இளையராஜாவைச் சந்தித்தார் நல்லக்கண்ணு!

|

சென்னை: மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் ஆர் நல்லக்கண்ணு நேற்று இசைஞானி இளையராஜாவை அவரது பிரசாத் ஒலிப்பதிவுக் கூடத்தில் சந்தித்துப் பேசினார்.

இசைஞானி இளையராஜாவின் ஆரம்ப நாட்கள், கம்யூனிஸ்ட் இயக்கத்தோடு பின்னிப் பிணைந்தவை. தன் அண்ணனும் குருவுமான பாவலர் வரதராசன் மற்றும் சகோதரர்களோடு, கம்யூனிஸ இயக்க மேடைகளில் பிரச்சாரப் பாடல்களாக ஒலித்தவை ராஜாவின் குரலும் இசையும்.

இளையராஜாவைச் சந்தித்தார் நல்லக்கண்ணு!

கம்யூனிச இயக்கங்கள் எப்போதும் எந்த மேடையிலும் இதை நினைவு கூறத் தயங்கியதில்லை. இளையராஜாவும் அப்படியே. ராஜாவின் சாதனைகளை பெருமையுடன் அவ்வப்போது கொண்டாடவும் தவறுவதில்லை கம்யூனிஸ்ட் அமைப்புகள்.

அந்த வகையில் இளையராஜா மீது பெரும் அன்பும் மதிப்பும் கொண்ட மூத்த தலைவர் ஆர் நல்லக்கண்ணு நேற்று இளையராஜாவை அவரது ஒலிப்பதிவுக் கூடத்தில் வைத்து சந்தித்தார்.

அவரை வரவேற்று அழைத்துச் சென்ற இளையராஜா, நீண்ட நேரம் அவருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, இளையராஜாவின் குரல் ஒலித்த முதல் மேடை, பாவலர் சகோதரர்கள் கச்சேரி செய்த கம்யூனிஸ மேடைகள், ஊர்கள் பற்றியெல்லாம் நல்லக்கண்ணு நினைவு கூற, அவற்றை மகிழ்வுடன் ஆமோதித்தார் இளையராஜா.

பின்னர் ஈரோட்டில் நடக்கும் புத்தகக் கண்காட்சிக்கு வருமாறு இளையராஜாவுக்கு நல்லக்கண்ணு அழைப்புவிட, ராஜாவும் வர ஒப்புக் கொண்டார். பின்னர் விடைபெற்றுச் சென்றார் நல்லக்கண்ணு.

 

Post a Comment