அடுத்த ஜேம்ஸ் பாண்ட் படத்தின் ஷூட்டிங் இந்தியாவில்!


உலகப் புகழ் பெற்ற ஒற்றன் ஜேம்ஸ் பாண்ட் விரைவில் இந்தியாவுக்கு வரவுள்ளார். அடுத்த ஜேம்ஸ் பாண்ட் படத்தின் ஷூட்டிங்கை இந்தியாவில் நடத்தத் திட்டமிட்டுள்ளனராம்.

டெல்லியின் சரோஜினி நகர் மார்க்கெட் மற்றும் அகமதாபாத்தின் நவகாம் நகர் ஆகிய பகுதிகளில் இப்படத்தின் ஷூட்டிங் நடைபெறவுள்ளதாம். மேலும் மும்பை மற்றும் கோவா கடற்கரைப் பகுதிகளிலும் ஷூட்டிங் நடைபெறும் என்று தெரிகிறது.

இந்தியாவில் ஜேம்ஸ் பாண்ட் படத்தின் ஷூட்டிங்கை நடத்தத் தேவையான அனுமதியை மத்திய ஒளிபரப்புத்துறை அமைச்சகம் ஏற்கனவே கொடுத்து விட்டதாம். பாண்ட் பட வரிசையில் இது 23வது படமாகும். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் டெல்லியில் தொடங்கவுள்ளது. சரோஜினி நகர் மார்க்கெட் தவிர அன்சாரி சாலை, தார்யாகஞ்ச் ஆகிய பகுதிகளிலும் ஷூட்டிங் நடைபெறவுள்ளது. சாம் மென்டிஸ் படத்தை இயக்குகிறார். 2012ல் இப்படம் திரைக்கு வரும். பாண்ட் பட நிறுவனம் மற்றும் அப்படத்தின் முக்கிய கேரக்டரான டாக்டர் நோ ஆகியோருக்கு இது 50வது வருடம் என்பது குறிப்பிடத்தக்கது.

டெல்லி தவிர வடக்கு கோவா, தென் கிழக்கு ரயில்வேயின் கீழ் வரும் துத்சாகர் சுரங்கப் பாதை, ஜூவாரி ரயில் பாலம் ஆகியவற்றிலும் படப்பிடிப்பு நடைபெறுகிறது.

வெளிநாட்டுப் படம் ஒன்றின் ஷூட்டிங் இந்தியாவில் நடைபெறுவது இது முதல் தடவையல்ல. ஏற்கனவே டாம் க்ரூஸ் நடித்த மிஷன் இம்பாசிபிள் உள்பட இதுவரை 22 வெளிநாட்டுப் படங்களுக்கு இந்தியாவில் அனுமதி அளிக்கப்பட்டு படப்பிடிப்பு நடந்துள்ளது.

ஜேம்ஸ் பாண்ட் 007, ஒரு கற்பனைக் கதாபாத்திரமாகும். இயான் பிளமிங் என்ற இங்கிலாந்து எழுத்தாளர் 1953ல் இந்த கதாபாத்திரத்தை வைத்து நூல்களை எழுதினார். மொத்தம் 12 நாவல்களையும், 2 சிறுகதைத் தொகுப்புகளையும் பாண்ட் கேரக்டரை வைத்து அவர் உருவாக்கியுள்ளார். அதை அடிப்படையாக வைத்துத்தான் இதுவரை 22 படங்கள் உருவாகி உலகெங்கும் பாண்ட்டுக்கு கோடிக்கணக்கான ரசிகர்களைத் தேடிக் கொடுத்துள்ளன.

1962ம் ஆண்டு முதல் ஜேம்ஸ் பாண்ட் படங்கள் வெளியாகத் தொடங்கின. முதல் படத்தின் பெயர் டாக்டர் நோ. இது ஜேம்ஸ் பாண்ட் கதைகளில் இடம்பெறும் முக்கிய கேரக்டராகும். 1964ல் பிளமிங் மரணமடைந்தார். இதையடுத்து பின்னர் வெளியான பாண்ட் கதைகளை கிங்ஸ்லி அமிஸ், ஜான் கார்டினர், ரேமான்ட் பென்சன், செபாஸ்டியன் பால்க்ஸ், ஜெப்ரி டீவர் ஆகியோர் எழுதினர்.

ஜேம்ஸ் பாண்ட் வேடத்தில் நடித்த முதல் நடிகர் சீன் கானரி. மொத்தம் 6 படங்களில் அவர் நடித்துள்ளார். அதிகபட்ச ஜேம்ஸ் பாண்ட் படங்களில் நடித்தவர் ரோஜர் மூர். மொத்தம் 7 படங்களில் இவர் நடித்துள்ளார். இவர்களுக்கு அடுத்து, அதிகபட்சமாக 4 படங்கள் வரை பியர்ஸ் பிராஸ்னன் நடித்துள்ளார்.

தற்போது ஜேம்ஸ் பாண்ட் வேடங்களில் நடித்து வருபவர் டேணியல் கிரேக். இவர்தான் இதுவரை நடித்த ஜேம்ஸ் பாண்ட் நடிகர்களிலேயே அதிக அளவில் பிரபலமாகாத பாண்ட் என்பது குறிப்பிடத்தக்கது. பாண்ட் வேடங்களுக்கு நடிக்கப் பொருத்தமில்லாதவர் என்று ரசிகர்களால் விமர்சிக்கப்பட்டவர் கிரேக்.

இயான் புரடக்ஷன்ஸ் நிறுவனம்தான் இப்படங்களைத் தயாரித்து வருகிறது. கடைசியாக வெளியான ஜேம்ஸ் பாண்ட் படம் குவான்டம் ஆப் சொலஸ். 2008ல் இது வெளியானது.
 

மைக்கேல் ஜாக்சனின் தோல் மருத்துவரிடம் விசாரிக்க நீதிமன்ற தடை


லாஸ் ஏஞ்சல்ஸ்: மைக்கேல் ஜான்சனின் இறப்பு வழக்கில், அவரது தோல் டாக்டரையும் சேர்த்து விசாரிக்க, லாஸ் ஏஞ்சல்ஸ் நீதிமன்றம் தடைவிதித்தது.

பிரபல பாப் பாடகரான மைக்கேல் ஜாக்சன் இறப்பிற்கு அதிக அளவில் அளிக்கப்பட்ட தூக்க மாத்திரையே காரணம் என குற்றம் சாட்டப்பட்டது. அது தொடர்பாக, அவரது டாக்டர் கன்ராடு முரேயிடம் விசாரணை நடத்தப்பட்டது.

அப்போது, மைக்கேல் ஜான்சன் பல முறை தோல் அறுவை சிகிச்சை செய்துள்ள நிலையில், தோல் நிபுணராக டாக்டர் அர்னால்டு கெலீன் என்பவரிடமும் விசாரிக்க வேண்டும் என, முரேயின் வழக்கறிஞர் கேட்டுக் கொண்டார்.

ஆனால், இதற்கு நீதிபதி மறுத்துவிட்டார். முன்னதாக, ஜாக்சனின் இறப்பு வழக்கில், சாட்சியளித்த மற்றோரு டாக்டரான ஆடம்ஸ், 20 ஆண்டுகளுக்கு மேலாக ஜான்சனுக்கு சிகிச்சை மேற்கொண்டு வந்தவர் முரே. அவரது இறப்பிற்கு 2 மாதங்களுக்கு முன்வரை முரே தான் சிகிச்சை அளித்து வந்துள்ளார்.

பிரோப்போபோல் மருந்தை, ஜான்சன் விரும்பி உட்கொண்டு வந்தார். அதை அவர் செல்லமாக பால் என்றே அழைப்பார். இந்த மருந்தை தருமாறு, ஜாக்சன் பலமுறை முரேயிடம் கேட்டுள்ளார். என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மைக்கேல் ஜான்சனின் வழக்கில் சிக்கியுள்ள டாக்டர் முரேயின் குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படலாம் என தெரிகிறது. அடுத்தகட்ட விசாரணை செப்டம்பர் 8ம் தேதி நடைபெற உள்ளது.
 

நட்புக்காக பணம் வாங்காமல் கமல்ஹாஸன் நடித்த 'அன்புள்ள கமல்'


தெனாலி, பஞ்சதந்திரம் ஆகிய படங்களை அடுத்து மலையாள நடிகர் ஜெயராமுடன் உலக நாயகன் கமலஹாசன் நடித்த படம் போர் பிரண்ட்ஸ்.

மலையாளப் படமான இதில் கமல் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நட்புக்காக நடித்துக் கொடுத்துள்ளார். பொதுவாக இம்மாதிரி சிறப்புத் தோற்றத்துக்கு நல்ல சம்பளம் வாங்கிவிடுவார்கள் கமல் ரேஞ்சில் உள்ள நடிகர்கள். ஆனால் இந்தப் படத்துக்கு காசே வாங்காமல் நடித்துக் கொடுத்துள்ளார் அவர்.

இப்படத்தை தமிழில் 'அன்புள்ள கமல்' என்ற பெயரில் மொழிமாற்றம் செய்து வெளியிடப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இப்படம் தமிழிலும் வெற்றியைக் குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தில் கமலுடன் ஜெயராம், ஜெயசூர்யா, குஞ்சாக்கோ போபன், மீரா ஜாஸ்மின் உட்பட பலர் நடித்துள்ளனர்.

சாஜி சுரேந்திரன் இயக்கி உள்ளார். விரைவில் இந்தப் படம் வெளியாகவிருக்கிறது.
 

மம்தாவுக்கு பஹ்ரைன் மாப்பிள்ளை!


மம்தா மோகன்தாஸின் மாப்பிள்ளையாக பஹ்ரைனில் வசிக்கும் அவரது பால் நண்பரை முடிவு செய்துள்ளனர் பெற்றோர்.

சிவப்பதிகாரம் படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர் மம்தா மோகன்தாஸ். குசேலன், குரு என் ஆளு போன்ற படங்களில் நடித்தார். தற்போது அருண் விஜய் ஜோடியாக தடையற தாக்க படத்தில் நடித்து வருகிறார்.

தெலுங்கு மற்றும் கன்னடத்தில் அவர் படங்கள் நடித்து வருகிறார். சினிமாவுக்கு பின்னணியும் பாடி வருகிறார்.

மம்தாவுக்கு திருமணம் செய்ய முடிவு செய்த பெற்றோர் தீவிரமாக மாப்பிள்ளை தேடி வந்தனர்.

தற்போது அவருக்குப் பொருத்தமான வரனை முடிவு செய்துவிட்டனர். மம்தாவின் சிறு வயது நண்பரையே மாப்பிள்ளையாக தேர்வு செய்துள்ளனர். இவர் பக்ரைனில் வசிக்கிறார். திருமண நிச்சயதார்த்தம் நவம்பரில் நடக்கிறது. அடுத்த வருடம் திருமணத்தை நடத்த முடிவு செய்துள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

திருமணத்துக்கு பிறகு சினிமாவுக்கு முழுக்கு போட்டு விட்டு வெளிநாட்டில் தங்க முடிவு செய்துள்ளாராம் மம்தா.
 

மங்காத்தா - சினிமா விமர்சனம்


நடிப்பு: அஜீத், த்ரிஷா, அர்ஜுன், அஞ்சலி, லட்சுமி ராய், ஜெயப்பிரகாஷ், பிரேம்ஜி
ஒளிப்பதிவு: சக்தி சரவணன்
இசை: யுவன் சங்கர் ராஜா
இயக்கம்: வெங்கட் பிரபு
தயாரிப்பு: க்ளவுட் நைன் மூவீஸ்

பிஆர்ஓ: விகே சுந்தர் - சுரேஷ் சந்திரா

பெரும் எதிர்ப்பார்ப்புக்கிடையே வந்துள்ள அஜீத்தின் பொன்விழாப் படம் மங்காத்தா. அஜீத்துக்காக இந்த ஆட்டத்தில் வென்றிருக்கிறார் இயக்குநர் வெங்கட் பிரபு என்பதுதான் சரியாக இருக்கும். உள்ளூர் சமாச்சாரத்தை கொஞ்சம் ஹாலிவுட் சாயத்தில் முக்கியெடுத்திருக்கிறார். களைகட்டுகிறது ஆட்டம்!

இந்தியாவின் நிஜ சூதாட்டமான ஐபிஎல் கிரிக்கெட்டில், பெட்டிங் பணமாக கட்டப்படும் ரூ 500 கோடியை அப்படியே தனதாக்கிக் கொள்ள திட்டமிடுகிறார் ஜெயப்பிரகாஷ். இவர்தான் கிரிக்கெட் சூதாட்டத்தின் முக்கியப் புள்ளி.

இந்தப்பணத்தை அவரிடமிருந்து பறிக்கத் திட்டமிடுகின்றனர், ஜெயப்பிரகாஷிடம் வேலைப் பார்க்கும் வைபவ் உள்ளிட்ட நால்வர் கோஷ்டி. இன்னொரு பக்கம், இந்த சூதாட்டத் தொகை பற்றி கேள்விப்படும் போலீஸ் உஷாராகி, அர்ஜுன் தலைமையில் ஒரு போலீஸ் படையை மும்பையில் களமிறக்குகிறது. விஷயம் புரிந்து உஷாராகிறது வைபவ் கோஷ்டி. அப்போதுதான் இந்த நால் அணியை மோப்பம் பிடித்து, அவர்கள் மூலமே விஷயத்தைக் கறந்துவிடுகிறார் அஜீத். சஸ்பென்ட் செய்யப்பட்ட போலீஸ் அதிகாரி இவர்.

இப்போது இவரும் அந்த ரூ 500 கோடியை தானே திட்டமிட்டுக் கொள்ளையடிக்கிறார் அஜீத். அந்தப் பணத்துக்காக அஜீத், ஜெயப்பிரகாஷ், போலீஸ் அதிகாரி அர்ஜூன் மற்றும் அஜீத்தின் உடனிருக்கும் நால்வரும் பெரும் சேஸிங்கை நடத்துகின்றனர். இதில் யார் ஜெயிக்கிறார்கள் என்பதுதான் மங்காத்தா ஆட்டத்தின் க்ளைமாக்ஸ்.

தனது 50 வது படத்தை முன்னணி கலைஞர்களுடன் இணைந்து பங்குபோட்டுக் கொண்ட அஜீத்தின் பக்குவத்தைப் பாராட்டத்தான் வேண்டும்.

கிட்டத்தட்ட சரிபாதி வெளுத்த நரை, ஐந்தாறு நாள் தாடி, அசத்தலான கறுப்புக் கண்ணாடி கெட்டப்பில் மனதை அள்ளுகிறார் அஜீத். இதற்கு முன் முன்னெப்போதும் பார்த்திராத ஒரு அசத்தல் தோற்றம் இந்தப் படத்தில். எதிர்மறை நாயகன் வேடம் என்றாலே பலவித நடிப்பையும் பரீட்சித்துப் பார்க்கும் ஒரு சுதந்திரமும் தைரியமும் வந்துவிடுகிறது போலும். நடிப்பில் ரசிகர்களுக்கு நல்ல விருந்தே படைத்துவிடுகிறார் அஜீத். சண்டை, நடனம், ரொமான்ஸ் என கிடைத்த இடைவெளிகளிலெல்லாம் பவுண்டரி, சிக்ஸர் என வெளுத்திருக்கிறார் அஜீத்.

பல ஆண்டுகளுக்கு தனது 50வது படம் இது என தைரியமாக அவர் சொல்லிக் கொள்ளலாம்.

அஜீத்துக்கு இணையான வேடத்தில் ஆக்ஷன் கிங்காக ஜொலிப்பவர் அர்ஜூன். நடிக்க வந்து இத்தனை ஆண்டுகள் கழித்தும் சண்டைக் காட்சிகள், சேஸிங்குகளில் அர்ஜுன் காட்டும் வேகம் அசாத்தியமானது. ஆங்கிலத்தில் Show stealer என்பார்களே, அது சாட்சாத் அர்ஜூன்தான்!

ஹீரோயின் த்ரிஷாவுக்கு பெரிய ரோல் இல்லைதான். ஆனால் கிடைத்த வாய்ப்பை அழகாகப் பயன்படுத்தி மனதை கவர்கிறார். குறிப்பாக, ரொம்ப அழகாக இருக்கிறார், இதற்கு முந்தைய படங்களில் பார்த்ததை விட!

பிரேம்ஜி வழக்கம்போல. ஆனால் கடி கொஞ்சம் ஓவர். கத்தரி போட்டிருக்கலாம் சில காட்சிகளுக்கு. அஞ்சலியை வீணடித்திருக்கிறார்கள்.

மங்காத்தா பாடலில் லட்சுமிராய் அசத்தல். ஆண்ட்ரியா, வைபவ், ஜெயப்பிரகாஷ் என அனைவரிடமிருந்தும் ஒரு ஆக்ஷன் படத்துக்குத் தேவையானதை பெற்றுக் கொண்டுள்ளார் இயக்குநர்.

மைனஸ் என்று பார்த்தால் படத்தில் வரும் கெட்ட வார்த்தைகள். சென்ஸார் ஊமையாக்கிய பகுதிகளில் இடம்பெறும் வசனங்களை பாத்திரங்களின் வாயசைவை வைத்தே ரசிகர்கள் கண்டுபிடித்து கத்துகிறார்கள். இதை பெண்களால் ரசிக்க முடியுமா (வெளிப்படையாக!) என்பதை யோசித்திருக்க வேண்டும்.

