திருவனந்தபுரம் : விபத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள மலையாள நடிகர் ஜெகதி ஸ்ரீகுமாருக்கு, ரூ.5 கோடியே 90 லட்சம் இழப்பீடாக வழங்க உத்தரவிடப் பட்டுள்ளது.
பிரபல மலையாள காமெடி நடிகர் ஜெகதி ஸ்ரீகுமார் (63). சுமார் 1100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள ஜெகதி, இதற்காக கின்னஸ் புத்தகத்திலும் இடம் பிடித்துள்ளார். கடந்த 2001ம் ஆண்டு மட்டும் 70 படங்களில் நடித்து வந்தார்.
இந்நிலையில், கடந்த 2012ம் ஆண்டு மார்ச் மாதம் படப்பிடிப்பிற்கு சென்று கொண்டிருந்த போது, கோழிக்கோடு அருகே நடந்த கார் விபத்தில் படுகாயமடைந்தார்.
கோழிக்கோடு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்ட ஜெகதி, பின்னர் வேலூர் சி.எம்.சி. மருத்துவமனைக்கு மாற்றப் பட்டார். சுமார் ஓராண்டு காலம் வேலூர் மருத்துவமனையில் தங்கி இருந்து சிகிச்சை பெற்ற ஜெகதி, கடந்தாண்டு திருவனந்தபுரம் திரும்பினார்.
சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய போதும், இன்னும் பாதிப்புகளில் இருந்து முழுமையாக மீளாத ஜெகதி, வீல்சேரில் வாழ்ந்து வருகிறார்.
ஜெகதிக்கு ஏற்பட்ட விபத் துக்கு இழப்பீடு கோரி கடந்த 2013 ஏப்ரலில் மோட்டார் வாகன விபத்து முறையீட்டு தீர்ப்பாயத்தில் அவரது மனைவி ஷோபா வழக்கு தொடர்ந்தார். இது தொடர்பான தீர்ப்பாய விசாரணையில் இன்சூரன்ஸ் நிறு வனத்துக்கும் ஸ்ரீகுமார் தரப்புக்கும் இடையே நீண்ட வாதம் நடைபெற்று வந்தது.
இந்நிலையில், திருவனந்தபுரத்தில் நடை பெற்ற மெகா லோக் அதாலத்தில் இருதரப்புக்கும் இடையே சுமுக தீர்வு எட்டப்பட்டது. அதன்படி, ஜெகதிக்கு ரூ.5 கோடியே 90 லட்சத்தை இழப்பீடாக வழங்க இன்சூரன்ஸ் நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது.
முதல்கட்டமாக ரூ.2.50 கோடி ரொக்கத்தை ஜெகதிக்கு வழங்கியுள்ள இன்சூரன்ஸ் நிறுவனம், மீதமுள்ள தொகையை வங்கியில் 5 ஆண்டுகளுக்கு டெபாசிட் செய்யப் பட்டு அதில் கிடைக்கும் வட்டியை 3 மாதங்களுக்கு ஒருமுறை அவரிடம் வழங்க ஏற்பாடு செய்துள்ளது.
ஜெகதி வருமானத்தைக் கணக்கிட்டு அவருக்கான இழப்பீட்டுத் தொகை இறுதி செய்யப்பட்டதாக அவரது வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
Post a Comment