நடிகையைக் கன்னத்தில் அறைந்த விவகாரம் - சுஷ்மிதாசென் கடும் கண்டனம்

|

மும்பை: நடிகை கெளஹர் கானை ஒரு ரசிகர் கன்னத்தில் அறைந்து, அவமரியாதை செய்யும் வகையில் நடந்து கொண்ட சம்பவத்திற்கு நடிகை சுஷ்மிதா சென் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஸ்டார் பிளஸ் டிவியின் ரா ஸ்டார் நிகழ்ச்சியின்போது நடிகை கெளஹர் கானை நோக்கி ஓடி வந்த ஒரு ரசிகர், அவரது கன்னத்தில் பளார் பளார் என அறைந்தார். மேலும் அவரது உடலைத் தொட்டும் அநாகரீகமாக நடந்து கொண்டார்.

இதனால் நிகழ்ச்சி அரங்கில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபரை பாதுகாவலர்கள் மடக்கிப் பிடித்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர். பின்னர் அவரை போலீஸில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவரது பெயர் முகம்மது அகில் மாலிக் என்று தெரிய வந்தது.

நடிகையைக் கன்னத்தில் அறைந்த விவகாரம் - சுஷ்மிதாசென் கடும் கண்டனம்

அவரிடம் போலீஸார் ஏன் தாக்கினார் என்று விசாரித்தபோது, கெளஹர் கான் ஒரு முஸ்லீம் பெண். அரைகுறையாக ஆடை அணிந்து அவர் வந்ததை என்னால் ஏற்க முடியவில்லை. இப்படிப்பட்ட டிரஸ்ஸில் அவர் வரக் கூடாது. இதனால்தான் அவரை நான் அடித்தேன் என்றார். மாலிக்கை கைது செய்த போலீஸார் அவரை சிறையில் அடைத்துள்ளனர்.

இந்த சம்பவத்திற்கு சமூக வலைதளங்களில் கண்டனங்கள் குவிந்து வருகின்றன. இந்த நிலையில் நடிகை சுஷ்மிதா சென் இந்த சம்பவம் குறித்துக் கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், மதத்தின் பெயரால் உடைக் கட்டுப்பாடு என்பது ஏற்க முடியாதது. ஒரு பெண்ணை இதுபோல அவமரியாதை செய்வது நிறுத்தப்பட வேண்டும். இதுபோன்ற செயல் இனியும் தொடரக் கூடாது. சம்பந்தப்பட்ட நபர் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார் சுஷ்மிதா சென்.

 

Post a Comment