ஆரம்ப காட்சிகள் கொஞ்சம் இழுவைதான். பாத்திரங்களை அறிமுகப்படுத்தவே அரைமணிநேரத்துக்கும் மேல் இயக்குநர் எடுத்துக் கொண்டது சலிப்பை தருகிறது. அஜீத், அர்ஜூன் நன்றாக சண்டை போடுவார்கள் என்பதற்காக எவ்வளவு நேரம்தான் அதையே பார்த்துக் கொண்டிருப்பது என்ற கேள்வி எழுவதை தவிர்க்க முடியவில்லை.

டெக்னிக்கலாகப் பார்த்தால், இந்தப் படம் சின்ன பட்ஜெட்டில் ஹாலிவுட் ஸ்டைலில் எடுக்கப்பட்ட படம் எனலாம். ஒளிப்பதிவில் ஜாலம் காட்டியிருக்கிறார் சக்தி சரவணன்.

யுவன் சங்கர் ராஜாவை இன்னொரு ஹீரோ எனலாம். பாடல்கள் எல்லாமே அட்டகாசம். ரசிகர்கள் ஆடித் தீர்க்கிறார்கள் அரங்கில். பின்னணி இசையும் விறுவிறுப்பு கூட்டுகிறது படத்துக்கு.

இந்தப் படத்தின் விளம்பரங்களில் எ வெங்கட் பிரபு கேம் என விளம்பரப்படுத்துகிறார்கள். அது உண்மைதான். அஜீத்துக்காக வெங்கட் ஆடிய இந்த ஆட்டத்தில் 'தல' டாப் கியரில் எகியிருக்கிறார்!
 

'டர்ட்டி பிக்சர்ஸ்' வித்யா பாலனின் 'ஹாட்' படங்கள் வெளியீடு


80களில் தென்னிந்தியத் திரையுலகைக் கலக்கிய கவர்ச்சி நாயகி சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக வைத்து உருவாகி வரும் டர்ட்டி பிக்சர்ஸ் படத்தின் நாயகி வித்யா பாலனின் படு ஹாட்டான படங்கள் வெளியாகியுள்ளன.

சில்க்கின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து உருவாகி வரும் படம் டர்ட்டி பிக்சர்ஸ். இதில் சில்க் வேடத்தில் வித்யா பாலன் நடிக்கிறார். நஸிருதீன் ஷா உள்ளிட்டோரும் படத்தில் உள்ளனர்.

இதில் வித்யா பாலன் படு கவர்ச்சிகரமாக பல காட்சிகளில் நடித்துள்ளார். அந்த புகைப்படங்களும், சூடான டிரெய்லரும் தற்போது வெளியாகியுள்ளது.

இதில் 80களில் உருவான திரைப்படங்களின் பாணியில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. சில்க் போன்றே கவர்ச்சிகரமான காஸ்ட்யூம்களில் படு கவர்ச்சியாக காட்சியளிக்கிறார் வித்யா பாலன்.

இந்தப் படங்களைப் பார்க்கும்போது சில்க் வேடத்தில் நடிக்க பொருத்தமில்லாதவர் வித்யா என்ற வாதம் அடிபட்டுப் போகும் என்றே தெரிகிறது.
 

மாற்றானிலிருந்து பிரகாஷ்ராஜ் நீக்கம்!


கால்ஷீட் சொதப்பல் மற்றும் சரியான நேரத்துக்கு ஷூட்டிங்கில் பங்கேற்காதது போன்ற விஷயங்களில் பிரகாஷ்ராஜுக்கு நிகர் யாருமில்லை என்பது தமிழ், தெலுங்கு சினிமா தயாரிப்பாளர்கள் - இயக்கநர்களுக்கு அத்துப்படி.

இதற்காக இருமுறை தெலுங்கு திரையுலகம் அவருக்கு தடை விதித்து பின்னர் மன்னித்துவிட்டது. இடையில் சில காலம் திருந்திவிட்டதாகக் கூறிவந்தார்.

ஆனால் இப்போது மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறிவிட்டது.

கே வி ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் மாற்றான் படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் தொடங்கியது. இதில் பிரதான வேடத்தில் நடிக்கிறார் பிரகாஷ்ராஜ்.

இந்தப் படத்தின் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்ட போது தாமதமாக வந்த பிரகாஷ்ராஜ், தனக்கு கொடுக்கப்பட்ட விக் சரியாக இல்லை என்று கூறி, நடிக்க மறுத்துவிட்டாராம். ஆனால் காட்சிப்படி அந்த விக் மற்றும் லுக் அவசியம் என்பதில் பிடிவாதமாக இருந்துள்ளார் இயக்குநர் கேவி ஆனந்த்.

ஆனால் இயக்குநரின் பேச்சை கேட்காத பிரகாஷ்ராஜ், படப்பிடிப்புத் தளத்திலிருந்து வெளியேறிவிட்டாராம். இதனால் அன்றைய படப்பிடிப்பையே ரத்து செய்ய வேண்டிய நிலை. அடுத்தடுத்த இரு நாட்களும் பிரகாஷ்ராஜ் ஒத்துழையாமையால் படப்பிடிப்பு தடைபட, படத்திலிருந்தே பிரகாஷ்ராஜை தூக்கிவிட்டார் ஆனந்த்.

இப்போது பிரகாஷ்ராஜுக்குப் பதில் பாலிவுட் நடிகர் சச்சின் கெட்கேகர் நடிக்கிறார். தெய்வத்திருமகள் படத்தில் அமலா பாலுக்கு அப்பாவாக நடித்தவர் கெட்கேகர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

ரிலீஸானது மங்காத்தா-ரசிகர்கள் அமோக வரவேற்பு-அதிரடி வெற்றி!


அஜீத்தின் மங்காத்தா படம ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றுள்ளது. பல தடைகளைக் கடந்து பெரும் எதிர்ப்பார்ப்புகிடையில் வெளியான அஜீத்தின் பொன்விழாப் படமான மங்காத்தாவை அஜீத்தின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

பில்லா படத்துக்குப் பிறகு சொல்லிக் கொள்ளும்படி அஜீத்துக்கு படமே அமையாத நிலையில், இந்த மங்காத்தா படத்தை அவர் ஒப்புக் கொண்டார்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் தயாநிதி அழகிரியின் தயாரிப்பில் கடந்த ஓராண்டாக இந்தப் படம் தயாராகி வந்தது. ஆனால் வெளியாகும்போது பல்வேறு சிக்கல்களை இப்படம் சந்தித்தது. படம் வெளியாகும் தேதியை கூட அறுதியிட்டு கூறமுடியாத நிலை.

ஆனால் கடைசி நேரத்தில் ரெட்ஜெயன்ட் உதயநிதி ஸ்டாலின் தலையிட்டு, படத்தை சன் பிக்சர்ஸ் மூலம் வெளியிட வைத்தார். உடன் ராதிகாவின் சரத்குமாரின் ராடான் மீடியாவும் படத்தை இணைந்து வெளியிட்டது.

இன்று காலை படத்தின் முதல்காட்சிக்கு அனைத்து இடங்களிலும் கூட்டம் அலைமோதியது. சிறப்புக் காட்சிகள் காலை 4 மணியிலிருந்தே ஆரம்பித்துவிட்டன. படம் பார்த்த அத்தனை பேரும் மீண்டும் படத்தைக் காண டிக்கெட்டுகளுக்காக அலைய ஆரம்பித்துள்ளனர்.

ரம்ஜான், விநாயகர் சதுர்த்தி மற்றும் அடுத்த இரு தினங்களில் வாரவிடுமுறை என தொடர்ந்து ஹாலிடே மூடில் உள்ள ரசிகர்களுக்கு பெரும்திரை விருந்தாக மங்காத்தா அமைந்துவிட்டது. இந்த ஒரு வாரத்தில் பல கோடிகளை மங்காத்தா அள்ளிவிடும் என்பதால் திரையரங்க உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

ரசிகர்களுடன் ரசித்தார் சிம்பு

இன்று காலை சத்யம் தியேட்டரில் மங்காத்தா படத்தை நடிகர் சிம்பு அஜீத் ரசிகர்களுடன் இணைந்து படம் பார்த்து ரசித்தார்.சிம்பு, தான் ஒரு அஜீத் ரசிகர் என்பதை பகிரங்கமாகவே பிரகடனப்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

இல்ல இல்ல... செப்டம்பர் மாசம்தான்! - நயன், பிரபுதேவா அறிவிப்பு


நயன்தாராவுக்கும் பிரபு தேவாவுக்கும் இரு தினங்களுக்கு முன் ரகசியமாக மும்பையில் திருமணமாகிவிட்டது என நேற்று தகவல் வெளியானது. ஆனால் இதனை இருவரும் மறுத்துவிட்டனர்.

தங்களுக்கு செப்டம்பர் மாதம்தான் திருமணம் நடக்க உள்ளது என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

பிரபுதேவா இயக்கிய செய்த வில்லு படத்தின் கதாநாயகியாக நயன்தாரா நடித்தார். அப்போது இரண்டு பேருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இரண்டு பேரும் திருமணம் செய்ய முடிவு செய்தனர். இதற்கு பிரபுதேவாவின் மனைவி ரமலத் முதலில் எதிர்ப்பு தெரிவித்தார்.

இதுதொடர்பாக குடும்பநல கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் சமாதானமடைந்து விவாகரத்துக்கு ரமலத் சம்மதித்தார். அதைத் தொடர்ந்து 2 பேருக்கும் விவாகரத்து வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு கூறியது.

பிரபுதேவாவை திருமணம் செய்வதற்கு வசதியாக நயன்தாரா கிறிஸ்தவ மதத்தில் இருந்து மாறி இந்து மதத்தை தழுவினார்.

இதைத் தொடர்ந்து இருவருக்கும் சில தினங்களுக்கு முன் மும்பையில் திருமணம் நடந்ததாக தகவல் வெளியானது. இதை நயன்தார்-பிரபுதேவா இருவருமே மறுத்துவிட்டனர்.

செப்டம்பரில் தங்கள் திருமணம் நடக்கும் என்றும், இந்தத் திருமணம் மும்பை அல்லது ஹஐதராபாத்தில் விமரிசையாக நடைபெறும் என்றும் தெரிகிறது.
 

செட்டியார்களை இழிவுபடுத்துகிறதா புலிவேஷம்?


செட்டியார்களை இழிபடுத்துவது போல புலிவேஷம் படத்தில் காட்சிகள் வைக்கப்பட்டுள்ளதாக எழுந்துள்ள புகாரை மறுத்துள்ளார் படத்தின் நாயகன் ஆர்கே.

சேலத்தில் ஆர்ய வைஸ்ய முன்னேற்ற பேரவை மற்றும் அனைத்து செட்டியார்கள் முன்னேற்ற பேரவையின் ஆலோசனை கூட்டம் நடந்தது.

இந்த கூட்டத்தில், "புலிவேசம் படத்தில் செட்டியார் இன மக்களை இழிவுப்படுத்தி பேசும் காட்சிகளை உடனே நீக்க வேண்டும்" என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதுகுறித்து படத்தின் நாயகன் ஆர்கே கூறுகையில், "யாரையும் இழுவபடுத்தும் நோக்கமே நமக்கில்லை. படத்தில் கதைச் சூழலுக்கேற்பவே பாத்திரங்களும் வசனங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. எனவே இதனை ஒரு சினிமாவாக மட்டும் பார்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன்," என்றார்.
 

விறுவிறு மங்காத்தா புக்கிங்: திரையரங்கு உரிமையாளர்கள் மகிழ்ச்சி


மங்காத்தா முதல் நாள் ஷோவுக்கான டிக்கெட் புக்கிங் படுவேகத்தில் நடந்து வருகிறது.

அஜித்தின் 50வது படமான மங்காத்தா நாளை(31-ம் தேதி) ரிலீஸ் ஆகிறது. முதல் நாளே தல படத்தைப் பார்த்துவிட வேண்டும் என்ற ஆசையில் ரசிகர்கள் டிக்கெட் முன்பதிவு செய்ய திரையரங்குகளில் குவிந்த வண்ணம் உள்ளனர்.

திரையரங்குகள் இப்போதே திருவிழாக் கோலம் பூண்டுள்ளது. ரசிகர்கள் கூட்டத்தைப் பார்த்து திரையரங்கு உரிமையாளர்கள் பூரித்துப் போயுள்ளனர். அட ஆன்லைன் புக்கிங்கையும் தல ரசிகர்கள் விட்டுவைக்கவில்லை. அங்கும் செம் புக்கிங் தான்.

ராதிகா சரத்குமாரின் ராடான் மீடியாவுடன் சேர்ந்து சன் பிக்சர்ஸ் மங்காத்தாவை வினியோகம் செய்துள்ளது. நாளை தமிழகத்தில் 300 திரையரங்குகளில் மங்காத்தா திரையிடப்படுகிறது. நாளை ரம்ஜான், மறுநாள் விநாயகர் சதுர்த்தி எனக் கொண்டாட்டங்கள், விடுமுறைகள் வருவதால் திரையரங்குகளில் நல்ல கூட்டம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெங்கட் பிரபுவின் இந்த படத்தில் அர்ஜுன், திரிஷா, ஆன்ட்ரியா, அஞ்சலி, லக்ஷ்மி ராய், பிரேம்ஜி அமரன், வைபவ் என்று ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே உள்ளது. இருப்பினும் தல தான் முக்கிய கதாபாத்திரத்தில் வந்து கலக்கவிருக்கிறார்.
 

ஜெய்ப்பூரில் ஒட்டக சவாரி செய்த அசின்!


இந்திப் படப்பிடிப்பின்போது ஜெய்ப்பூரில் ஒட்டக சவாரி செய்து மகிழ்ந்துள்ளார் நடிகை அசின்.

இந்தியாவின் பிங்க் சிட்டி என்று புகழப்படும் ஜெய்ப்பூருக்கு படப்பிடிப்புக்காக வந்திருந்தார் அசின். போல்பச்சன் எனும் இந்திப் படத்துக்காக அபிஷேக் பச்சனுடன் நடிக்கும் அவர், படப்பிடிப்பு இடைவேளையில், ஜெய்ப்பூரின் புகழ்பெற்ற ஒட்டக சவாரியை அனுபவித்தார்.

இந்த அனுபவம் குறித்து பின்னர் அசின் பேசுகையில், "படப்பிடிப்புக்காகத்தான் இந்த ஊருக்கு வந்தேன். ஆனால் இயக்குனர் ரோகித்ஷெட்டி, ஜெயப்பூர் பகுதியைச் சுற்றி பார்க்க வருமாறு அழைத்தார். எனக்கும் அங்குள்ள மக்களின் வாழ்க்கை மற்றும் கலாச்சாரத்தை அறிந்து கொள்ள ஆர்வமாக இருந்தது.

பல்வேறு பகுதிகளுக்குச் சென்றேன். ஒட்டகம் மற்றும் யானையில் சவாரி செய்தும் இடங்களை சுற்றி பார்த்தேன். யானையை விட ஒட்டக சவாரி வித்தியாச அனுபவமாக இருந்தது. ஜெய்ப்பூரில் ஷாப்பிங் செய்ய எக்கச்சக்கமாக உள்ளது," என்றார்.

விட்டால் ராஜஸ்தான் மாநில சுற்றுலாத்துறை பிஆர்ஓ ஆகிவிடுவார் போலிருக்கிறது
 

ஓவர் ஆக்டிங் கொடுக்கிறார் அசின்-ஜெனிலியா கடுப்புத் தாக்குதல்!


காக்க காக்க தெலுங்கு ரீமேக்கில் அசின் ஓவர் ஆக்டிங் செய்து கெடுத்திருக்கிறார் என்று இந்தி காக்க காக்கவில் நடித்த ஜெனிலியா குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழில் சூர்யா, ஜோதிகா நடிப்பில் வெளியான காக்க காக்க படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டது. அதில் ஜான் ஆபிரகாம், ஜெனிலியா நடித்துள்ளனர். தெலுங்கு ரீமேக்கில் ஜோதிகா கதாபாத்திரத்தில் அசின் நடித்துள்ளார்.

அன்மையில் இந்தி காக்க காக்க படத்தின் உயிரின் உயிரே பாடல் சிடி வெளியிடப்பட்டது. அதைப் பார்த்த அசின் வாயை வைத்துக் கொண்டு சும்மா இல்லாமல் ஜெனிலியாவின் நடிப்பை தாக்கிப் பேசினார்.

நான் தெலுங்கில் கஷ்டப்பட்டு நடித்தேன். கதாபாத்திரமாகவே வாழ்ந்த உணர்வு இருந்தது. ஆனால் ஜெனிலியா உயிரின் உயிரே பாடல் காட்சியை சொதப்பியுள்ளார். பாடலை கொலை செய்வது போல நடித்து கெடுத்துள்ளார் என்றார் அசின்.

அப்படியா சங்கதி இதோ வாரேன் என்று வரிஞ்சுக் கட்டிக் கொண்டு வந்த ஜெனிலியா கூறியதாவது,

தமிழ் காக்க காக்க படத்தில் ஜோதிகா அபாரமாக நடித்திருந்தார். அதில் அவர் ரொம்ப அழகாக இருந்தார். ஆனால் அதன் தெலுங்கு ரீமேக்கில் அசின் ஒரே சொதப்பல். ஓவர் ஆக்டிங் பண்ணி கதாபாத்திரத்தையே கெடுத்துவிட்டார். ஜோதிகா நடிப்பை காப்பியடித்து நடித்திருக்கிறார்.

