சென்னையில் அமரர் எம்எஸ் விஸ்வநாதனுக்கு சிலை அமைக்கப்படும் என்று இசையமைப்பாளர் இளையராஜா தெரிவித்தார்.
மறைந்த இசை அமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனின் நினைவு அஞ்சலி கூட்டம், தமிழ்நாடு இசை கலைஞர்கள் சங்கம் சார்பில் சென்னையில் நடந்தது.
இதற்கு முன்னிலை வகித்த இசை அமைப்பாளர் இளையராஜா, மேடையில் எம்.எஸ்.விஸ்வநாதன் படத்தை திறந்து வைத்தார்.
அப்போது அவர் கூறுகையில், "இசைமேதை எம்.எஸ்.வி.க்கு சிலை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை என்னிடம் வைத்தால் அதை நானே செய்து விடுவேன்.
ஆனால் அதற்கு முன்பாகவே அவருக்கு சிலை வைக்க முடிவு செய்து விட்டனர். அவருக்கு சென்னையில் சிலை அமைக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது. அவருடைய இசை நமக்கு ஊக்க மருந்தாக இருக்கும்," என்றார்.
கூட்டத்தில் பேசிய கங்கைஅமரன், "எம்.எஸ்.விஸ்வநாதன் சிலையை சென்னையில் வைப்பதற்கான பணிகள் தொடங்கி விட்டது. அதை நானே முன் நின்று செய்வேன்," என்றார்.
கூட்டத்துக்கு சங்க தலைவர் எஸ்.ஏ.ராஜ்குமார் தலைமை தாங்கினார். கவிஞர் முத்துலிங்கம், பெப்சி தலைவர் சிவா, இசை அமைப்பாளர்கள் இமான், ஸ்ரீகாந்த் தேவா, வித்யாசாகர், ஜி.வி.பிரகாஷ், எஸ்.எஸ்.தமன், சந்தோஷ் நாராயணன், சைந்தவி, பாடகர்கள் எஸ்.பி.பி.சரண், வாணி ஜெயராம், ஹரிஹரண், உன்னிகிருஷ்ணன் மற்றும் எம்.எஸ்.விஸ்வநாதன் குடும்பத்தினர் பங்கேற்றனர்.
Post a Comment