எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாத 'ஐ'- ஒன்இந்தியா வாசகர்கள் கருத்து!

|

சென்னை: 'ஐ' திரைப்படம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்றும், இயக்குநர் ஷங்கர் சொதப்பிவிட்டார் என்றும் 41 சதவீதம் ஒன்இந்தியா வாசகர்கள், கூறியுள்ள நிலையில், அருமையான படம் என்று 26.87 சதவீதம் பேர்தான் கூறியுள்ளனர்.

ஷங்கர் இயக்கத்தில், விக்ரம் நடிக்க, ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரிப்பில் வெளியான பிரமாண்ட திரைப்படம் ஐ. பல ஆண்டுகால உழைப்புக்கு பிறகு இப்படம், கடந்த 14ம்தேதி திரைக்கு வந்தது.

எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாத 'ஐ'- ஒன்இந்தியா வாசகர்கள் கருத்து!

படத்தில் பிரமாண்டத்திற்கு பஞ்சமில்லை என்றபோதும், ஷங்கரின் வழக்கமான இயக்குநர் 'டச்' இல்லை என்று ரசிகர்கள் பலரும் குறைபட்டுக் கொண்டனர். சமூக கருத்துள்ள படங்களில் ஷங்கர் பின்னிபெடலெடுப்பார் என்றும், காதல் கதைக்களம் என்றால் ஷங்கர் தடுமாறுவது வழக்கம்தான் என்றும் சில நடுநிலை ரசிகர்கள் கூறிவருகின்றனர்.

இன்னும் சில ரசிகர்களோ, ஷங்கர் படமா இது, ஏ.ஆர்.ரஹ்மான் மியூசிக்கா இப்படி உள்ளது என்று கருத்துக்களை ஆவேசமாக கூறிவருகின்றனர். சரி.. ஒன் இந்தியா வாசகர்களிடமே கருத்தை கேட்டுவிடுவோமே, அவர்களுக்குதான் உலக ஞானம் அதிகமாயிற்றே என்று நினைத்து, கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது.

ஐ திரைப்படம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா என்று கேள்வி முன்வைக்கப்பட்டது. இதுவரை, 34 ஆயிரத்து 955 பேர் வாக்களித்துள்ளனர். அதில் மீண்டும், மீண்டும் பார்க்க வேண்டிய சூப்பர் படம் என்று 9393 பேர் தெரிவித்துள்ளனர். இது 26.87 சதவீதம் வாக்குகளாகும்.

எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்று 9061 பேர் அதாவது, 25.92 சதவீதம் பேர் கூறியுள்ளனர். இது கிட்டத்தட்ட படம் பிடித்திருக்கிறது என்று சொல்வோரை சமன் செய்யும் அளவுக்கு உள்ளது. ஒரு பிரமாண்ட படத்திற்கு, அதுவும் ஷங்கர் இயக்கிய படத்திற்கு எதிராக இவ்வளவு பேர் வாக்களித்திருப்பதே படத்தின் சரிவை காண்பிப்பதாக உள்ளது.

இதில் இன்னும் சிலர், ஷங்கர் சொதப்பி விட்டார் என்று கடும் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர். அவர்களின் எண்ணிக்கை 5423. சதவீதத்தில் இது 15.51.

அதேநேரம் படத்தை பார்க்கவில்லை என்று சொன்னோர் எண்ணிக்கை 11,078 பேராகும். மொத்த 'வாக்காளர்களில்' இது 31.69 சதவீதமாகும்.

ஆக.. எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்று சொன்னோரும், ஷங்கர் சொதப்பிவிட்டார் என்று சொன்னோரும், ஐ படத்தின்மீதான அதிருப்தியில் உள்ளவர்கள் என்பது உறுதியாகிறது. இவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை, சுமார் 41 சதவீதமாகும். படம் பிடித்திருக்கிறது என்று சொன்னவர்கள் வெறும் 26.87 சதவீதம்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Post a Comment