ஆனால் நான் இந்தியில் எனக்கே உரிய ஸ்டைலில் நடித்துள்ளேன். யாரையும் காப்பியடிக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை என்றார்.

இதைப் பார்த்தா ஏதோ குழாயடியில உக்காந்து காபி சாப்டுக்கிட்டே அடிதடியைப் பார்த்த 'எபக்ட்' கிடைக்குதுல்ல?!

Actress Asin and Genelia finds fault of one another's acting in the remake of Tamil film Kakka Kakka. Asin did the lead role in telugu remake while Genelia in Hindi.
 

புலிவேஷம் - திரைப்பட விமர்சனம்


நடிப்பு: ஆர்கே, கார்த்திக், சதா, திவ்யா பத்மினி, கஞ்சா கருப்பு, இளவரசு
ஒளிப்பதிவு: கருணாமூர்த்தி
இசை: ஸ்ரீகாந்த் தேவா
பிஆர்ஓ: ஜான்
இயக்கம்: பி வாசு
தயாரிப்பு: ஆர் கே வேர்ல்ட்ஸ்

எல்லாம் அவன் செயல், அழகர் மலை படங்களுக்குப் பிறகு ஆர்கே நாயகனாக நடித்து வந்துள்ள படம் புலிவேஷம். பி வாசு இயக்கியுள்ள இந்தப் படத்தின் ஆரம்ப காட்சிகள் ஒரு புதிய அனுபவத்தைத் தந்தன என்றால் மிகையல்ல. குறிப்பாக அந்த 5 நிமிட டைட்டில்.

ஒவ்வொரு கேரக்டருக்கும் ஒரு பளிச் பிளாஷ்பேக் என்ற வித்தியாசமான படமாக்கலைப் பயன்படுத்தியிருக்கிறார் வாசு.

முதலாளி இளவரசுவின் மகள் திவ்யாவை உயிராக மதிக்கும் வேலைக்காரன் முனியன் (ஆர்கே). திவ்யாவைத் தொடும் கைகள் அவரது தந்தையுடையது என்றாலும் மறித்து திருப்பியடிக்கத் தயங்காதவன். அதேநேரம் இது உண்மையான பாசம், காதலில்லை.

ஆனால் இதை தவறாக சித்தரித்து முனியனை வீட்டைவிட்டே விரட்டக் காரணமாகிறாள் இளவரசுவின் வைப்பாட்டி. ஊரைவிட்டே செல்லும் முனியனுடன், அவனுக்கே தெரியாமல் பஸ் ஏறி விடுகிறாள் திவ்யா. பஸ் சென்னைக்கு வந்த பிறகுதான் திவ்யாவும் வந்திருப்பது முனியனுக்கு தெரிகிறது. பதறிப் போய் அவளை மீண்டும் கிராமத்தில் கொண்டுவிட முடிவு செய்கிறான் முனியன். அப்போதுதான் அந்த விபரீதம் நடக்கிறது.

பெரிய விஐபிக்களுக்காக பெண்களைக் கடத்தி விபச்சாரத்தில் ஈடுபடுத்தும் எம்எஸ் பாஸ்கர், மன்சூரலிகான் கும்பல் திவ்யாவையும் கடத்தப்பார்க்கிறது. ஆனால் அந்த நேரம் திவ்யா விஷக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டவள் என்பதால் காரிலிருந்தே உருட்டிவிட்டுவிடுகிறார்கள். இதில் தலையில் அடிபட்டு நினைவிழக்கிறாள் திவ்யா. அவளை மருத்துவமனையில் சேர்க்கிறான் முனியன். சிகிச்சைக்கு லட்ச லட்சமாய் பணம் தேவைப்பட, வேறு வழியின்றி அடியாளாக மாறுகிறான் முனியன்.

திவ்யா பிழைத்தாளா... முனியன் அவளை கிராமத்துக்கு கொண்டு போய் விட்டானா? என்பது க்ளைமாக்ஸ்.

படத்தின் முதல் பாதியை வித்தியாசமான அமைத்த இயக்குநர் வாசு, இரண்டாம் பாதியில் தனது சின்னத்தம்பி, காக்கைச் சிறகினிலே பாணிக்குத் தாவிவிட்டார். ஆனாலும் சுவாரஸ்யமாகவே கொண்டுபோகிறார்.

எல்லாம் அவன் செயல், அழகர் மலைக்குப் பிறகு ஆர்கே முழு நீள நாயகனாக வந்திருக்கும் படம் இது. முதல் இரு படங்களை விட நடிப்பில் அதிகமாகவே ஸ்கோர் செய்துள்ள படம் இது. குறிப்பாக ஆக்ஷன் காட்சிகளில் அவரது சண்டைகள் நம்பும்படி அமைக்கப்பட்டுள்ளன.

நடு இரவில் மரத்தின் மேல் நடக்கும் அந்த சண்டைக்காட்சி அசத்தல். படத்தில் இரு நாயகிகள் என்றாலும், அதிக ரொமான்ஸ் காட்சிகளை வைத்து சங்கடப்படுத்தாதது ஆறுதல்.

ஒரு பக்கம் கூட்டாளிகள் கொல்லப்பட, இந்தப் பக்கம் திவ்யாவை பத்திரமாக அப்பாவுடன் சேர்க்க வேண்டிய இக்கட்டான சூழலை உணர்ந்து ஆர்கே கண்ணீர் வடிக்கும் இடத்தில் நெகிழ வைக்கிறார்.

சதா நாயகி என்றாலும் பெரிய வேலையில்லை. படத்தில் அவர் ரகசிய போலீசாய் வந்து ஆர்கேயின் ரகசியங்களை வேவு பார்க்கிறார். தோற்றம், நடிப்பு இரண்டுமே சொல்லிக் கொள்ளும்படி இல்லை.

திவ்யா பத்மினியின் தோற்றம், நடிப்பு இரண்டுமே ஓகே.

போலீஸ் ஆபீஸராக வரும் கார்த்திக் பெரிதாக ஏதோ செய்வார் என்று பார்த்தால், அவர் இந்த ரவுடிகளை நீங்கதான் முடிச்சுக் கொடுக்கணும் என ஆர்கேவிடம் சரணடைவது வேடிக்கை.

இளவரசு கஞ்சா கருப்பு, ஆசிஷ் வித்யார்த்தி என அனைவரும் கொடுத்த வேலையைச் செய்திருக்கிறார்கள். நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.

ஸ்ரீகாந்த் தேவா இசையில் இரண்டு பாடல்கள் ஓகே. குறிப்பாக அந்த வாரேன் வாரேன் பாடல் உதடுகளில் ஒட்டிக் கொள்கிறது.

கருணாமூர்த்தியின் ஒளிப்பதிவு அருமை. ஸ்டன்ட், எடிட்டிங் இரண்டுமே குறிப்பிட்டுச் சொல்லப்படும் அளவுக்கு உள்ளன.

பல காட்சிகளில் வாசுவின் அனுபவ முத்திரை தெரிகிறது. ஆனால் இத்தனை நீளமாக படத்தை இழுக்காமல், இன்னும் நச்சென்று, வேகமான படமாகக் கொடுத்திருந்தால் புலிவேஷம் ரேஞ்ச் வேறுமாதிரி இருந்திருக்கும்.

ஆனாலும் இப்பொழுது வருகிற காமா சோமா படங்களுக்கு இந்த புலிவேசம் எவ்வளவோ பரவாயில்லை. ஒரு முறை பார்த்து ரசிக்கலாம்!
 

3 பேர் உயிரை காப்பாற்ற பெண் வக்கீல்கள் 4வது நாளாக உண்ணாவிரதம்- டி.ராஜேந்தர், பாரதிராஜா நேரில் ஆதரவு


சென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள சாந்தன், பேரறிவாளன், முருகன் ஆகியோரின் தண்டனையை ரத்து செய்ய வலியுறுத்தி சென்னை உயர்நதிமன்ற பெண் வக்கீல்களின் உண்ணாவிரத போராட்டம் நேற்று 4-வது நாளாக நீடித்தது.

இவர்களின் இந்த காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்துக்கு நடிகர் டி.ராஜேந்தர், இயக்குனர் பாரதிராஜா உள்ளிட்டோர் நேற்று நேரில் சென்று ஆதரவு தெரிவித்தனர்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட இருக்கும் சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகிய 3 பேரது தண்டனையை குறைக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்ற பெண் வக்கீல்கள் கயல்விழி, அங்கையற்கன்னி, வடிவாம்பாள் ஆகியோர் கோயம்பேடு பஸ் நிலையம் அருகில் கடந்த 26-ந் தேதி உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர்.

நேற்று அவர்களின் உண்ணாவிரதம் போராட்டம் 4-வது நாளாக நீடித்தது. கடந்த 3 நாட்களில் தண்ணீர் மட்டும் அருந்துவதால் அவர்கள் மிகுந்த சோர்வுடன் காணப்பட்டனர். உட்கார முடியாமல் படுத்தபடி இருந்தனர். அவர்களின் உண்ணாவிரதத்துக்கு தமிழ் உணர்வாளர்கள் பலர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

நேற்று காலை லட்சிய திராவிட முன்னேற்ற கழக தலைவர் டி.ராஜேந்தர், பேராசிரியர் சுப.வீரபாண்டியன், நடிகர்கள் மன்சூர் அலிகான், கருணாஸ், பாடலாசிரியர் முத்துக்குமார், குன்னங்குடி அனிபா ஆகியோர் ஆதரவு தெரிவித்து பேசினார்கள்.

நேற்று மாலையில் நக்கீரன் ஆசிரியர் நக்கீரன் கோபால், திரைப்பட இயக்குனர் பாரதிராஜா ஆகியோர் போராட்டம் வெற்றிபெற வாழ்த்தினர்.

பாரதிராஜா நேரில் ஆதரவு:

இயக்குனர் பாரதிராஜா பேசும்போது, ஒரு கொலைக்கு இன்னொரு கொலை எப்போதும் தீர்வாகாது. தமிழ்நாடு முழுவதும் இந்த போராட்டம் தொடரட்டும், வெற்றி பெறட்டும் என்றார்.

மேலும், உண்ணாவிரத பந்தலுக்கு வெளியே கல்லூரி மாணவர்கள், பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தினார்கள். தமிழக அரசை வலியுறுத்தியும், 3 பேர்களை காப்பாற்றக்கோரி இறந்த செங்கொடியின் கனவை நனவாக்க வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பியும், தூக்கு கயிற்றின் முன்னால் நின்றும் போராட்டங்களை நடத்தினர்.
 

சாமி கும்பிடறேன்... டிஸ்டர்ப் பண்ணாதீங்க! - ஸ்ரேயா


திருமலையில் சாமி கும்பிட வந்த தன்னை ரசிகர்கள் சூழந்து கொண்டதால் டென்ஷனான ஸ்ரேயா, சாமி கும்பிட வந்த என்னை ரசிகர்கள் தொந்தரவு செய்யலாமா என்று கேட்டுள்ளார்.

நடிகை ஸ்ரேயா தனது தாயாருடன் திருமலைக்கு சாமிகும்பிட வந்தார். ஏழுமலையான் கோவிலில் அதிகாலையில் நடந்த சுப்ரபாத சேவையில் பங்கேற்ற அவர், பயபக்தியுடன் வழிபட்டார். பின்னர் உண்டியலில் காணிக்கை செலுத்தினார். அவருக்கு தீர்த்த பிரசாதமும், லட்டு பிரசாதமும் வழங்கப்பட்டது.

நடிகை ஸ்ரேயா வந்திருப்பதை அறிந்ததும் ரசிகர்கள் கோவிலில் திரண்டனர். அவரிடம் கைகுலுக்க முயன்றனர். உடனே ரசிகர்களைப் பார்த்து ஸ்ரேயா கும்பிட்டார். கைகளை உற்சாகத்துடன் ஆட்டினார். ஆனாலும் ரசிகர்கள் நெருக்கியடித்தனர்.

உடனே, "திருப்பதி கோவிலுக்கு வந்தால் எனக்கு மன அமைதி கிடைக்கிறது. வருடத்துக்கு 2 அல்லது 3 முறை இங்கு வருவேன். அமைதியாக சாமி கும்பிட வந்துள்ளேன். என்னைத் தொந்தரவு செய்யாதீர்கள்," என்று கேட்டுக் கொண்டார்.
 

கொரிய திரைப்பட விழாவில் பார்த்திபன் படம் மேல் விலாசம்!


புகழ்பெற்ற கொரிய திரைப்பட விழாவில் திரையிட பார்த்திபன் நடித்த மேல் விலாசம் படம் தேர்வாகியுள்ளது.

இயக்குநர் பார்த்திபன் ஹீரோவாக நடித்துள்ள படம் மேல் விலாசம். மாதவ் ராமதாசன் இயக்கியுள்ளார்.

கொரியாவில் ஆண்டுதோறும் பூசோன் நகரில் சர்வதேச திரைப்பட நடக்கிறது. இந்த விழாவில் சிறப்புத் திரையிடலுக்கு இந்தப் படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. 'எ விண்டோ ஆன் ஆசியன் சினிமா' என்ற பிரிவில் இந்தப்படம் திரையிடப்படுகிறது.

உலகம் முழுவதுமிருந்து வரும் திரைப்பட கலைஞர்கள் இந்தப் படத்தை பார்வையிடுகின்றனர்.

பூசோன் திரைப்பட விழாவில் ஏற்கெனவே சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த எந்திரன் படம் தேர்வாகி, திரையிடப்பட்டது. இரண்டு தினங்கள் திரையிடப்பட்ட இந்தப் படத்தைக் காண கூட்டம் குவிந்ததில் டிக்கெட்டுகள் தீர்ந்து போனது நினைவிருக்கலாம்.

இப்போது அடுத்த தமிழ்ப் படமாக மேல் விலாசம் தேர்வாகியுள்ளது.
 

நயன்தாரா - பிரபு தேவா மும்பையில் ரகசிய திருமணமா?


நயன்தாரா, பிரபுதேவா திருமணம் மும்பையில் ரகசியமாக நடந்துவிட்டதாக புதிய பரபரப்பு கிளம்பியுள்ளது.

நயன்தாராவை மணப்பதற்காகவே முதல் மனைவி ரம்லத்தை விவாகரத்து செய்தார் பிரபுதேவா. நயன்தாராவும் இரு வாரங்களுக்கு முன் கிறிஸ்தவ மதத்திலிருந்து இந்து மதத்துக்கு மாறினார்.

இதையடுத்து இருவருக்கும் விரைவில் திருமணம் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. மும்பையில் அல்லது திருப்பதி கோவிலில் திருமணம் நடக்கலாம் என்றும் கூறப்பட்டது. சிலர் இந்தத் திருமணம் கொச்சியில் நடப்பதாகக் கூறிவந்தனர்.

ஆனால் தற்போது ரகசியமாக இருவரும் திருமணம் செய்து கொண்டதாக செய்தி வெளியாகியுள்ளது. இத்திருமணத்தில் இருவரின் பெற்றோர்களும் கலந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

இந்து முறைப்படி புரோகிதர்கள் வைத்து வேள்வி வளர்த்து இந்த திருமணம் நடந்தது என்கின்றனர்.

நயன்தாராவுடனான திருமணத்தை அழைப்பிதழ்கள் அச்சிட்டு ஆடம்பரமாக நடத்தினால், ரம்லத்துக்கும் தனக்கும் பிறந்த மகன்கள் மனதளவில் பாதிக்கப்படுவார்கள் என்று கருதியதால் திருமணத்தை எளிமையாக நடத்தி முடித்து விட்டதாக பிரபுதேவாவுக்கு நெருங்கியவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

திருமணத்தை மும்பை பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்த பின்னர் நெருக்கமான நடிகர், நடிகைகளுக்கு நட்சத்திர ஓட்டலில் விருந்து அளிக்க முடிவு செய்துள்ளார்களாம்.
 

பேரறிவாளன், முருகன், சாந்தனை காப்பாற்ற டெல்லிக்கு தந்திகள் பறக்கட்டும்: வைரமுத்து வேண்டுகோள்


பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய 3 பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி இதயமுள்ள தமிழர்கள் அனைவருக்கு டெல்லிக்கு தந்திகள் அனுப்ப வேண்டும் என்று கவிஞர் வைரமுத்து வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

இந்திய குடியரசுத் தலைவரால் கருணை மனு நிராகரிக்கப்பட்டு, தூக்கு மேடையின் விளிம்பில் நிற்கும் முருகன், சாந்தன், பேரறிவாளன் என்ற மூன்று தமிழர்களுக்காக உணர்வுள்ள உலக தமிழகர்கள் இதயம் உடைந்தும் கண்கலங்கியும் நிற்கிறார்கள்.

உலக தமிழர்களின் மனிதாபிமான தவிப்பையும், குற்றம் சாட்டப்பட்டவர்களின் தண்டனைக்கால அளவையும் கருத்தில் கொண்டால், இந்திய குடியரசுத் தலைவர் இன்று கூட கருணை காட்டலாம்.

