விபத்துக்கு பின் பொது நிகழ்ச்சியில் ஜெகதி... ஓடிச்சென்று முத்தமிட்ட 2வது மனைவியின் மகள்!

|

கார் விபத்தில் மரணத்தின் விளிம்புக்கே போய், சிகிச்சைப் பெற்று வந்த ஜெகதி ஸ்ரீகுமார் உடல் நலம் தேறியபிறகு முதல் முறையாக நேற்று ஒரு பொது நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

அதில் அவரது இரண்டாவது மனைவியின் மகள் கண்ணீருடன் பங்கேற்று தந்தைக்கு முத்தமிட்டு வந்திருந்தவர்களை நெகிழ வைத்தார்.

கடந்த மார்ச் 2012-ம் ஆண்டு மிக மோசமான விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார் ஜெகதி ஸ்ரீ குமார். அவரது வாழ்க்கையே இதில் ஸ்தம்பித்துப் போனது. மூன்றாண்டுகள் தீவிர சிகிச்சைக்குப் பிறது ஓரளவு உடல் நலம் தேறி வந்துள்ளார் ஜெகதி. அவருக்கு இன்னும் பேச்சுத் திறன் கூட முழுமையாகத் திரும்பவில்லை.

Daughter steals the show on Jagathy's comeback

இந்த நிலையில், கோட்டயத்தில் உள்ள ஒரு பள்ளியில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சியில் ஜெகதி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். மூன்றாண்டு இடைவெளிக்குப் பிறகு ஜெகதி பங்கேற்ற இந்த நிகழ்ச்சிக்கு அவரது இரண்டாவது மனைவியின் மகள் ஸ்ரீலட்சுமி வந்திருந்தார்.

தன் தந்தையைப் பார்த்ததும் மேடைக்கு ஓடிச் சென்று, அவரை முத்துமிட்டு, கண்ணீர் விட்டார். ஜெகதியும் மகளை முத்தமிட்டார். இந்தக் காட்சியைப் படம்பிடிக்க கேமராக்காரர்கள் பாய, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களே அந்தப் பெண்ணை அப்புறப்படுத்துவதிலேயே குறியாக இருந்தனர். பின்னர் மேடையிலேயே தந்தையுடன் சில நிமிடங்கள் அமர வைக்கப்பட்டார் ஸ்ரீலட்சுமி.

ஜெகதியின் முதல் மனைவி மல்லிகா சுகுமாறன். இவர் பிரபல நடிகையும் கூட. 1974-ல் இவரைத் திருமணம் செய்த ஜெகதி, 1979ல் விவாகரத்து செய்துவிட்டார்.

அதன் பிறகு கலா என்பவரைத் திருமணம் செய்தார். 1979-ல் திருமணம் செய்து, 1984-ல் விவாகரத்து செய்துவிட்டார். இவர்களுக்குப் பிறந்தவர்தான் ஸ்ரீலட்சுமி.

மூன்றாவதாக ஷோபாவைத் திருமணம் செய்து, அவருடன்தான் இதுவரை வாழ்ந்து வருகிறார் ஜெகதி.

ஜெகதி மருத்துவமனையிலிருந்தபோது, அவரைப் பார்க்க பல முறை முயன்றும், ஷோபாவும் அவர் பிள்ளைகளும் அனுமதி மறுத்ததால்தான், இந்த நிகழ்ச்சியில் போய் தன் அப்பாவைப் பார்த்தார் ஸ்ரீலட்சுமி என கலா தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலட்சுமி கூறுகையில், " அப்பா என்னை அடையாளம் கண்டு கொண்டார். என் படிப்பு குறித்து விசாரித்தார். எனக்கு முத்தமிட்டு வாழ்த்தி அனுப்பினார்," என்றார்.

 

Post a Comment