4/23/2011 10:13:51 AM
தமிழிகம் முழுவதும் ஒரு லட்சம் மரக்கன்றுகளை நட, பச்சைப்புரட்சி என்ற அமைப்பை விக்ரம் தொடங்கியுள்ளார். இதுபற்றி நிருபர்களிடம் விக்ரம் கூறியதாவது: நான் ஐ.நா சபையின் மனித குடியேற்ற திட்ட பிரிவின் இளைஞர் தூதராக தேர்வு செய்யப்பட்டுள்ளேன். உலக ரீதியில் இது எனக்கு முக்கியமான பதவி. உலகம் முழுவதும் 4 பேர் இதற்கு தேர்வு செய்யப்படுவார்கள். ஆசிய நாடுகள் சார்பில் நான் தேர்வு செய்யப்பட்டுள்ளேன். இதற்கு காரணமான அனைவருக்கும் நன்றி. கென்யா, நைரோபியில் 23வது நிர்வாக குழு கூட்டம் கடந்த 11ம் தேதி முதல் 15ம் தேதி வரை நடந்தது. அதில் கலந்துகொண்டேன். இன்று (நேற்று) எர்த் டே. சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்ததான் ஆசியாவிலிருந்து என்னைத் தேர்வு செய்துள்ளனர்.
இதுபற்றி எனது விக்ரம் பவுண்டேஷன் மற்றும் சஞ்சீவினி அறக்கட்டளை அமைப்புகள் மூலம், கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை விழிப்புணர்வு பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளோம். விக்ரம் பவுண்டேஷன் மூலம் கண் அறுவை சிகிச்சை, குழந்தைகளுக்கு இதய அறுவை சிகிச்சை உட்பட பல நல்ல காரியங்கள் செய்து வருகிறோம். நான் நடிகனாக இருந்தாலும் சமூக சேவகனாக இருக்கவும் ஆசை. இன்றைய சூழலில் பச்சைப்புரட்சி மிகவும் முக்கியம். நம்மால் முடிந்த அளவில் நம் பகுதியில் ஒரு செடியாவது நட வேண்டும். அது அடுத்த தலைமுறைக்கு நாம் செய்கின்ற பெரிய உதவியாகும். இதன் முதல்கட்டமாக இன்று (நேற்று) ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் 100 மரக்கன்றுகள் நட்டோம். விரைவில் இதை விரிவுபடுத்தி எனது ரசிகர் மன்ற உறுப்பினர்கள் உதவியுடன் தமிழகம் முழுவதும் 1 லட்சம் மரக்கன்றுகள் நட திட்டமிட்டுள்ளோம். இதற்காகவே 'பச்சைப்புரட்சி' அமைப்பு தொடங்கியுள்ளோம். தவிர 'கற்க கசடற' என்ற அமைப்பும் தொடங்க உள்ளோம். இதன் மூலம் குடிசைப் பகுதி சிறுவர்களுக்கு உரிய கல்வி அளித்திட உதவி செய்து, அவர்கள் கட்டாயம் கல்வி கற்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவோம். இவ்வாறு விக்ரம் கூறினார்.
Post a Comment