அரசியல் என்ற வட்டம் தாண்டி மனிதாபிமானம் என்ற பெருவெளியில் நின்று இதை அணுக வேண்டும் என்று எல்லா இயக்கங்களையும் கேட்டுக்கொள்கிறேன்.

குறிப்பிட்ட இந்த மூன்று தமிழர்களுக்கு மட்டுமல்லாமல், மரண தண்டனை என்ற சட்டக்கொலையையே உலகமெங்கும் நிராகரிக்க வேண்டும்; நீக்கிவிட வேண்டும் என்பதைத்தான் நாகரீக சமுதாயம் விரும்புகிறது.

சட்டரீதியாக இயலாதென்றால் தார்மீக அடிப்படையில் மூவரின் தூக்கு தண்டனையை ரத்து செய்வதற்கு தமிழக அரசு முயல வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

மூவருக்குமான தூக்குத்தண்டனையை ரத்து செய்யக்கோரி இந்திய குடியரசுத் தலைவர், இந்திய பிரதமர், உள்துறை அமைச்சர் ஆகிய மூவருக்கும் மின் செய்திகள் அனுப்புமாறு வெற்றி தமிழர் பேரவையின் தோழர்களை கேட்டுக்கொள்கிறேன்.

இதயமுள்ள தமிழர்கள் அனைவருக்கும் இதே வேண்டுகோளை முன் வைக்கிறேன்.

போராட்ட உணர்வு இன்னும் அற்றுவிடவில்லை; நம்பிக்கையின் கடைசித்துளி இன்னும் வற்றிவிடவில்லை என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
 

சம்பளப் பிரச்சினை: சினிமா படப்பிடிப்பு ரத்து; சென்னை திரும்பிய நடிகர் நடிகைகள்


சினிமா தொழிலாளர்கள் அதிக சம்பளம் கேட்டதால், மாயவரம் என்ற படத்தின் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. நடிகர்-நடிகைகள் சென்னை திரும்பினார்கள்.

சூரி, கிருஷ்ணலீலை ஆகிய படங்களை இயக்கிய ஸெல்வன், இப்போது நடிகராகவும் மாறிவிட்டார். இவர் ஏற்கனவே 'மாக்கான்' என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இப்போது, 'மாயவரம்' என்ற புதிய படத்திலும் கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக இன்பநிலா நடிக்கிறார்.

ராம்தேவ் இயக்கும் இப்படத்தை வயலார் ராஜேந்திரன் தயாரிக்கிறார். சீர்காழி அருகில் உள்ள திருமுல்லை வாசல் என்ற கிராமத்தில் இதன் படப்பிடிப்பு சமீபத்தில் நடந்தது. அப்போது படத்தில் பணிபுரிந்த தொழிலாளர்கள் திடீர் 'ஸ்டிரைக்'கில் ஈடுபட்டனர்.

'எங்களுக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ள புதிய சம்பளத்தை கொடுத்தால்தான் படத்தில் வேலை செய்வோம்,' என்று கூறிவிட்ட அவர்கள் யாருடைய சமாதானத்தையும் ஏற்கவில்லை.

அதைத்தொடர்ந்து படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. நடிகர்-நடிகைகள் உள்பட படப்பிடிப்பு குழுவினர் சென்னை திரும்பினர்.

இதே நிலை மற்ற படப்பிடிப்புகளிலும் நடக்க வாய்ப்பிருக்கலாம் என்று கருதப்படுவதால், தயாரிப்பாளர்கள் அடுத்த நடவடிக்கை குறித்து ஆலோசித்து வருகின்றனர்.
 

கமல்- கிரேசி கூட்டணியில் 'நண்பர்களும் 40 திருடர்களும்....'


பம்மல் கே. சம்பந்தம், பஞ்சதந்திரம், வசூல்ராஜா படங்களுக்குப் பிறகு கமலும் கிரேசி மோகனும் மீண்டும் கூட்டணி அமைத்துள்ளனர்.

கமலுக்கு எப்போதுமே ஒரு வழக்கம் உண்டு. ஒரு பெரிய படத்தை முடித்தவுடன் ரிலாக்ஸ்டாக ஒரு காமெடி படத்தில் நடிப்பார். அந்தப் படம் முடிவதற்குள் அடுத்து தசாவதாரம் போன்ற பெரிய முயற்சிக்கான திரைக்கதையையும் எழுதி முடித்து விடுவார். ஆளவந்தானுக்கு பிறகு பம்மல் கே.சம்பந்தம், விருமாண்டிக்கு பிறகு மும்பை எக்ஸ்பிரஸ், தசாவதாரத்துக்கு பிறகு மன்மதன் அம்பு… என்று இதற்கு நிறைய உதாரணங்களை சொல்லலாம். இவரது இந்த சூப்பர் பார்முலாவை விக்ரம், சூர்யாவும் கூட சத்தமில்லாமல் பின்பற்றி வருகிறார்கள். இயக்குனர் ஷங்கரும் இதனை சமீபகாலமாகப் பின்பற்றத் தொடங்கியுள்ளார். முதல்வனுக்கு பின் பாய்ஸ்… எந்திரனுக்கு பிறகு நண்பன்… உதாரணங்கள்.

தற்போது கமல் விஸ்வரூபம் படத்தின் படப்பிடிப்பை பல தடைகளுக்கு பிறகு துவக்கிவிட்டார். பெரிய பட்ஜெட்டில் வெளிநாட்டு லொகேஷன்களில் உருவாக இருக்கும் இந்தப் படத்திற்கு பிறகு அவர், கிரேசி மோகன் கதை, வசனத்தில் நண்பர்களும் 40 திருடர்களும் என்ற முழு நீள காமெடி படத்தில் நடிக்கப்போவதாக உறுதிப்படுத்தப் படாத தகவல்கள் கூறுகின்றன.

 

தமன்னாவுடன் கைகோர்க்கும் லாரன்ஸ்!


காஞ்சனாவின் கலக்கல் வெற்றி ராகவா லாரன்சை முன்னிலும் பிஸியான இயக்குநர் ஆக்கிவிட்டது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என்று பாய்ந்துவரும் அழைப்புகளால் உற்சாக மனிதராய் உலவுகிறார் அவர். அதேநேரம் தனது அடுத்த படம் தெலுங்கில்தான் என்பதில் தெளிவாக உள்ளார் லாரன்ஸ்.

பிரபாஸ் நடிப்பில் ‘ரிபெல்’ என்ற தெலுங்கு படத்தின் வேலைகளை ஜரூராகத் தொடங்கிவிட்டார் ராகவா. இந்தப் படத்தின் ஹீரோயின் யார் என்பதில்தான் அவருக்கு இப்போது சிக்கல். காஞ்சனாவை போலவே இந்தப் படத்திற்கும் அனுஷ்காவைத்தான் அவர் முதலில் முடிவு செய்திருந்ததாகக் கூறப்படுகிறது. ஏனெனில் காஞ்சனாவில் முதலில் அனுஷ்காதான் நடிப்பதாக இருந்தது. ஆனால் சில கருத்து வேறுபாடுகளால் தொடக்கத்திலேயே அவர் கழண்டுகொண்டார். பின்புதான் அவரது இடத்தில் லக்ஷ்மிராயை நடிக்க வைத்தார் லாரன்ஸ்.

தற்போது காஞ்சனாவின் வெற்றி லக்ஷ்மியின் இத்தனை வருட திரைப்பயணத்தில் ஒரு திருப்புமுனையையே ஏற்படுத்தி இருக்கிறது. அனுஷ்கா மீதான அந்த வருத்தத்தில்தான் காஞ்சனாவின் போஸ்டர்களில் அருந்ததியை மிஞ்சிய வெற்றி என்ற வார்த்தைகளை அதிகம் பயன்படுத்தினார்போல லாரன்ஸ்!

தற்போது ரிபெல் படத்தில் தமன்னாவை நாயகியாக்க முடிவு செய்துள்ளாராம் ராகவா. அதற்கான பேச்சுவார்த்தைகளும் சுமூகமாகவே போய்க்கொண்டிருக்கிறதாம். தமன்னாவுக்கு தமிழில் மார்க்கெட் ஆட்டம் கண்டிருந்தாலும் தெலுங்கில் நன்றாகவே இருக்கிறது. கார்த்தியின் பையா, ஆவாரா என்ற பெயரில் அங்கே ஹிட் அடித்ததும், அல்லு அர்ஜுனுடன் நடித்த பத்ரிநாத் நன்றாகப் போனதும் தமன்னா மார்கெட்டை தெலுங்கில் தூக்கி நிறுத்தியிருக்கிறது. காஞ்சனா வெற்றியால் ராகவாவின் ரிபெலில் தமன்னாவும் நடிக்க ரொம்பவே ஆர்வமாக இருக்கிறாராம்!

 

கர்ப்பகாலத்தில் நடித்தால் பணத்தாசை பிடித்தவளா? ஐஸ் ஆவேசம்


கர்ப்ப காலத்தில் விளம்பரப் படங்களில் நடித்தால் பணத்தாசை பிடித்தவள் எனக் கூறுவதா என்று நடிகை ஐஸ்வர்யா ராய் கடுப்பாகியுள்ளார்.

ஐஸ்வர்யா ராய் தற்போது 6 மாத கர்ப்பமாக உள்ளார். இருப்பினும் அவர் வழக்கம் போல விளம்பரப் படங்களில் நடித்து வருகிறார். தான் கர்ப்பமானதால் மதுர் பந்தர்கரின் ஹீரோயின் என்ற படத்தில் இருந்து விலகினார். படங்களில் தான் நடிக்கவில்லை விளம்பரப் படங்களிலாவது நடிக்கலாமே என்று நினைத்து நடித்து வருகிறார்.

அன்மையில் லக்ஸ் விளம்பரப் படத்திற்காக லண்டன் சென்று வந்தார். இதைப் பார்க்கும் பாலிவுட் மக்கள் பாரு ஐஸ்வர்யா ராயை, கர்ப்பமா இருக்கும்போது கூட ஓய்வு எடுக்காமல் விளம்பரப் படங்களில் நடிக்கிறார். இருந்தாலும் இவருக்கு இவ்வளவு பணத்தாசை கூடாது என்று கிசுகிசுக்கின்றனர்.

அது காத்து வழியாக ஐஸ்வர்யா காதுகளை எட்டியது. கர்ப்பமானா நடிக்கக் கூடாதா என்ன? அதுக்காகப் போய் என்னை பணத்தாசை பிடிச்சவன்னு பேசுறாங்களே என்று கடு்பபாகிவி்ட்டார்.

இது குறித்து அவர் கூறியதாவது,

கர்ப்பம் என்பது ஒன்று நோயன்று. சினிமாவில் நடிக்க ஆரோக்கியமாக இருந்ந்தால் போதும். நான் ஆரோக்கியமாக இருக்கிறேன், அதனால் நடிக்கிறேன் என்றார்.

மதுர் பந்தர்கரிடம் ஹீரோயின் படத்திற்காக வாங்கிய அட்வான்சைக் கூட ஐஸ்வர்யா திருப்பி கொடு்ததுவிட்டார்.

ஐஸ்வர்யாவுக்கு நான் கொடுத்த காசோலையை திருப்பி கொடுத்துவிட்டார். அவர் கொடு்ககாவிட்டாலும் நான் கேட்டிருக்க மாட்டேன். இதில் இருந்தே அவருக்கு பணத்தாசை இல்லை என்பதை தெரிந்து கொள்ளலாம் என்றார் மதுர் பந்தர்கர்.
 

ஷகீலாவுக்கு மூன்று, புவனேஸ்வரிக்கு ஒன்று!


கவர்ச்சிப் பிரளயம் ஷகீலாவும், விபச்சார வழக்கில் சிக்கி கைதாகி பெரும் புயலைக் கிளப்பிய புவனேஸ்வரியும் இணைந்து ஒரு படத்தில் திறமை காட்டவுள்ளனர். இந்தப் படத்தில் பலான காட்சிகளும் நீக்கமற நிறைந்திருக்கிறதாம்.

ஒரு காலத்தில் மலையாளத் திரையுலகை தனது கவர்ச்சியின் பிடியில் கட்டுண்டு போக வைத்திருந்தவர் ஷகீலா. இவரது படம் ரிலீஸானால் மலையாள சூப்பர் ஸ்டார்களுக்கு கிலி ஏற்படும். காரணம், இவரது படத்தின் வசூல் அவர்களின் வசூலை தாறுமாறாக சிதறடித்து விடும் என்பதால்.

இப்படியாக மலையாள திரையுலகை ஆட்டிப் படைத்து வந்த ஷகீலாவுக்கு ஒரு வழியாக அங்கிருந்து விஆர்எஸ் கொடுத்து அனுப்பி விட்டனர். மலையாளப் பட வாய்ப்புகள் மங்கிப் போனதாலும், தனது உடலுக்கு மவுசு குறைந்ததாலும் அங்கிருந்து தமிழுக்கு வந்தார் ஷகீலா.

கவர்ச்சி கலந்த காமெடி வேடங்களில் நடித்து வருகிறார். குறிப்பாக சந்தானம் படங்களில் அதிகமாக இவரைக் காண முடிகிறது. இந்த நிலையில் இவரும் புவனேஸ்வரியும் இணைந்து பச்சை நிறமே ரோஜாக்கள் என்ற படத்தில் நடிக்கின்றனராம்.

சில ஆண்டுகளுக்கு முன்பு விபச்சாரம் செய்ததாக கைதாகி சிறைக்குப் போய் பின்னர் திரும்பி வந்தவர் புவனேஸ்வரி. வந்த பின்னர் அவர் தெலுங்குக்கு ஷிப்ட் ஆகி அங்கு நடித்து வந்தார். தற்போது பச்சை நிறமே ரோஜாக்கள் மூலம் தமிழுக்கு வருகிறார். இந்தப் படத்தின் பன்ச் லைனாக காதல் நெருப்பு பத்திக்கிச்சு என்று வைத்துள்ளனர்.

ஷகீலாவும், புவனேஸ்வரியும் இணைந்து நடிக்கும் படம் என்பதால் பலான காட்சிகளும் நிறையவே உள்ளதாம். இருப்பினும் ஷகீலாவுக்குத்தான் திறமை காட்ட நிறைய வாய்ப்பாம். புவனேஸ்வரிக்கும் திருப்திகரமான முறையில் வைத்துள்ளனராம்- அவரது ரசிகர்களின் திருப்தியை ஏமாற்றாமல். ஒரு காட்சியில் புவனேஸ்வரியை தாராளமாக காட்டியுள்ள இயக்குநர், ஷகீலாவுக்கு அதேபோல மூன்று காட்சிகளை வைத்துள்ளாராம்.

படத்தைப் பார்த்து சென்சார் போர்டு என்ன சொல்லப் போகிறதோ, என்ன செய்யப் போகிறதா, 'எப்படி' வெட்டப் போகிறதோ?
 

இந்திக்குப் போகிறது ஊழலுக்கு எதிரான 'ரமணா'!


விஜய்காந்த் நடித்த ரமணா படம் இந்தியில் ரீமேக் செய்யப்படவுள்ளது. அதில் விஜயகாந்த் கதாபாத்திரத்தில் ஆமீர் கான் நடிக்கிறார்.

2003ம் ஆண்டு ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தி்ல விஜயகாந்த் நடித்த படம் ரமணா. ஊழலை எதிர்த்து போராடுபவராய் நடித்திருப்பார் கேப்டன். தற்போது நிஜ வாழ்க்கையில் ஊழலை எதிர்த்த அன்னா மக்கள் மனதில் நாற்காலி போட்டு அமர்ந்துவிட்டார். இதையடு்தது ஆளாளுக்கு ஊழல் எதிர்ப்பு படங்கள் எடுப்பதில் தான் குறியாய் உள்ளனர்.

இந்நிலையில் ஏ. ஆர். முருகதாஸ் இயக்கிய ரமணா படம் இந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது. இதற்கான உரிமையை இந்தி கஜினி பட தயாரிப்பாளர் மான்டேனா ரூ. 20 கோடி கொடுத்து வாங்கியுள்ளார். அவர் கூறுகையில், என்க்கு இந்த படத்தின் தலைப்பு பிடித்துள்ளது, அதன் கருத்து பிடித்துள்ளது. 7 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்டிருந்தாலும் அது இன்றைய சூழலுக்கு ஏற்றதாக உள்ளது என்றார்.

இந்த படத்தி்ல ஹீரோவாக நடிப்பது வேறு யாருமில்லை அன்னாவை சந்தி்த்து நீங்க தான் உண்மையான ஹீரோ என்ற ஆமீர் கான் தான் என்று கூறப்படுகிறது.

ரமணா ஏற்கனவே தாகூர் என்ற பெயரில் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டு வெளியானது. அதில் சிரஞ்சீவி ஹீரோவாக நடித்தது குறிப்பிடத்தக்கது.
 

மருத்துவமனையில் பணம் நினைவுக்கு வரவில்லை- ரஜினி சொன்னதாக வைரமுத்து தகவல்


மருத்துவமனையில் பணம் நினைவுக்கு வரவில்லை; உடலும் உயிரும் மட்டுமே நினைவுக்கு வந்தது - ரஜினி சொன்னதாக வைரமுத்து தகவல்

மருத்துவமனையில் ஆபத்தான கட்டத்தில் சிகிச்சைப் பெற்று வந்தபோது எனக்கு பணமோ புகழோ நினைவுக்கு வரவில்லை. உயிரும் உடலும்தான் நினைவுக்கு வந்தது என சூப்பர் ஸ்டார் ரஜினி கூறியதாக கவிஞர் வைரமுத்து தெரிவித்தார்.

