சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் ஜூன் 1-ம் தேதி வரை ஊட்டியில் சினிமா படப்பிடிப்பு நடத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஊட்டியில் ஆண்டு தோறும் கோடையில் சீஸன் தொடங்கிவிடும். ஏப்ரல் முதல் ஜூன் - ஜூலை வரை ஊட்டியில் மக்கள் குவிந்துவிடுவார்கள். கோடையைச் சமாளிக்க இங்கேயே மாதக்கணக்கில் தங்குவோரும் உண்டு.
இவர்களுக்காகவே ஆண்டு தோறும் ஏப்ரல், மே மாதங்களில் மலர் கண்காட்சி, காய்கறி கண்காட்சி, ரோஜா கண்காட்சி, வாசனை திரவிய கண்காட்சி, பழக்கண்காட்சி ஆகியவை நடைபெறுகிறது.
இந்த ஆண்டு பிப்ரவரியிலேயே கோடை வெயில் வறுத்தெடுக்க ஆரம்பித்துவிட்டது. இந்த மார்ச்சில், அக்னி நட்சத்திரத்துக்கு இணையாக வெளியில் கொளுத்துகிறது.
இதனால் சுற்றுலா பயணிகளின் வருகை ஊட்டியில் அதிகரித்து வருகிறது. ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்காவில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதுகிறது. பள்ளிகளுக்கு பரீட்சை முடிந்ததும் விடுமுறை அறிவிக்கப்படும்.
அதன் பின்னர் ஊட்டிக்கு சுற்றுலா பயணிகளின் வருகை மேலும் அதிகரிக்கும். நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு எந்தவித தொந்தரவும் இல்லாமல் இருப்பதற்காக வருகிற 1-ந்தேதி முதல் ஜூன் 1-ந்தேதி வரை ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா, காட்டேரி பூங்கா பகுதிகளில் சினிமா படப்பிடிப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலா பயணிகளுக்கு தேவையான அனைத்து தேவைகளும் செய்து தரப்படும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
Post a Comment