கார் விபத்தில் உயிர்தப்பினார் நடிகை சாரதா

|

நடிகை ‘ஊர்வசி' சாரதா, ஐதராபாத்தில் நடந்த கார் விபத்தில் உயிர் தப்பினார். கடவுள் அருளால் பிழைத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

‘துலாபாரம்' படத்தில் நடித்ததன் மூலம் அகில இந்திய சிறந்த நடிகையாக தேர்ந்தெடுக்கப்பட்டு, ‘ஊர்வசி' விருது பெற்றவர் சாரதா.

கார் விபத்தில் உயிர்தப்பினார் நடிகை சாரதா

எம்.ஜி.ஆர். நடித்த, ‘நினைத்ததை முடிப்பவன்' படத்தில் அவருக்கு தங்கையாக நடித்திருந்தார்.

சென்னை மகாலிங்கபுரத்தில் வசித்துவரும் சாரதா, குடும்ப நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக ஆந்திரா மாநிலத்தில் உள்ள விஜயவாடா சென்றார். நிகழ்ச்சி முடிந்து அவர் காரில் ஹைதராபாத் திரும்பிக் கொண்டிருந்தார்.

அப்போது அவருடைய காருக்கு முன்னால் சென்றுகொண்டிருந்த ஒரு கார் திடீரென்று விபத்துக்குள்ளாகி, தலைகுப்புற புரண்டது. பின்னால் வேகமாக வந்துகொண்டிருந்த ‘ஊர்வசி' சாரதாவின் கார் விபத்துக்குள்ளான கார் மீது மோதியது.

இந்த விபத்து பற்றி அவர் கூறுகையில், "சினிமாவில்தான் நான் கார் விபத்துக்குள்ளாவதை பார்த்திருக்கிறேன். நேரில் பார்த்ததில்லை. என் வாழ்க்கையில் நடந்த முதல் விபத்து இது. முன்னால் சென்றுகொண்டிருந்த கார் மீது என் கார் மோதியதும் அதிர்ச்சியில் உறைந்து போய்விட்டேன். என்றாலும், தலைகுப்புற புரண்டு கிடந்த காரை நோக்கி நான் ஓடினேன்.

அந்த காருக்குள் ஒரு கணவனும், மனைவியும் சிக்கிக்கொண்டார்கள். அவர்களை வெளியே எடுத்து தண்ணீர் தெளித்து மயக்கத்தை தெளியவைத்தேன். அதற்குள் அங்கு கூட்டம் கூடிவிட்டது.

எல்லோரும் சேர்ந்து ஆம்புலன்ஸ் வரவழைத்து கணவன்-மனைவியை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தோம். கடவுள் அருளால்தான் நான் உயிர் பிழைத்ததாக கருதுகிறேன்," என்றார்.

 

Post a Comment