கோவையில், நேற்று நடந்த 'ஓர் அன்னையின் கனவு' என்ற நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற வைரமுத்து, தனது சிறப்புரையில், "வெளிநாட்டு சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய ரஜினிகந்த் அவர்களிடம் ஒரு கேள்வி கேட்டேன், "உண்மையை சொல்லுங்கள், நீங்கள் மருத்துவமனையில் இருந்த 'அந்த நிமிடத்தில்' என்ன நினைத்தீர்கள்" என்று கேட்டேன்.

அதற்க்கு ரஜினி அவர்கள், "நான் ரஜினிகாந்த் என்பதையே மறந்துவிட்டேன். பணம், புகழ், உற்றார், உறவினர்கள் யாரும் நினைவுக்கு வரவில்லை. என் உடல், உயிர் என இரண்டு மட்டுமே நினைவுக்கு வந்தது.

பிறகுதான், நாம் யார் யாருக்கு என்ன செய்தோம், யார் யாருக்கு உதவி செய்யாமல் மறந்து விட்டோம் என்று எண்ணத்தோன்றியது," என்று கூறினார்.

அவர் யார் யாருக்கு என்று குறிப்பிட்டு கூறியது, நம்மை சுற்றியிருக்கும் உற்றார், உறவினர் மற்றும் நண்பர்களைத்தான். நம் உடம்பில் தெம்பிருக்கும் போதே நம்மால் முடிந்த உதவிகளையும், நன்மைகளையும் அவர்களுக்கு செய்து விடவேண்டும். ஒழுக்கம், நேர்மை, உழைப்பு மூன்று மட்டுமே மனித குல மேம்பாட்டுக்கு ஏற்ற மிகமுக்கியமான பண்புகள் ஆகும் என்பது ரஜினி அவர்கள் கூறிய உண்மை," என்றார் வைரமுத்து.

 

50 ஆண்டுகளுக்கு முன் ரஜினி படித்த பள்ளியை சீரமைக்கும் நண்பர்களும் ரசிகர்களும்!


பெங்களூர் கவிபுரத்தில் கங்காதீஸ்வரா சுவாமி கோயிலுக்கு அருகில் உள்ளது அந்த அரசு உதவி பெறும் மாதிரி தொடக்கப் பள்ளி. இங்குதான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதல் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரை தொடர்ந்து படித்தார்.

அவரோடு இந்தப் பள்ளியில் படித்த பல நண்பர்கள் இன்று வெவ்வேறு துறைகளில் உள்ளனர். சிலர் ரஜினியை நீண்ட வருடங்களாக பார்க்கக் கூட இல்லை. சிலர் வெளிநாடுகளில் செட்டில் ஆகிவிட்டனர். ஆனால் ரஜினியுடன் படித்த அந்த நாட்களின் நினைவுகளை பொக்கிஷமாய் சுமந்து வருபவர்கள்.

ரஜினியுடன் பணியாற்றி, அவரது சினிமா வாழ்க்கைக்கே முதல் சுழி போட்ட அவரது உயிர் நண்பர் ராஜ் பகதூர் தலைமையில் ரஜினியின் நண்பர்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஒரு நல்ல விஷயத்தை ஆரம்பித்துள்ளனர்.

ரஜினி படித்த இந்த கவிபுரம் அரசு உதவிபெறும் மாதிரி தொடக்கப் பள்ளியை அனைத்துவிதங்களிலும் முன் மாதிரிப் பள்ளியாக உயர்த்த இந்த நண்பர்களும் சில ரஜினி ரசிகர்களும் கரம் கோர்த்துள்ளனர்.

பள்ளிக் கட்டடங்களை சீரமைத்தல், கம்ப்யூட்டர் பற்றி பெரிதாக தெரியாத அந்தப் பள்ளி மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் உபகரணங்கள் வாங்கித் தருதல் என பெரிய அளவில் இப்பள்ளியைப் புணரமைக்கிறார்கள்.

பள்ளி சீரமைப்பு பணிகளை நேற்று கவிபுரம் மாதிரிப் பள்ளியில் நடந்த ஒரு விழாவில் ரஜினியின் நண்பர் ராஜ் பகதூர் முறைப்படி தொடங்கி வைத்தார்.

"வெவ்வேறு இடங்கள், துறைகளில் உள்ள ரஜினியின் நண்பர்களும் அவரது ரசிகர்களும் மேற்கொண்டுள்ள ஒரு அரிய முயற்சி இது. கண்ணுக்கு தெரியாமல், விளம்பரமில்லாமல் ரஜினி செய்யும் பல்வேறு நற்பணிகளை, உதவிகளைச் சிறப்பிக்கும் பொருட்டு, அவரது நண்பர்கள் இந்த முயற்சியை தொடங்கியுள்ளனர். இந்தப் பள்ளி பெங்களூரின் முதன்மைப் பள்ளியாகத் திகழும்," என்றார் ராஜ்பகதூர்.

இதில் ரஜினியின் பங்களிப்பு என்ன என்பது குறித்து ராஜ் பகதூரிடம் கேட்டபோது, அதுகுறித்து எதுவும் இப்போது சொல்வதற்கில்லை என்றார் அவர்.
 

நான் ஒரு முறை முடிவு செஞ்சா... - விஜய்


நான் ஒரு தடவை முடிவு எடுத்தால், அந்த முடிவில் மாற மாட்டேன். மாற்றவும் முடியாது, என்றார் நடிகர் விஜய்.

நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கத்தின் சார்பில் ஏழை, எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் வேலாயுதம் பட ஆடியோ சிடி வெளியீட்டு விழா மதுரை, கே.புதூர் சி.எஸ்.ஐ. மைதானத்தில் நேற்று இரவு நடந்தது.

அந்த விழாவில் நடிகர் விஜய் பேசுகையில், "மற்ற ஊர்களுக்கும் மதுரைக்கும் வேறுபாடு உண்டு. மற்ற ஊர்களில் பக்கத்து வீட்டுக்காரன் அடிபட்டு கிடந்தால் நமக்கு ஏன் வம்பு என்று சென்றுவிடுவார்கள். ஆனால் மதுரை மக்கள் அப்படிப்பட்டவர்கள் அல்ல. பசு மாட்டுக்கு காய்ச்சல் என்றால் கூட, அதை தூக்கிக்கொண்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டுபோய் வைத்தியம் பார்க்கும் நல்ல குணம் கொண்டவர்கள்.

பெரிய பெரிய மீசை வைத்துக்கொண்டு, திருப்பாச்சி அரிவாள் வைத்துக்கொண்டு சுழற்றுவார்கள். ஆனால் பழகுவதற்கு குழந்தை உள்ளத்தோடு இருப்பார்கள். நான் இந்த ஏரியாவில் ஷுட்டிங் வந்த போது ஏலே ஏலே என்று கூப்பிடுவார்கள். அந்த குரலில் தான் அன்பும் பாசமும் கலந்து இருக்கும்.

இங்கு மாவட்ட மன்ற பொறுப்பாளர்கள் மற்றும் எங்க அப்பாவும் பேசினார்கள். ஆனால் நான் ஒரு தடவை முடிவு எடுத்தால், அந்த முடிவில் மாற மாட்டேன். மாற்றவும் முடியாது. அந்த முடிவு மாற்றத்துக்கு தைரியம் கொடுத்தது மதுரை மக்கள்தான்,"
 

எஸ்ஜே சூர்யா ரசிகர் மன்ற தலைவர் மர்ம சாவு


கரூர்: கரூர் மாவட்ட எஸ்ஜே சூர்யா ரசிகர் மன்றத் தலைவர் அருண்குமார் மர்ம முறையில் ஆற்றில் இறந்து கிடந்தது அந்தப் பகுதுயில் பரபரப்பை ஏற்படுபத்தியுள்ளது.

கரூர் பண்டரிநாதன் கோவில் தெருவை சேர்ந்தவர் அருண்குமார் (வயது29). இவர் நடிகர் - இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா ரசிகர் மன்ற கரூர் மாவட்ட தலைவராக இருந்தார்.

இவர் கரூர் தி.மு.க. கவுன்சிலர் சீனிவாசன் நேற்று அந்த பகுதியில் காவிரி ஆற்றங்கரையில் கிடா விருந்து கொடுத்தார். இதில் அருண்குமார் மற்றும் அவருடன் பணிபுரியும் கார்த்தி, மதன், சசிகுமார், பிரசன்னா, லோகு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பிறகு ஆற்றில் அவர்கள் குளித்தனர். அப்போது தண்ணீரில் மூழ்கி அருண்குமார் இறந்துவிட்டதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து அருண்குமாரின் பிணத்தை ஒரு வாகனத்தில் ஏற்றி கொண்டு வந்து அவரது வீட்டில் போட்டுவிட்டு மற்றவர்கள் சென்றுவிட்டனர்.

தனது மகன் ஆற்றில் மூழ்கி சாகவில்லை. அவனது சாவில் மர்மம் உள்ளது. இதில் தி.மு.க. கவுன்சிலர் சீனிவாசன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது சந்தேகம் இருப்பதாக அவர் கூறினார். சீனிவாசனுக்கு தனது மகன் ரூ.1 லட்சம் கடன் கொடுத்திருந்ததாகவும் அவர்கள் கூறினர்.

இந்த நிலையில் அருண்குமார் எழுதிய ஒரு கடிதம் அவரது வீட்டில் இருந்து கண்டு எடுக்கப்பட்டது. கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முகவரியிட்ட அந்த கடிதத்தில் அருண்குமார் பல திடுக்கிடும் தகவல்களை எழுதி உள்ளார். சீனிவாசனுக்கு தான் கடன் கொடுத்ததாகவும் தனக்கோ, தனது குடும்பத்துக்கோ, ஏதாவது நேர்ந்தால் அதற்கு சீனிவாசன்தான் காரணம் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் அந்த கடிதத்தின் பின்புறம் தான் யார் யாருக்கு எவ்வளவு கடன் கொடுத்துள்ளேன் என்ற விவரத்தையும் எழுதி உள்ளார்.

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் கரூர் போலீசார் அங்கு சென்று அருண்குமார் பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் தி.மு.க. கவுன்சிலர் சீனிவாசன், மதன் ஆகியோர் கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
 

உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் போட்டி: எஸ்.ஏ. சந்திரசேகரன் அறிவிப்பு


மதுரை: தமிழகத்தில் நடக்க உள்ள உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் போட்டியிடும் என, டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகரன் அறிவித்துள்ளார்.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் அ.தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தது. அதற்காக அவரது தந்தையும், டைரக்டருமான எஸ்.ஏ. சந்திரசேகரன் அ.தி.மு.க.வை ஆதரித்து பிரசாரம் செய்தார். அப்போது விஜய் ரசிகர் மன்றம் சார்பில் போட்டியிடலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அவர்கள் போட்டியிடவில்லை.

இந்நிலையில், இது குறித்து நடிகர் விஜய்யின் தந்தையும், டைரக்டருமான எஸ்.ஏ. சந்திரசேகரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, டெல்லியில் நடந்த அன்னா ஹசாரே உண்ணாவிரதத்தில் மக்கள் இயக்கம் சார்பில் விஜய் சென்று தனது ஆதரவை தெரிவித்தார். நேர்மையான ஆட்சி என்பதே மக்கள் இயக்கத்தின் நோக்கம்.

மக்கள் இயக்கத்தின் தொண்டர்கள் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று விஜய்யிடம் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். இதை விஜய் ஏற்றுள்ளார். அ.தி.மு.க.வுடன் எங்களது சுமூகமான உறவு உள்ளது.

எனவே உள்ளூர் அ.தி.மு.க. நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசனை நடத்தி உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுமாறு ரசிகர்களிடம் ஆலோசனை கூறப்பட்டுள்ளது. அடிதட்டு மக்களும் சேவை செய்யவே மக்கள் இயக்கம் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுகின்றது என்றார்.
 

தூத்துக்குடியில் விஷாலின் 'வெடி!'


விக்ரம் கிருஷ்ணா தயாரிப்பில், நடிகரும் இயக்குனருமான பிரபுதேவா இயக்கிவரும் வெடி என்ற புதிய படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு தூத்துக்குடி நகரில் நடந்து வருகிறது.

விஷால் - சமீரா ரெட்டி நடித்து வரும் இந்த படத்தின் திரைக்கதை தூத்துக்குடியை மையமாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.

வெடி படிப்பிடிப்பு நேற்று காலை தூத்துக்குடி ஏ.வி.எம். மருத்துவமனை முன்பு நடந்தது. படப்பிடிப்பைக் காண ஏராளமான மக்கள் திரண்டு வந்ததால், படப்பிடிப்பு நடப்பதில் சற்று சிரமம் ஏற்பட்டது.

தொடர்ந்து தூத்துக்குடி பீச் ரோட்டில் சாயாஷி சிண்டே, அனுமோகன், பாண்டு உள்ளிட்ட நடிகர்கள் நடித்த நகைச்சுவை காட்சிகள் படமாக்கப்பட்டன.

இந்த வாரம் முழுவதும் தொடர்ந்து தூத்துக்குடி நகருக்குள்ளேயே வெடி படப்பிடிப்பு நடக்கும் என இயக்குநர் பிரபுதேவா தெரிவித்துள்ளார்.
 

வேலாயுதம் பாடல் வெளியீட்டு விழா... ரசிகர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கினார் விஜய்!


மதுரை: மதுரையில் ரசிகர்கள் முன்னிலையில் நடந்த வேலாயுதம் திரைப்பட பாடல் வெளியீட்டு விழாவில் ஏழைகளுக்கு நடிகர் விஜய் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கத்தின் சார்பில் ஏழை, எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் வேலாயுதம் பட ஆடியோ சிடி வெளியீட்டு விழா மதுரை, கே.புதூர் சி.எஸ்.ஐ. மைதானத்தில் நேற்று இரவு நடந்தது. மதுரை மாநகர் மாவட்ட விஜய் மக்கள் இயக்க தொண்டரணி தலைவர் ஆர்.மகேஸ்வரன் தலைமை வகித்தார்.

விழாவில் நடிகர் விஜய் 5 பசுமாடுகள், 3 மாணவர்களுக்கு உயர்படிப்பு செலவுகள், 40 மாணவ, மாணவிகளுக்கு கம்ïட்டர், 100-க்கும் மேற்பட்டவர்களுக்கு தையல் மெஷின், ஆட்டோ டிரைவரின் குழந்தைகள் 3 பேருக்கு கல்வி உதவித்தொகை உள்பட ஏராளமான உதவிகளை வழங்கினார்.

பின்னர் நடிகர் விஜய் கூட்டத்தில் இருந்து ரசிகர்-ரசிகையை தேர்ந்தெடுத்து, அவர்களை மேடைக்கு அழைத்து வந்தார். மதுரையை சேர்ந்த ரசிகை உமாமகேஸ்வரி வேலாயுதம் பட ஆடியோ சிட்யை வெளியிட, அதனை தஞ்சையை சேர்ந்த ரசிகர் தீபக் பெற்றுக்கொண்டார்.

விழாவில் நடிகர் விஜய், அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் ஆகியோர் பேசினார்கள். விழாவில் தென் மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான ரசிகர்கள் கலந்து கொண்டனர்.

விழாவில் வேலாயுதம் படத்தின் கதாநாயகி ஹன்சிகா மோத்வானி, தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன், இயக்குனர் ஜெயம்ராஜா, இசையமைப்பாளர் விஜய் ஆன்டனி, பாடலாசிரியர் விவேகா, அண்ணாமலை மற்றும் திரைப்பட வினியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள், தொழில் அதிபர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
 

சினிமாவாகும் ஹஸாரே உண்ணாவிரத போராட்டம்


வெறும் வாயை மெல்லுவதிலேயே கில்லாடிகளான தமிழ் சினிமாக்காரர்கள், அவலும் பொர்ியும் கிடைத்தால் சும்மா இருப்பார்களா?

நல்ல பரபரப்பான கதை இல்லாமல் தவித்துக் கொண்டிருந்த அவர்களுக்கு அன்னா ஹஸாரே சூழ்ச்சிகள், திருப்பங்கள், சதிகள் நிறைந்த ஒரு நல்ல கதையைக் கொடுத்துவிட்டார். அதை வைத்து படம் காட்டத் தயாராகிவிட்டார்கள்.

பிரபல மராத்தி இயக்குநர்கள் சுமித்ரா பாவே, சுனில் சுதாங்கர் ஆகியோர் ஹஸாரேயின் போராட்டத்தை மராத்தி சினிமாவாக தயாரிக்கின்றனர். இந்தப் படத்துக்கு 'அந்தோலன் ஆக் தாஹா திவாஸ்' (பத்து நாள் போராட்டம்) என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இது குறித்து சுமித்ரா பாவே, சுனில் சுதாங்கர் கூறும் போது, "நாடு கண்ட, அரசியல் சார்பற்ற முதலாவது போராட்டம் இது. லஞ்ச ஊழலுக்கு எதிராக பல போராட்டங்களைச் சந்திக்கிற ஒரு மத்தியதர குடும்பத்தினை சுற்றி இந்தப் படம் செல்கிறது. ஆத்ம பரிசோதனையையும், தனி மனித வாழ்வின் ஒழுக்கத்தினையும் இந்தப் படம் மையப்படுத்திக்காட்டும்'' என்றனர்.
 

