திமுக ஆட்சியில் மூடப்பட்ட திரைப்பட நகரை மீண்டும் உருவாக்க வேண்டும் - கேயார்

|


சென்னை: திமுக ஆட்சியில் மூடப்பட்ட திரைப்பட நகரை மீண்டும் உருவாக்க வேண்டும், என்று பட அதிபர் கேயார் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

சென்னை சத்யம் திரையரங்கில் நடந்த ஒரு பட விழாவில் பங்கேற்ற கேயார் பேசுகையில், “தமிழ்பட உலகில், 200-க்கும் மேற்பட்ட படங்கள் தயாராகி, திரைக்கு வராமல் முடங்கி கிடக்கின்றன. மேலும் 200 படங்கள் தயாராகி முடிவடையும் நிலையில் உள்ளன.

உற்பத்தியாளர்கள் பெருகி இருக்கிறார்கள். நுகர்வோர் குறைந்து விட்டார்கள். அதாவது பட தயாரிப்பாளர்கள் அதிகமாகி இருக்கிறார்கள். படங்களை திரையிடும் தியேட்டர்கள் குறைந்து விட்டன.

தமிழ்நாட்டில் முன்பு 2,800 தியேட்டர்கள் இருந்தன. இப்போது, 1,200 தியேட்டர்கள்தான் உள்ளன. மொழி மாற்று படங்களின் ஆதிக்கம் காரணமாக அசல் தமிழ் படங்களுக்கு தியேட்டர்கள் கிடைப்பதில்லை.

சிறு தியேட்டர்கள்…

சினிமா தியேட்டர்களுக்கு ‘லைசென்சு’ கொடுக்கும் முறையை எளிமைப்படுத்தினால், 100 பேர் அல்லது 150 பேர் அமர்ந்து பார்க்கக் கூடிய தியேட்டர்கள் பெருகும். ‘கார் பார்க்கிங்’ வசதி உள்ள கட்டிடங்களில் எல்லாம் தியேட்டர்கள் உருவாகும் சூழ்நிலை ஏற்படும்.

எனவே தியேட்டர்களுக்கு எளிமையான முறையில் ‘லைசென்சு’ கிடைக்க அரசாங்கம் வழி வகை செய்ய வேண்டும். அப்படி செய்தால், தமிழ்நாட்டில் 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் தியேட்டர்கள் வரை உருவாகும்.

மீண்டும் திரைப்பட நகரம்

கடந்த ஆட்சியில் மூடப்பட்ட திரைப்பட நகரை மீண்டும் உருவாக்க வேண்டும். இதற்கு அரசாங்கம் முதலீடு செய்ய தேவையில்லை. முதலீடு செய்வதற்கு தனியார் நிறுவனங்கள் தயாராக உள்ளன. இதன் மூலம் அரசாங்கத்துக்கும் வருமானம் வரும். தனியார் நிறுவனங்களுக்கும் வருமானம் வரும்,” என்றார்.

 

Post a Comment