடர்பாளர் நிகில் முருகன் ஏற்பாட்டில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் இயக்குநர் மீரா கதிரவன், தயாரிப்பாளர் சி.வி.குமார் முன்னிலையில் ஜெய்லானி சுமார் 15 நிமிடங்களுக்கு தெளிவான உரை ஒன்றை ஆற்றினார்.

சி.வி.குமாரும் மூவி ஃபண்டிங் பற்றிய பாஸிடிவான விசயங்களை தொட்டுப்பேசி, 'சின்னப் படங்களுக்கு தியேட்டர்கள் கிடைப்பதுதான் பெரும்பாடாயிருக்கிறது. அதிலும் கவனம் செலுத்தினால் இத்திட்டம் பெரும்வெற்றி பெறும்' என்று ஆலோசனை சொன்னார்.

மீரா கதிரவன் தன் பங்குக்கு மூவி ஃபண்டிங் மூலம் தயாரிக்கும் ஒரு குறும்படத்துக்கு தான் நிதி உதவி அளிப்பதாய் மேடையிலேயே அறிவித்து எங்களைப் பெருமைப்படுத்தினார்.

இரவு தாமதமாக வீடு திரும்பி, குளித்து முடித்து, உண்டு உறங்கச்செல்கையில் ஸ்விட்ச் ஆஃப் பண்ண செல்ஃபோனை கையில் எடுத்துப்பார்த்தால் சுமார் இரண்டு நிமிடங்கள் முன்பு ஒரு மெஸேஜ் வந்திருந்தது...

அந்த மெஸேஜை அனுப்பியிருந்தவர், கிரவுட் ஃபண்டிங்கில் படம் தயாரித்து பரபரப்பை உண்டு பண்ணியிருந்த கன்னட 'லூஸியா' பட இயக்குநர் பவன்குமார்.

(மீதி வரும் திங்களன்று...)

 

Post a Comment