நடிக்க வந்தாச்சுன்னா... சாயா 'பலே' பதில்!


நடிப்பதற்கென்று வந்து விட்டால் சின்னத்திரை, பெரிய திரை என்றெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது. நமக்கு நடிக்க நல்ல ஸ்கோப் உள்ளதா என்று மட்டுமே பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார் 'மன்மத ராணி' சாயா சிங்.

திருடா திருடி மூலம் தமிழ் ரசிகர்களின் மனதை திருட வந்தவர் சாயா சிங். மன்மத ராசா பாட்டுக்கு இவர் போட்ட ஆட்டம் இன்னும் ரசிகர்களின் மன மேடையிலிருந்து அகலவில்லை. இப்படிப்பட்ட சாயா சிங்குக்கு தொடர்ந்து தமிழில் நல்ல வாய்ப்புகள் வரவில்லை. குத்துப் பாட்டுக்கும் கூட ஆடிப் பார்த்து விட்டார் சாயா சிங்.

இந்த நிலையில் இப்போது சின்னத் திரைக்கு வந்து விட்டார் சாயா. நாகம்மா என்ற டிவி சீரியலில் சாயா சிங் நடித்து வருகிறார். அதுவும் டபுள் ஆக்ட் வேறு. இதுகுறித்து அவரிடம் கேட்டால், நடிக்க வந்து விட்டால், நடிப்பதற்கான ஸ்கோப்பை மட்டுமே நான் பார்ப்பேன். சின்னத் திரை, பெரிய திரை என்ற வித்தியாசம் எல்லாம் எனக்குக் கிடையாது.

மற்றபடி, சினிமாவில் வாய்ப்பு குறைந்ததால் நான் டிவிக்கு வரவில்லை. இப்போதும் கூட எனக்கு சினிமா வாய்ப்புகள் வரத்தான் செய்கின்றன. ஆனால் எனக்குப் பிடித்த கேரக்டர் கிடைத்தால்தானே நடிக்க முடியும் என்றார் சாயா சிங்.

கீழே விழுந்தாலும் 'சாயா'த பெண் 'சிங்'கம்தான் சாயா!
 

இந்தியன் 'தாத்தா'வும், அன்னா ஹஸாரேவும்!


ஊழல் இல்லா இந்தியா என்ற 'இந்தியன் தாத்தா' சேனாபதியின் கனவு 15 ஆண்டுகள் கழித்து நனவாகியுள்ளது-இன்னொரு தாத்தா அன்னா ஹஸாரேவின் மூலம்.

ஷங்கர் இயக்கத்தில் உலக நாயகன் கமலஹாசன் நடித்த படம் இந்தியனை யாரும் மறந்திருக்க முடியாது. அந்த படத்தில் வரும் இந்தியன் தாத்தாவை நினைவுபடுத்துவதாக உள்ளது அன்னா ஹஸாரேவின் போராட்டம்.

அன்னா ஹஸாரே இந்தியன் படத்தை எத்தனை முறை பார்த்திருப்பார்? இதுதான் இந்தியன் படத்தைப் பார்த்துச் சிலாகித்த, ஏங்கிய பலருக்குள்ளும் எழுந்த கேள்வியாக இருந்திருக்கும். காரணம், இந்தியன் படத்தின் இந்தியன் தாத்தா கேரக்டருக்கும், அன்னா ஹஸாரேவுக்கும் இடையே உள்ள பல ஒற்றுமைகள்.

கிட்டத்தட்ட இந்தியன் தாத்தா சேனாபதியைப் போலவே அமைந்துள்ளது அன்னா ஹஸாரேவின் போராட்டமும்.

இந்தியன் படத்தில் ஊழல் இல்லாத இந்தியா அமைய சேனாபதி தனி மனிதராகப் போராடினார். லஞ்சத்திற்கு அடிமையாகி விட்ட தனது மகனைக் கூட கொல்லத் துணிந்தவர் அந்த சேனாபதி என இந்தியன் படத்தின் கதை வரும்.

இந்த படம் வெளியாகி 15 ஆண்டுகள் கழித்து நிஜத்தில் ஒரு இந்தியன் தாத்தாவாக உருவெடுத்து வந்திருக்கிறார் அன்னா ஹஸாரே. இதை ஷங்கரும், கமலும் கூட எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். அந்த படத்தில் இந்தியன் தாத்தா வந்த பிறகு லஞ்சம் வாங்கி ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்த அதிகாரிகள் எல்லாம் உயிருக்கு பயந்து லஞ்சம் வாங்க பயப்படுவது போல காட்சி அமைந்தது.

தற்போது நிஜத்தில் லஞ்சம், ஊழலில் ஊறிப்போயிருந்தவர்களை எல்லாம் நடுநடுங்க வைத்துள்ளார் அன்னா. யாராவது அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் நான் அன்னா ஆதரவாளர் என்னிடமா லஞ்சம் கேட்கிறாய் என்று மக்கள் தைரியமாகச் சொல்லும் நிலை உருவாகியுள்ளது.

இதன் மூலம் ஊழலில்லா இந்தியா என்ற கனவு நனவாகும் வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது. இந்தியன் கதைக்கும், அன்னா ஹஸாரேவின் போராட்டத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்ற போதிலும் இந்தியன் படத்தின் கதையைப் பார்த்து ஏங்கியவர்களுக்கெல்லாம் இன்று சரியான வடிகாலாக வந்து சேர்ந்துள்ளார் 'தாத்தா' ஹஸாரே.

கமல்ஹாசனும் சரி, இந்தியன் படத்தை இயக்கிய ஷங்கரும் சரி, எதிர்காலத்தில் இப்படி ஒரு கேரக்டர் வரும், இந்தியாவை உலுக்கியெடுக்கும் என்று நிச்சயம் கணித்திருக்க மாட்டார்கள். அது ஒரு தற்செயலான நிகழ்வுதான். ஆனால் இன்று அன்னா வந்திருப்பதைப் பார்த்து அத்தனை பேர் மனதிலும் இந்தியன் தாத்தாதான் நிழலாடுகிறார்.

உண்மையில், 1960களிலேயே லோக்பால் மசோதா குறித்து பேச்சுக்கள் இருந்தன. இதை அடிப்படையாக வைத்துத்தான் இந்தியன் தாத்தா கேரக்டரை உருவாக்கினார் ஷங்கர். அந்தக் கேரக்டராக வாழ்ந்ததோடு, அத்தனை பேர் மனதிலும் அப்படிப்பட்ட ஒரு நிஜ கேரக்டர் வராதா என்ற ஏக்கத்தை, பாதிப்பை ஏற்படுத்தியது கமல்ஹாசனின் நடிப்பு.

இன்று நிஜமான இந்தியன் தாத்தாவாக உருவெடுத்து நிற்கிறார் அன்னா ஹஸாரே.

தான் அன்று திரையில் நிகழ்த்திய மாயாஜாலத்தை இன்று நிஜத்தில் நிகழ்த்தி வரும் அன்னாவைப் பார்த்து கமல்ஹாசன் பெருமைப்பட்டுக் கொள்ளலாம்.

இந்தியன் படத்தில் இந்தியன் தாத்தாவைப் பார்த்து ஊழல்வாதிகளும், லஞ்சதாரிகளும் அரண்டு ஓடினர். இன்று அன்னாவைப் பார்த்து லஞ்ச, ஊழல் பேர்வழிகள் அஞ்சும் நிலை ஏற்பட்டுள்ளது. என்ன ஒரு ஒற்றுமை!

1996-ம் ஆண்டு ஷங்கர் படத்தில் இந்தியன் தாத்தாவைப் பார்த்து இப்படி ஒருவர் நிஜத்திலும் வரமாட்டாரா என்று ஏங்கிய மக்களுக்கு, 15 ஆண்டுகள் கழித்து நிஜ இந்தியன் தாத்தாவாக வந்துள்ளார் அன்னா ஹஸாரே என்பது பெரும் ஆச்சரியரகரமான ஒற்றுமைதான்.
 

நிறைய தெலுங்குப் படம் பார்... அமலா பாலுக்கு அனுஷ்கா அட்வைஸ்


நிறைய தெலுங்கு படங்கள் பார் அமலா என்று நடிகை அமலா பாலுக்கு அனுஷ்கா அறிவுரை வழங்கியுள்ளாராம்.

கேரள அழகி அமலா பால் தமிழில் முன்னணி நடிகைகளில் ஒருவராகிவிட்டார். அன்மையில் வெளிவந்த தெய்வத்திருமகள் பற்றி பெருமையாய் பேசி வருகிறார். இந்நிலையில் கோலிவுட்டை பார்த்தாச்சு, டோலிவுட்டை ஒரு எட்டு பார்த்துவிட்டு வரலாம் என்று நினைத்திருக்கிறார் அமலா பால்.

அதற்காக தெலுங்கு கற்றுக் கொண்டிருக்கிறாராம். இது பற்றி தெரிய வந்த அனுஷ்கா நிறைய தெலுங்கு படங்கள் பார் அமலா. அது உனக்கு உதவியாக இருக்கும் என்று அட்வைஸ் கொடுத்துள்ளாராம். அமலாவும் தெலுங்குப் படங்களைப் பார்க்கத் துவங்கியிருப்பதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன.

அட அனுஷ்கா அமலாவுக்கு அட்வைஸ் பண்ற அளவுக்கு ஆகியாச்சா என்றால் ஆம் என்று தான் கூற வேண்டும். அவர்கள் இருவரும் சேர்ந்து தெய்வத்திருமகள் படத்தில் நடித்ததில் இருந்தே தோழிகளாகி விட்டனர். ஸாரி.. நெருக்கமான தோழிகளாகிவிட்டனராம்.

'சீயானுக்கும்' கூட அமலா பால் நெருங்கிய தோழியாகி விட்டதாக கோலிவுட்டில் கூறுகிறார்கள்...!
 

கலை... தாகம்.. தொழில் அதிபர்...அசின்


நடிகை அசின் தீராத கலைத்தாகத்தால் தான் திரையுலகிற்கு வந்தார் என்று கூறப்படுகிறது.

கேரளாவில் நடிகை அசினுக்கு சொந்தமாக பல தொழிற்சாலைகள் உள்ளன. அம்மணி அதை நிர்வகிப்பதில் கில்லாடியாகவும் உள்ளார். கைவசம் தொழில் இருக்க அசின் எதற்கு நடிக்க வந்தார் என்று தானே நினைக்கிறீர்கள். அவருக்கு தீராத கலைத்தாகமாம். அதனால் தான் நடிக்க வந்தாராம்.

ஆரம்பத்தில் கோலிவுட்டிலும், பின்னர், தெலுங்கிலும் பிரமாதப்படுத்திய அசின் தற்போது பாலிவுட்டிலும் தனது கொடியை உயரப் பறக்க விட பிரம்மப் பிரயத்தனம் செய்து கொண்டிருக்கிறார். பாலிவுட்டில் எப்பாடுபட்டாவது பெரிய ஆளாகிவிட வேண்டும் என்பதில் குறியாய் உள்ளார். இதனால் கோலிவுட், தெலுங்கில் வரும் வாய்ப்புகளைப் புறம் தள்ளி வருகிறார்.

கஜினி தன்னை உயரத்தில் உட்கார வைத்ததைத் தொடர்ந்து அங்கேயே நிரந்தரமாக உட்கார்ந்து கொள்ளும் திட்டத்தில் இருக்கும் அசினுக்கு, கஜினிக்குப் பிறகு அதேபோல ஒரு சூப்பர் டூப்பர் படம் அமையாதது கவலையாகவும், வருத்தமாகவும் இருக்கிறதாம்.இருந்தாலும் விடாமல் தொடர்ந்து முன்னணி நடிகையாக திகழத் தேவையான நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டிருக்கிறாராம்.

எப்படியோ 'தாகம்' தீர்ந்தா சரிதான்...!
 

கோலிவுட்டுக்கு நோ சொன்ன ஷ்ரேயா கோஷல்


நடிக்க ஆரம்பித்தால் பாட முடியாமல் போய்விடும் என்பதால் நடிக்க வரும் வாய்ப்புகளை தட்டிக் கழிக்கிறார் பாடகி ஸ்ரேயா கோஷல்.

பாடகிகளில் இனிமையான குரலை உடையவர் ஷ்ரேயா கோஷல். இனிமையான குரல் மட்டுமல்லாமல் அசரடிக்கும் அழகையும் கொண்டவர் இந்த 27 வயது பாட்டுக் குயில்.வசீகரமான முகம் கொண்ட இவரையும் நடிக்க வைத்து விட கோலிவுட்டில் தீவிரமாக முயற்சிக்கிறார்களாம் சிலர். எப்படியாவது கோஷலை நடிகையாக்க அவர்கள் முயற்சித்து வருகின்றனராம்.

நினைப்புக்கு செயல் வடிவம் கொடுக்க ஷ்ரேயாவை அணுகினர். எப்படியாவது அவரை சம்மதிக்க வைத்து விட வேண்டும் என்று நினைத்தனர். ஆனால் ஸ்ரேயாவோ நான் நடிக்க மாட்டேன் என்று திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டார். ஏன் ஸ்ரேயா இப்படி அடம்பிடிக்கிறீர்கள் என்று கேட்டதற்கு, நான் ஒரு பாடகி. நடிக்க வந்தால் பாட்டில் கவனம் செலுத்த முடியாமல் போய்விடும். அதனால் நடிக்க மாட்டேன் என்றார்.

பரவாயில்லையே, தனது பாதையில் படு தெளிவாகத்தான் இருக்கிறார் ஷ்ரேயா.
 

சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கும் இயேசு படம்... முக்கிய வேடத்தில் அனுஷ்கா!


தமிழில் கமலுடன் இணைந்து பல மறக்கமுடியாத படங்களைத் தந்தவர் தேசிய விருது பெற்ற இயக்குநரான சிங்கீதம் சீனிவாசராவ்.

ராஜபார்வை, அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன், பேசும் படம் என இவர் இயக்கிய ஒவ்வொரு படமும் வசூல் மற்றும் பாராட்டுக்களைக் குவித்தவை.

சிங்கீதம் சீனிவாச ராவ் கடந்த இரண்டாயிரத்து எட்டில் ‘கடோத்கஜ்’ என்ற அனிமேஷன் படத்தை இயக்கி அந்த படம் கான்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

3 வருட இடைவெளிக்குப் பிறகு, அடுத்து குழந்தைகளுக்கான ஒரு படத்தை இயக்குகிறார். இதில் அனுஷ்கா, நாகார்ஜுனாவும் நடிக்கிறார்கள்.

இயேசுவின் குழந்தைப் பருவத்தை மையப்படுத்தி உருவாகும் இப்படத்தில் ஒன்பது முதல் பதிமூன்று வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமியர் நடிக்கின்றனர். இயேசு வாழ்ந்த அதாவது அவர் பயணப்பட்ட அந்தந்த இடங்களுக்கே சென்று படமாக்க இருக்கின்றார். படத்தின் பெயர் 'பிரின்ஸஸ் ஆப் பீஸ்'. தமிழில் சமாதானத்தின் இளவரசன்.

குழந்தைகளை அறிமுகப்படுத்தும் காட்சிகளில் நாகார்ஜுனாவும், அனுஷ்காவும் நடிக்க உள்ளனர். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, ஆங்கிலம், பிரெஞ்சு ஆகிய ஆறு மொழிகளில் உருவாக இருக்கிறது.
 

மதுரையில் நாளை விஜய் மக்கள் இயக்க மாநாடு... ரசிகர்கள் மூலம் 'வேலாயுதம்' பாடல் வெளியீடு!


விஜய்யின் மக்கள் இயக்க மாநாடு மதுரை புதூர் மைதானத்தில் நாளை ஞாயிற்றுக்கிழமை நடக்கிறது.

விஜய் பங்கேற்கும் இந்த மாநாட்டிஸ் அவர் நடித்த வேலாயுதம் பாடல் சி.டி.யும் வெளியிடப்படுகிறது.

இதுகுறித்து விஜய் கூறுகையில், "எனக்கு எல்லாமே எனது ரசிகர்கள்தான். எனவே இந்த பிரமாண்டமான படத்தின் பாடல் வெளியீட்டை அவர்கள் மத்தியில் நடத்துவதே சரியானது என்பதால் மதுரையில் ரசிகர்கள் மூலம் பாடலை வெளியிடுகிறேன்.

இதை சாதாரணமாக நடத்தாமல், விஜய் மக்கள் இயக்கம் மூலம் நடத்துகிறேன். அதற்காகத்தான் தமிழகத்தின் மத்தியில் உள்ள இந்த மதுரை மாநகரைத் தேர்வு செய்தேன்," என்றார்.

