பாகுபலி படம் கடந்த மூன்று தினங்களில் வசூல் செய்த தொகை எவ்வளவு என்ற அதிகாரப்பூர்வ தகவல் கிடைத்துள்ளது.
இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என நான்கு மொழிகளிலும் உலகம் முழுக்க ரூ 160 கோடியைக் குவித்து, புதிய சாதனையைப் படைத்துள்ளது.
இந்தியாவில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவான படம் ‘பாகுபலி'. கடந்த வெள்ளியன்று தமிழகம் முழுவதும் 550 தியேட்டர்களிலும், உலகம் முழுவதும் 4000 க்கும் அதிகமான தியேட்டர்களிலும் ரிலீசானது.
முதல் நாளிலேயே ரூ. 50 கோடிக்கும் மேல் வசூலித்து இந்த படம் சாதனை படைத்தது. இந்தியப் படங்கள் எதுவும் இவ்வளவு வசூலித்ததில்லை. அடுத்த நாள் வசூல் ரூ.115 கோடியை எட்டியது.
நேற்று மூன்றாவது நாளில் மட்டும் மொத்த வசூல் 160 கோடியைத் தொட்டது.
இதற்கு முன்பு வெளிவந்த எந்திரன், பி.கே, சென்னை எக்ஸ்பிரஸ், க்ரிஷ், லிங்கா, உள்ளிட்ட படங்கள் மூன்றாவது நாளில் ரூ. 100 கோடிக்கு மேல் வசூல் ஈட்டி உள்ளன. ஆனால் இரண்டே நாட்களில் 100 கோடிக்கு மேல் வசூலித்த இந்திய படம் ‘பாகுபலி' ஒன்றுதான்.
இந்த சாதனை இயக்குநர் ராஜமவுலியால் மட்டுமே சாத்தியமானது என்றால் மிகையல்ல. இந்தப் படத்தைப் பொருத்தவரை ராஜமவுலிக்காக மட்டுமே இவ்வளவு கோடிகள் செலவழிக்கப்பட்டது. அப்படி செலவழித்த தொகையை மிகச் சரியாகப் பயன்படுத்தி ஒரு காவியத்தை திரையில் படைத்திருக்கிறார் ராஜமவுலி. மற்ற தொழில்நுட்பக் கலைஞர்கள், நடிகர் நடிகைகள் அவருக்குத் தந்த அபார ஒத்துழைப்பு, இந்த சாதனையைச் சாத்தியமாக்கியுள்ளது.
இன்று இந்திய சினிமாவின் சூப்பர் இயக்குநராக ராஜமவுலியைப் பார்க்கிறது சர்வதேச சினிமா!
Post a Comment