உங்க கிட்ட நல்ல டைட்டில் இருந்தா பாண்டிராஜுக்கு நீங்க தாராளமா சொல்லலாம்...!

|

சென்னை: சூர்யா - அமலாபால் நடித்து வரும் ஹைக்கூ படத்திற்கு விரைவில் புதிய பெயர் சூட்டப்படவிருக்கிறது, புதிய பெயரை ரசிகர்கள் தேர்வு செய்து தரலாம் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருக்கிறார் இயக்குநர் பாண்டிராஜ்.

பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் புதிய படம் ‘ஹைக்கூ'. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக அமலாபால் நடித்து வருகிறார். பசங்க படத்தை போன்று இப்படத்தையும் குழந்தைகளை மையப்படுத்தி எடுத்திருக்கிறார் பாண்டிராஜ்.

இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்துவிட்ட நிலையில், தற்போது இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்திற்கான தலைப்பை மாற்ற படக்குழுவினர் முடிவு செய்திருக்கின்றனர்.

தமிழில் அழகான சிறு கவிதை என்ற அர்த்தம் தொனிக்கக் கூடிய ‘ஹைக்கூ' முறையான தமிழ் வார்த்தை கிடையாது. எனவே, இந்த தலைப்பை பயன்படுத்தினால் படத்திற்கு வரிவிலக்கு கிடைக்காது என்பதால் விரைவில் இந்தத் தலைப்பை மாற்ற படக்குழுவினர் முடிவு செய்திருக்கின்றனர்.

படத்திற்கு புதிய பெயர் வைக்கவிருப்பதை தனது ட்விட்டர் பக்கத்தில் முறையாக அறிவித்திருக்கும் பாண்டிராஜ், ரசிகர்கள் தங்களுக்குத் தோன்றும் தலைப்புகளை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கலாம் என்று கூறியிருக்கிறார்.

மேலும் ரசிகர்கள் அளிக்கும் தலைப்புகள் நன்றாக இருக்கும் பட்சத்தில், ஹைக்கூ படத்திற்கு அந்த தலைப்பை எடுத்துக் கொள்வதாகவும் சொல்லியிருக்கிறார்.

இதற்கு பதிலளித்த ரசிகர்கள் குழந்தைகள் படமென்பதால் தளிர்கள், மழலை, மலர்கள் மற்றும் ஓடி விளையாடு பாப்பா என்று பல்வேறு வித்தியாசமான பதில்களை பாண்டிராஜின் ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்து வருகின்றனர்.

இன்னும் சற்று நாட்களில் புதிய தலைப்புடன் ஹைக்கூ படத்தின் போஸ்டர்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது ஆரோல் கோரலி இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்களை விரைவில் வெளியிட படக்குழுவினர் முடிவுசெய்துள்ளனர்.

படத்தின் நாயகனான சூர்யா தனது 2டி எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் மூலம் ஹைக்கூ படத்தைத் தயாரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

 

Post a Comment