இதுகுறித்து விஜய்யின் தந்தையும், இயக்குனருமான எஸ்.ஏ. சந்திரசேகரன் கூறுகையில், "விஜய் மாதந்தோறும் ஒவ்வொரு மாவட்டத்திலும் மக்கள் இயக்கம் சார்பில் ஏழைகளுக்கு உதவிகள் வழங்கி வருகிறார். நாளை மதுரையில் நடக்கும் மாநாட்டில் பங்கேற்கிறார். இதில் ஒரு லட்சம் ரசிகர்கள் திரள்கிறார்கள். இதில் 5 ஏழை பெண்களுக்கு வேளைக்கு 15 லிட்டர் பால் தரும் கன்றுடன் கூடிய பசு மாடுகளை விஜய் வழங்குகிறார்.

20 பள்ளிகளுக்கும், 20 ஏழை மாணவ-மாணவிகளுக்கும் 40 கம்ப்யூட்டர்களையும் இலவசமாக வழங்குகிறார். 100 ஏழை பெண்களுக்கு தையல் மிஷின்களும் வழங் கப்படுகின்றன. பிளஸ்-2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற 3 ஏழை மாணவ-மாணவிகளை தத்தெடுத்து அவர்களின் பொறியியல் மருத்துவ படிப்புக்கான மொத்த செலவையும் விஜய் ஏற்கிறார்.

ரசிகர்கள் மாநாட்டில் வேலாயுதம் பாடல் சி.டி.யை வெளியிட அப்படத்தின் இயக்குனர் ராஜா விருப்பப்பட்டார். அதன்படி ரசிகர் மற்றும் ரசிகை மூலம் பாடல் சி.டி. வெளியிடப்படும். மாநாட்டிலேயே அந்த ரசிகர்-ரசிகைகளை தேர்வு செய்வோம்," என்றார்.
 

சல்மான்கானுக்கு முக நரம்பில் பாதிப்பு- சிகிச்சைக்காக அமெரிக்கா செல்கிறார்


மும்பை: இந்தி நடிகர் சல்மான் தனது தாடை நரம்பு சிகிச்சைக்காக, அமெரிக்கா செல்ல முடிவு செய்துள்ளார்.

பிரபல இந்தி நடிகர் சல்மான்கானுக்கு கடந்த 2007ம் ஆண்டு முதல் தாடையில் கடும் வலி இருந்து வருகிறது. ஆனால், அதை வெளியிடாமல் இருந்த சல்மான் கான் சமீபத்தில் அதுகுறித்து ஒரு வெளியில் சொன்னார்.

இந் நிலையில் இந்தப் பிரச்சனைக்கு சிகிச்சை மேற்கொள்ள அமெரிக்கா செல்லவும் முடிவு செய்துள்ளார். தாடையில் ஏற்படும் கடும் வலியினால் உணவு உட்கொள்ள முடியாமல் அவதிப்பட்டதாகவும், சமீபகாலமாக அந்த வலி அதிகரித்து விட்டதால், அமெரிக்காவில் சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

முன்னதாக மும்பையில் அவரை பரிசோதித்த டாக்டர்கள், மூளையில் இருந்து முகத்துக்கு செல்லும் நரம்பில் ஏற்பட்டுள்ள பாதிப்பு காரணமாக வாயை திறந்தாலே தாடையில் தாங்க முடியாத வலி ஏற்படுவதாக தெரிவித்துள்ளனர்.
 

சரித்திரத்துக்கு திரும்பும் தமிழ்ப் படங்கள்!


ஊமைப் படமாக இருந்த காலத்திலும் சரி, பேசும் படமாக அது பரிணமித்த கட்டத்திலும் சரி... தமிழ் சினிமாவை புராண அல்லது வரலாற்றுக் கதைகளே முழுக்க முழுக்க ஆக்கிரமித்திருந்தன.

தமிழ் மன்னர்கள், சரித்திரத்தில் இணையில்லாத வீராதி வீரர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், மகாபாரத-ராமாயணக் கதைகள் போன்றவைதான் பெரும்பாலும் சினிமாவாக எடுக்கப்பட்டன.

ஆனால் அறுபதுகளுக்குப் பின் சரித்திரப் படங்கள் வருவது படிப்படியாகக் குறைந்தது. எண்பது, தொன்னூறுகளில் சரித்திரப் படங்கள் வருவதே அடியோடு நின்று போயின. அப்படியே ஓரிரு படங்கள் வந்தாலும் அவை ரசிகர்களை கவராமலேயே போய்விட்டன.

ஆனால் 2000-க்குப் பிறகு மீண்டும் சரித்திரப் படங்கள் வரத் தொடங்கிவிட்டன. ஆனால் பழைய காலத்தைப் போலல்லாமல் தொழில்நுட்பம் மற்றும் நம்பகத் தன்மை, பிரமாண்டம் அனைத்தும் கலந்த வகையில் இந்தப் படங்கள் வந்தன.

இந்தி, தெலுங்கிலும் இந்த நிலைதான் நீடித்தது. தெலுங்கில் மகாதீரா வெற்றிக்குப் பிறகு பல படங்கள் அதே பாணியில் தயாராகின்றன. தெலுங்கில் ராமாயணம் ஸ்ரீராம ராஜ்யமாக பிரமாண்டமாகத் தயாராகிறது.

தமிழில் இம்சை அரசன் 23-ம் புலிகேசி படம் பெற்ற வெற்றி அனைவரையுமே கொஞ்சம் யோசிக்க வைத்துவிட்டது.

இந்த 2011-ல் தயாராகும் பல படங்கள் சரித்திர அல்லது புராண காலகட்டத்தைச் சேரந்த படங்களாகவே உள்ளன.

தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்க ரூ 130 கோடியில் உருவாகும் ராணா படம் முழுக்க முழுக்க சரித்திரக் கதைதான். இதில் ரஜினி மூன்று வேடங்களில் நடிக்கிறார்.

சூர்யா நடிப்பில் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் ஏழாம் அறிவு கதையும் சித்தர்கள் காலத்தை அடிப்படையாகக் கொண்டது என்கிறார்கள். போகர் என்ற சித்தர் கதையை அடிப்படையாகக் கொண்டது இந்தப் படம் என்கிறது கோடம்பாக்கம் வட்டம். படத்தின் ஸ்டில்களும் அதைத்தான் காட்டுகின்றன.

விக்ரம் நடிக்கும் கரிகாலன் படம் முழுக்க முழுக்க சரித்திரப் பின்னணி கொண்டது. ஆங்கிலத்தில் வெளியான ட்ராய், கிளாடியேட்டர் மாதிரியான அதிரடி ஆக்ஷன் வரலாற்றுப் படம் இது.

சிம்புதேவன் - தனுஷ் இணையும் மாரீசன், கிமு 12-ம் நூற்றாண்டுக் கதை. கிட்டத்தட்ட 3200 ஆண்டுகளுக்கு முந்தைய கதை இது.

சற்குணம் இயக்கும் வாகை சூடவா, சமகால வரலாற்றுப் படமாக உருவாகி வருகிறது.

பொன்னியின் செல்வன் சரித்திரக் கதையை மணிரத்னம் திரைப்படமாக எடுக்கப் போவதாக அறிவித்துள்ளார். இப்போதைக்கு இந்தப் படம் தள்ளிப்போடப்பட்டாலும் நிச்சயம் எதிர்காலத்தில் உருவாகும் என அவர் குறிப்பிட்டிருப்பது நம்பிக்கையை அதிகரித்துள்ளது.

பாரதிராஜா இயக்கிவரும் அன்னக் கொடியும் கொடிவீரனும் கூட ஒரு சரித்திரக் கதைதான் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்னும் செல்வராகவன், மிஷ்கின், கமல்ஹாஸன் போன்றவர்களும் சரித்திரப் படம் எடுப்பதற்கான ஆயத்தங்களில் உள்ளனர். மதராஸப்பட்டணம் தந்த இயக்குநர் விஜய்யும் கூட விரைவில் அடுத்த சரித்திரப் பட ஸ்கிரிப்ட் ஒன்றை தயார் செய்துள்ளார்.

சரித்திரப் படம் எடுப்பது அத்தனை சுலபமான காரியமல்ல. ஆனாலும் இளம் இயக்குநர்கள் அதில் உள்ள சவாலை விரும்பி ஏற்று சரித்திரப் படம் பண்ணுவது, இந்த கலை மீது அவர்களுக்குள்ள பிடிப்பைக் காட்டுகிறது. இன்னொன்று, முன்பு பாரதிராஜா, பாக்யராஜ் போன்றவர்கள் தங்கள் கிராமத்து அனுபவங்களை அப்படியே செல்லுலாய்டில் செதுக்கித் தந்தார்கள். இன்றைய படைப்பாளிகள் பலருக்கு அந்தப் பின்னணியோ, ஆழந்த அனுபவமோ இருப்பதில்லை.

எனவேதான் ஏற்கெனவே தயாராக உள்ள சரித்திரக் கதைகளை தொழில்நுட்ப பிரமாண்டம் சேர்த்துக் கொடுத்து மக்களை ஈர்க்க முயற்சிக்கின்றனர்.

எப்படிப் பார்த்தாலும் இந்த ஆண்டு மற்றும் அடுத்த சில ஆண்டுகளில் மட்டுமே 20-க்கும் மேற்பட்ட சரித்திரப் படங்கள் வரவிருக்கின்றன. சரித்திரத்தின் மீது இந்த தலைமுறையினருக்கு ஏற்பட்டுள்ள ஆர்வமே இந்த நிலைக்குக் காரணம் என்கிறார்கள் வரலாற்றுப் பேராசிரியர்கள்.

சொல்லும் விதத்தில் சொன்னால் நிச்சயம் சரித்திரம் இனிக்கவே செய்யும் என்பதற்கு இது ஒரு உதாரணம்தான்!
 

இரண்டாவது கணவரைப் பிரிந்தார்... மீண்டும் முதல் கணவர் ஆகாஷுடன் சேர்கிறார் வனிதா!


சென்னை: மீண்டும் தனது முதல் கணவர் ஆகாஷுடன் இணையப் போவதாக நடிகை வனிதா விஜயகுமார் கூறினார்.

நடிகை வனிதா முதல் கணவர் ஆகாஷை விவாகரத்து செய்து பிரிந்து ராஜன் என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். ஆகாஷுடன் வளரும் மகன் ஸ்ரீஹரியை தன்னிடம் ஒப்படைக்கவேண்டும் என்று வனிதா போராடினார். போலீசிலும் புகார் அளித்தார். ஆனால் ஸ்ரீஹரி வனிதாவுடன் செல்ல மறுத்து விட்டான்.

தன் குழந்தை ஸ்ரீஹரியை தன்னிடமிருந்து பிரிக்கிறார்கள் என்று அப்பா விஜயகுமார் மீதும், அம்மா மஞ்சுளா மீதும் கடுமையாக கோபபப்பட்டு, சண்டை போட்டார் வனிதா. ஒவ்வொரு முறை நீதிமன்றத்துக்கு வரும்போதும் இவருடன் அப்பாவியாக வந்து கொண்டிருந்த இரண்டாவது கணவர் ராஜன், இப்போது வனிதாவிடமிருந்து விலகிவிட்டாராம்.

இதையடுத்து, மகனுக்காக இரண்டாவது கணவர் ராஜனை விட்டு விலகி விட்டதாக நடிகை வனிதா கூறினார். இது குறித்து அவர் அளித்த பேட்டி:

என் குழந்தைகளுக்கு பாதுகாப்பு வேண்டும் என்று கருதிதான் இரண்டாம் திருமணம் செய்தேன். ஆனால் என் மகன் ஸ்ரீஹரி அப்பா ஆகாஷ் இன்னும் தனியாக தானே இருக்கிறார். நீ எப்படி இன்னொரு திருமணம் செய்து கொள்ளலாம் என்று கண்டித்தான். அதற்கு என்னால் பதில் சொல்ல முடியவில்லை.

அவசரப்பட்டு தவறு செய்து விட்டதை உணர்ந்தேன். அவன் அம்மாவை இன்னொருத்தருடன் பார்க்க விரும்பவில்லை என்று புரிந்தது. மகன் எனக்கு முக்கியம். அவனுக்கு விருப்பம் இல்லாத எதையும் இனி செய்வதில்லை என்று முடிவு செய்து விட்டேன்.

ராஜனுக்கும் சமீபத்திய பிரச்சினைகள் மன உளைச்சலை ஏற்படுத்தின. இருவரும் உட்கார்ந்து பேசி பிரிவது என முடிவு எடுத்து விலகி விட்டோம். இப்போது என் மகன் ஸ்ரீஹரி என்னுடன் நன்றாக பேசுகிறேன். நானும் ஆகாஷு ம் காதலித்து திருமணம் செய்து கொண்டோம். எங்களுக்குள் பல தடவை சண்டைகள் வந்துள்ளன. அவரை அவமானப்படுத்தி பேசி இருக்கிறேன்.

ஆனாலும் இன்று வரை அவர் இன்னொரு திருமணம் செய்து கொள்ளவில்லை. இதனால் அவர் மேல் எனக்கு மரியாதை ஏற்பட்டு உள்ளது. நாங்கள் சேர்ந்து வாழ ஆசைப்படுகிறேன்.

எங்கள் குழந்தைகள் நன்றாக இருக்க வேண்டும் என்னுடன் பேச வேண்டும். அதுதான் முக்கியம். ஆகாஷ் மேல் நான் வைத்திருந்த காதல் உண்மையானது. அதனால் அவருடன் மீண்டும் என்னால் பேச முடிகிறது. அவரும் என்னுடன் நன்றாக பேசுகிறார். இருவரும் சேர்ந்து என் குழந்தையை வளர்க்க விரும்புகிறோம்.

என் அப்பா விஜயகுமார் மீது நான் மரியாதை வைத்துள்ளேன். அவருடன் பேச ஆர்வமாக இருக்கிறேன். ஆனால் அவரை நேரில் சந்திக்க விடாமல் சிலர் தடுக்கின்றனர். அண்ணனும் சகோதரிகளும் மீண்டும் நான் குடும்பத்தோடு சேரக்கூடாது என்று நினைக்கிறார்கள்," என்றார்.

மேலும், இதுவரை வனிதா ராஜன் என்று இருந்த தன் பெயரை இப்போது, வனிதா விஜயகுமார் என்றே மாற்றிக் கொண்டுள்ளார் வனிதா.
 

நடிகை மினிஷா லம்பாவிற்கு 2 முறை கொலை மிரட்டல் விடுத்த மர்மநபர்


பிரபல இந்தி நடிகை மினிஷா லம்பாவிற்கு மர்மநபர் ஒருவர் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இந்தி ந்டிகை மினிஷா லம்பா யான், கிட்னாப் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர். இவரது கவர்ச்சியான நடிப்பிற்கு ரசிகர்கள் அதிகம். மினிஷா, நியூயார்க்கில் நடக்கும் விழா கலந்து கொள்ள திட்டமிட்டு இருந்தார்.

இந்நிலையில் மினிஷாவின் மொபைல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்டு பேசிய மர்மநபர் ஒருவர், நியுயார்க்கில் நடக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கூடாது. மீறி கலந்து கொண்டால், கொலை செய்துவிடுவேன், என மிரட்டியுள்ளார். முதலில் வெளிநாட்டில் இருந்தும், பின்னர் இந்தியா நம்பர் ஒன்றில் இருந்தும் அழைப்பு வந்ததாக நடிகை தெரிவித்துள்ளார்.
 

மும்பை ஜூஹுவில் சொந்த வீடு வாங்கிய சமீரா!


மும்பையின் பெருமைக்குரிய கடற்கரையான ஜூஹுவில் சொந்த பங்களா வாங்கியுள்ளார் நடிகை சமீரா ரெட்டி.

வாரணம் ஆயிரம் படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர் சமீரா. தெலுங்கு, இந்தியிலும் பிஸியாக உள்ளார்.

சொந்தவீடு வாங்கியது குறித்து சமீரா கூறுகையில், " மும்பையில் பெரிய வீடு கட்ட வேண்டும் என்பது என் நீண்ட நாள் கனவு. அது தற்போது நிறைவேறுகிறது. அங்குள்ள ஜூஹு பகுதியில் இடம் வாங்கி வீடு கட்டிக் கொண்டு இருக்கிறேன். எனது தந்தையும், தம்பியும் அங்கேயே முகாமிட்டு கட்டுமான பணிகளை கவனித்து வருகின்றனர்.

எனது ஆசைப்படி வீட்டை வடிவமைத்து கட்டி வருகிறார்கள். நவம்பரில் கிரஹப்பிரவேசம் நடத்த உள்ளோம்.

தமிழில் தற்போது வெடி, வேட்டை படங்களில் நடித்து வருகிறேன்.

எனது இந்த நிலைக்குக் காரணம் இயக்குநர் கவுதம் மேனன்தான். வாரணம் ஆயிரம் படத்தில் அறிமுகபடுத்தியதால்தான் இந்த நிலைக்கு உயர முடிந்தது. கவுதம் மேனன் எப்போது அழைத்தாலும் கதை, கேரக்டர் என்ன என்று கேட்காமல் உடனடியாக நடிக்க சம்மதிப்பேன்," என்றார்.
 

மூவருக்குத் தூக்கு: நடிகர், நடிகைகள், வக்கீல்கள், மாணவர்களைத் திரட்டி போராட்டம்-பாரதிராஜா அறிவிப்பு


சென்னை: பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரை தூக்கில் போடுவதைக் கண்டித்து திரையுலகினரை திரட்டி பெரும் போராட்டம் நடத்தப்படும் என்று இயக்குநர் பாரதிராஜா அறிவித்துள்ளார்.

