விஜய் தந்தது வாய்ப்பல்ல, வாழ்க்கை.... பேரரசுவின்!

|


'ரஜினியை வைத்து ஒரு படம் பண்ணனும், ரஜினியுடன் ஒரு படத்தில் நடிக்கணும்...', இதுதான் திரையுலகில் உள்ள பெரும்பாலானோரின் (ரஜினி விமர்சகர்களையும் சேர்த்து) அதிகபட்ச ஆசை, கனவு என்றால் மிகையல்ல!

நேற்று நடிக்க வந்த 16 வயதுப் பெண்ணும் ரஜினி சாருடன் ஜோடியாக நடிக்கணும் என்று பெருமையுடன் சொல்வதைக் கேட்கலாம்.

ரஜினியை வைத்து என் பாணியில் வித்தியாசமான படம் பண்ணனும் என்பதே அவரை அவ்வப்போது விமர்சிக்கும் சேரனின் ஆசை!

அந்த வரிசையில் இப்போது பேரரசு.

சமீபத்தில் ஈரோட்டில் பள்ளி நிகழ்ச்சியில் பங்கேற்ற பேரரசு, தன் சொந்த செலவில் இரண்டாயிரம் பள்ளி மாண மாணவிகளுக்கு நோட்டுப் புத்தகங்கள் மற்றும் எழுது பொருள்களை வழங்கினார்.

நிகழ்ச்சி முடிவில் நிருபர்களைச் சந்தித்த அவர், "நாட்டரசன் கோட்டையில் இருந்து சென்னைக்கு வந்து சினிமாத்துறை வாய்ப்புக்காக 15 ஆண்டுகள் போராடினேன். அதற்கு பிரதிபலனாக முதல் படமே நடிகர் விஜய் படமாக அமைந்தது. திருப்பாச்சி படத்தை இயக்க நடிகர் விஜய் தந்தது வாய்ப்பல்ல, வாழ்க்கை.

தற்போது திருத்தணி படத்தை இயக்கியுள்ளேன். இதில் பரத், ராஜ்கிரண் ஆகியோர் நடித்துள்ளனர். அந்த படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறது. ஏற்கனவே திருப்பதி படத்துக்கு கதைக்காக மாநில விருது கிடைத்து. திருத்தணிக்குப் பிறகு நான் இயக்கும் படம் சிவகங்கை.

ரஜினி ரசிகன்...

நான் ரஜினியின் தீவிர ரசிகன். எனக்கு விவரம் தெரிந்த நாள் முதல் அவரது படம் ரிலீஸ் ஆனால் 4,5 முறையாவது பார்த்துவிடுவேன். ரஜினியை வைத்து படம் இயக்க வேண்டும் என்பது என் லட்சியம். எல்லோரையும் போல இது ஒரு வழக்கமான கனவு என நினைத்துவிட வேண்டாம். அவருக்கான கதை, திரைக்கதை, வசனம் உள்பட பக்கா ஸ்கிரிப்ட் என்னிடம் தயாராக உள்ளது.

ராணா படத்துக்கு பின்னர் ரஜினி சாரை நிச்சயம் சந்திப்பேன்," என்றார்.
 

Post a Comment