மூன்று பேரையும் தூக்கிலிட இன்று தேதி குறித்துள்ளது வேலூர் சிறை நிர்வாகம்.இதையடுத்து இயக்குநர் சங்கத் தலைவர் பாரதிராஜா தலைமையில் இயக்குநர்கள் சங்க அவசரக் கூட்டம் நடந்தது. அக்கூட்டத்திற்குப் பின்னர் பாரதிராஜா செய்தியாளர்களிடம் பேசுகையில்,

பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரை தூக்கிலிட நாள் குறிக்கப்பட்டிருப்பது பெரும் வேதனையும், அதிர்ச்சியும் தருகிறது. இதை எதிர்த்து திரையுலகம் சார்பில் பெரும் போராட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள், வக்கீல்கள், மாணவர்களைத் திரட்டி பெரும் போராட்டம் நடத்துவோம்.

முதல்வர் ஜெயலலிதா உடனடியாக தலையிட்டு மூன்று பேரையும் காப்பாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். இதுதொடர்பாக அவருக்கு கடிதம் எழுதவுள்ளோம். மேலும் நேரில் சந்தித்து வேண்டுகோள் விடுக்கவும் முடிவு செய்துள்ளோம்.

இதைச் செய்யும் தகுதியும், அதிகாரமும் அவருக்கு உள்ளது. எனவே அவர் தலையிட்டு மூன்று பேரையும் காப்பாற்ற வேண்டும்.

மீடியா உலகம் இந்தப் பிரச்சினைக்கு முக்கியத்துவம் தரவேண்டும். வெறும் விளம்பரத்துக்காக நடக்கும் லோக்பால் உண்ணா விரதத்தை ஒரே மாதத்தில் உலகளாவிய பிரச்சினையாக மாற்றிவிட்ட மீடியா, உயிர் போகிற இந்த அத்யாவசிய, அவசரப் பிரச்சினைக்காக ஆதரவு காட்ட வேண்டும், என்றார் பாரதிராஜா.
 

சினிமா துறையின் நலன் பாதுகாக்கப்படும்! - அமைச்சர் செந்தமிழன்


சென்னை: தமிழகத்தில் தற்போது சட்டத்தின் ஆட்சி நடைபெறுவதால் திரைப்பட துறையினருக்கு எந்த பிரச்சனையும் ஏற்படாது. முதல்வர் ஜெயலலிதா திரைத்துறையினரின் நலன் காப்பார் என்று செய்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் ஜி.செந்தமிழன் உறுதியளித்தார்.

தமிழக சட்டசபையில் இன்று கடந்த திமுக ஆட்சியினரால் திரைப்படத் துறைக்கு ஏற்பட்ட நெருக்கடி குறித்தும், தயாரிக்கப்பட்ட திரைப்படங்களை வெளியிட இயலாத நிலை இருப்பது குறித்தும் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன் மீது சிபிஐ உறுப்பினர் ஆறுமுகம், புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி ஆகியோர் பேசினார்கள்.

கடந்த ஆட்சியில் ஒரு குறிப்பிட்ட குடும்பமே சினிமா துறையில் ஆதிக்கம் செலுத்தியது. மற்ற தயாரிப்பாளர்கள் படங்களை திரையிட முடியவில்லை.

தமிழ் பெயருக்கு வரி விலக்கு என்று அறிவித்து விட்டு அவர்கள் குடும்பம் தயாரித்த தமிழக்கு எந்த சம்பந்தமே இல்லாத எந்திரன் என்ற படத்திற்கு பல கோடி ரூபாய் வரி விலக்கு பெற்றவர்கள்.

புதிய ஆட்சி அமைந்த பிறகு அந்த நிலைமை இல்லை. சிறிய படத்தயாரிப்பாளர்கள் நலனும் பாதுகாக்கப்பட வேண்டும். திரைவுலகின் நலன் காக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

அமைச்சர் உறுதி

இதற்கு பதிலளித்து செய்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் ஜி.செந்தமிழன் கூறியதாவது:

திரைப்படத்தை தயாரிப்பதோ, வெளியிடுவதோ தமிழக அரசின் நேரடி கட்டுப்பாட்டில் இல்லை. திரைப்படங்களை தயாரித்து அதனை வெளியிட முடியாத நிலை இருப்பதாக இந்த துறைக்கு புகார் எதுவும் வரவில்லை.

எவ்வளவு தொகையில் படங்கள் தயாரிக்கப்படுகிறது, அதை எப்படி வெளியிடுவது என்பதெல்லாம் தனியார் தயாரிப்பாளர்களின் பொறுப்பாகவே இருந்து வந்துள்ளது. தமிழக அரசை பொறுத்தவரை தரமான திரைப்படங்களை தயாரிப்பவர்களுக்கு 7 லட்ச ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது.

சின்னத்திரை கலைஞர்களுக்கு அரசு பல்வேறு சலுகைகளை வழங்குகிறது. சிறந்த திரைப்படங்கள் நடிகர், நடிகைகளுக்கு இந்த துறையின் சார்பாக விருதுகளும் வழங்கப்பட்டு வருகிறது. எம்ஜிஆர் திரைப்பட நகரில் பயிற்சி பெறும் அனைத்துத் துறை மாணவர்களுக்கும் சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

சின்னத்திரையினரையும் சேர்த்து திரைப்படத் துறையினருக்காக நல வாரியம் அமைக்கப்பட்டு அவர்களுக்கு திருமண உதவித் தொகை, கல்வி உதவித்தொகை, முதியோர் ஓய்வுத் தொகை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இங்கு கவன ஈர்ப்பு தீர்மானம் கொடுத்தவர்கள் குறிப்பிட்டது போல கடந்த ஐந்தாண்டு காலமாக திரைப்படத் துறை அல்லலுக்கும், துன்பத்திற்கும் ஆளாக்கப்பட்டது நூற்றுக்கு நூறு உண்மை.

இந்த துறையை கைப்பற்றிக் கொண்டு மற்றவர்களை வளர விடாமல் அவர்கள் நசுக்கினார்கள். தங்களுக்கு தெரியாமல் யாருமே திரைப்படம் தயாரிக்கவோ, வெளியிடவோ கூடாது என்று அறிவிக்கப்படாத ஒரு நெருக்கடியை கடைப்பிடித்து வந்தனர்.

தமிழ் தமிழ் என பேசும் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் குடும்பத்தினர் ரெட் ஜெயன்ட் கிளவுட் நைன் என்று ஆங்கிலத்தில் பெயர் வைத்துக் கொண்டு இவர்களுடைய படம் ஓடுவதற்காகவே தியேட்டர் அதிபர்களை மிரட்டி ஏற்கனவே ஓடிய படங்களை எடுக்க சொல்லும் நிலைமை எல்லாம் நடந்திருக்கிறது.

இது பற்றி நாங்கள் எதிர்க்கட்சியாக இருந்தபோதே பேசினோம். ஆனால் அது செவிடன் காதில் ஊதிய சங்கு போல ஆகி விட்டது; எந்த நடவடிக்கையும் இல்லை. இன்று சட்டத்தின் ஆட்சி நடைபெறுகிறது. கடந்த 100 நாட்களில் நூறாண்டு சாதனைகளை புரிந்த முதல்வர் இனி திரைப்படத் துறையினரின் நலன்களையும் காப்பாற்றுவார்.

இவ்வாறு அமைச்சர் கூறினார்.

 

யுவன் யுவதி - சினிமா விமர்சனம்


நடிப்பு: பரத், சந்தானம், ரீமா கல்லிங்கல், சம்பத்
இசை: விஜய் ஆன்டனி
ஒளிப்பதிவு: கோவி ஜெகதீஸ்வரன்
கதை வசனம்: எஸ் ராமகிருஷ்ணன்
இயக்கம்: ஜிஎன்ஆர் குமரவேலன்
தயாரிப்பு: பைஜா
பிஆர்ஓ: மவுனம் ரவி

இந்தியாவே வேண்டாம், எப்படியாவது அமெரிக்கா போய் செட்டிலாகிவிட வேண்டும் என்பது பரத்தின் கனவு. ஆனால் அவரது கோடீஸ்வர கிராமத்து அப்பா சம்பத்தோ உள்ளூர் ஜட்ஜ் மகளுடன் திருமணத்துக்கு நாள் குறித்துவிடுகிறார்.

அமெரிக்க விசா பெறுவதற்காக தூதரக வாசலில் காத்திருக்கும்போது ரீமா கல்லிங்காலை சந்திக்கிறார் பரத். முதல் சந்திப்பில் முட்டிக் கொள்கிறார்கள். அந்த மோதல், அவர்கள் ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் தொடர்கிறது. அதுவே பரத்துக்குள் காதலாக உருவெடுக்கிறது. பாஸ்போர்ட்டைத் தொலைத்துவிட்ட ரீமாவுக்கு ஒருகட்டத்தில் பரத் உதவ, அப்போதுதான் ரீமா பரத்துடன் நட்பாகிறார்.

ரீமா மீதான தன் காதலைச் சொல்லிவிட பரத் முயலும்போதுதான், ரீமா விசா பெற்றதே அமெரிக்க மாப்பிள்ளையை கல்யாணம் செய்துகொண்டு செட்டிலாகத்தான் என்ற உண்மை தெரிகிறது.

அப்பா பார்த்த பெண்ணை பரத் கட்டினாரா? அமெரிக்க மாப்பிள்ளையை ரீமா மணம் முடித்தாரா? என்பதெல்லாம் இடைவேளைக்குப் பிந்தைய காட்சிகள்.

ரொம்ப சிம்பிளான காதல் கதை. அதன் பெரும்பகுதியை சீஷெல்ஸ் தீவின் அழகிய லொக்கேஷன்களில் படமாக்கியிருக்கிறார்கள். ஆனால் நச்சென்று சொல்லத் தவறியிருக்கிறார்கள்.

படத்தின் மிகப்பெரிய ஆறுதல் சந்தானம். பின்னி பெடலெடுத்துவிட்டார் மனிதர். அவர் தோன்றும் காட்சிகளில் அப்படியொரு அதிர்வெடி சிரிப்பு. ஆனால் சீஷெல்ஸில் அந்த நீக்ரோக்களைப் பார்த்து அவர் பேசும் வசனம் கொஞ்சம் ஓவர்தான். “மச்சான் போதைல பாத்ரூம்னு நெனச்சி ப்ரிஜ்ஜுக்குள்ள ஒண்ணுக்குப் போயிட்டேன்,” எனும் போது அக்மார்க் குடிகாரன் தோற்றான்!

பரத் ரொமான்டிக்காக நடிக்க ரொம்பவே மெனக்கெட்டிருக்கிறார். பாஸ்போர்ட்டுக்காக வரும் ரீமாவை வேண்டுமென்றே அவர் ஈசிஆரில் இழுத்தடிக்கும் காட்சிகள் சுவாரஸ்யமானவை.

ஆனால் பிள்ளைப் பாசத்தில் நல்ல விஷயங்களைச் செய்யும் தந்தையுடன் பரத் முறைத்துக் கொண்டு நிற்கும் காட்சிகளில் பரத் மீது எரிச்சல்தான் வருகிறது.

கோதுமை நிற அழகி ரீமா கல்லிங்கால் மிகையில்லாத நடிப்பைத் தந்துள்ளார்.

ஒரேயொரு காட்சியில் வரும் சத்யன் கலகலக்க வைக்கிறார்.

எந்த வேடமென்றாலும் அப்படியே 100 சதவீதம் பொருந்திப் போகிறார் சம்பத். அந்த கிராமத்து தாதா வேடத்தை இவரைவிட சிறப்பாக செய்ய முடியாது.

கோவி ஜெகதீஸ்வரன் ஒளிப்பதிவில், சீஷெல்ஸுக்கே போய் வந்த உணர்வு. அதேபோல, உசிலம்பட்டி என படத்தில் காட்டப்படும் இடங்களும் கண்களில் ஒற்றிக் கொள்ளலாம் போல அத்தனை அழகு.

விஜய் ஆன்டனி இசையில் ஓ மை ஏஞ்சல், மயக்க ஊசி பாடல்கள் கேட்க வைக்கின்றன. வசனங்களில் எஸ் ராமகிருஷ்ணனை ஓரிரு இடங்களில் பார்க்க முடிகிறது. குறிப்பாக கிராமத்தில் மகனிடம் சம்பத் பேசும் காட்சிகள்.

படத்தின் பின்பாதியில் நிறைய சம்பவங்கள் அடுத்தடுத்து வந்து கொண்டே இருக்கின்றன. க்ளைமாக்ஸ் நெருங்கும்போது கூட புதுப்புது பாத்திரங்கள். அதேபோல க்ளைமாக்ஸ் உள்ளிட்ட பல காட்சிகளை எளிதாக யூகிக்க முடிகிறது. இதைத் தவிர்த்திருந்தால், இன்னும் சிறப்பாக வந்திருக்கும் யுவன் யுவதி!

 

அமெரிக்காவில் மங்காத்தா... 70 திரையரங்குகளில் வெளியாகிறது!


அஜீத்தின் 50 வது படமான மங்காத்தா அமெரிக்காவில் மட்டும் 70 திரையரங்குகளில் வெளியாகிறது.

அஜீத்தின் படம் ஒன்று அமெரிக்காவில் இத்தனை திரையரங்குகளில் வெளியாவது இதுவே முதல்முறை.

வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள மங்காத்தாவில் அர்ஜூன், த்ரிஷா, லட்சுமிராய், அஞ்சலி, ஆண்ட்ரியா, ப்ரேம்ஜி என பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெளியாகும் ‘மல்டி ஸ்டாரர்’ படம் இது என வெங்கட் பிரபு கூறி வருகிறார்.

இதனால் ரசிகர்கள் மத்தியில் இந்தப் படத்துக்கு பெரும் எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.

இடையில் படம் வெளியிடுவதில் ஸ்டுடியோ கிரீன், சன் பிக்சர்ஸ், க்ளவுட் நைன் என தயாரிப்பு நிறுவனங்களுக்கிடையே ஒரு ‘மங்காத்தாவே’ நடந்து வந்த நிலையில், இப்போது புதிதாக ராதிகாவின் ராடான் நிறுவனமும் மங்காத்தா வெளியீட்டில் களமிறங்கியுள்ளது.

படம் ஆகஸ்ட் 31-ம் தேதி வெளியாவது உறுதி என தயாரிப்பாளர் தயாநிதி அழகிரி திரும்ப திரும்ப உறுதி கூறினாலும், இன்னும் நிச்சயமற்ற நிலைதான் நிலவுகிறது.

 

நாடு முழுக்க ஹஸாரே கதிர்வீச்சு! - விவேக் பேச்சு


சென்னை: நாடு முழுக்க இன்று அன்னா ஹஸாரே எனும் கதிர்வீச்சு பரவியுள்ளது என்றார் நடிகர் விவேக்.

பன்னாட்டு அரிமா சங்கம், சென்னை அரிமா மாவட்டம், அண்ணா பல்கலைக் கழகம் ஆகியவற்றின் சார்பில் சுற்றுச் சூழல் விழிப்புணர்வுக்கான ஆயிரம் மரக்கன்றுகள் நடும் விழா நேற்று அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. மரம் நடுவிழாவை தொடங்கி வைத்து விவேக் பேசுகையில், “பசுமை கலாம் திட்டத்தில் 10 லட்சம் மரக்கன்றுகளை நட திட்டமிட்டுள்ளேன். இந்த திட்டத்திற்கு அரிமா மணிலால் ஒரு லட்சம் மரக்கன்றுகள் தருவதாக கூறினார்.

இன்று நாடு முழுவதும் ஒரு கதிர்வீச்சு பரவுகிறது. அது அன்னா ஹசாரே என்ற கதிர்வீச்சு தான்.

அன்னா ஹசாரே ஊழலை ஓழிக்க பாடுபடுகிறார். இங்கு உள்ள மாணவ தம்பிகளை தம்பி ஹசாரேவாக பார்க்கிறேன். இந்தியாவில் 100 கோடி மரங்களை நடவேண்டும் என்று அப்துல்கலாம் விரும்புகிறார்.

தமிழ்நாட்டில் டிசம்பர் மாதத்திற்குள் 10 லட்சம் மரக்கன்றுகளை பசுமை கலாம் திட்டத்தில் நட உள்ளோம். இதில் எக்ஸ்னோரா உள்ளிட்ட பல தன்னார்வ அமைப்புகள் சேர்ந்துள்ளன.

மரம் வளர்க்கும் விழிப்புணர்வை மாணவர்கள் கிராமத்து மக்களிடம் ஏற்படுத்த வேண்டும். விவசாயம் வளர மழைநீர் தேவை. அதற்கு மரங்கள் தேவை. மரத்தை வளர்த்து வளத்தை பெருக்குவீர்,” என்றார்.

பன்னாட்டு அரிமா இயக்குனர் கிருஷ்ணாரெட்டி, போலீஸ் ஐ.ஜி.ஆறுமுகம், அரிமா மாவட்ட கவர்னர் பி.ராஜமாணிக்கம் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் அண்ணாபல்கலைக்கழக துணைவேந்தர் மன்னர் ஜவகர் வரவேற்றார். அரிமா டி.சேகர் நன்றி கூறினார்.