அக்னிக் குஞ்சு

|

bollywood news, latest bollywood news, tamil bollywood news, bollywood latest news, bollywood masala, cinema news
ஒரு மகன், தன் தந்தைக்கு ஆற்றும் மகத்தான உதவியாக எது இருக்க முடியும்? இந்தக் கேள்விக்கான விடையை வெறும் வாய் வார்த்தைகளில் சொல்லாமல் நடைமுறையில் காட்டியிருக்கிறார் இயக்குநர் கரண் ஜோகர். அதே, 'குச் குச் ஹோத்தா ஹை' இந்திப் பட இயக்குநர்தான். 1990ல் முதன் முதலில் வெளியானது, 'அக்னிபத்' இந்திப் படம். அமிதாப் பச்சன், மிதுன் சக்கரவர்த்தி, மாதவி (நம்மூர் நடிகைதான்!), நீலம் கோத்தாரி உட்பட பலர் இந்த க்ரைம் த்ரில்லரில் நடித்திருந்தார்கள். 1983ல் வெளியான அல் பசினோ நடித்த ஹாலிவுட் படமான 'ஸ்கர்ஃபேஸ்'ஸின் தழுவல்தான் 'அக்னிபத்' என்பது ஒரு சாராரின் கருத்து. இல்லை... இல்லை... மும்பை நிழல் உலக தாதாவான மன்யா சர்வ்வின் வாழ்க்கைதான் இந்தப் படம் என்பது மறுசாராரின் நம்பிக்கை.

எது எப்படியிருந்தாலும் இந்தப் படம் ஓடவில்லை. பாக்ஸ் ஆபீசில் சுருண்டு விட்டது. ஆனால், இந்தப் படத்தில் நடித்ததற்காக அமிதாப் பச்சனுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதும், சிறந்த துணை நடிகருக்கான ஃபிலிம் ஃபேர் விருது மிதுன் சக்கரவர்த்திக்கும் கிடைத்தது. தொடக்கத்தில் டப்பா படமாக அறியப்பட்ட இப்படம், காலப் போக்கில் சிறந்த 'கல்ட்' படங்களில் ஒன்றாக அறியப்பட்டது; இன்றும் கொண்டாடப்படுகிறது. பிரபல கவிஞரும், அமிதாப்பின் தந்தையுமான ஹரிவன்ஷ் ராய் பச்சன் எழுதிய புகழ்பெற்ற ஒரு கவிதையின் ஆரம்ப வரிதான், 'அக்னிபத்'. இந்தக் கவிதை படத்தின் ஆரம்பத்திலும், படம் நெடுக தீம் மியூசிக் ஆகவும் வரும்.

'கேப் ஃபியர்' ஹாலிவுட் படத்தை தழுவி எடுக்கப்பட்ட 'கணூன் க்யா கரீகா' இந்திப் படம் வழியாக அறிமுகமான முகுல் எஸ்.ஆனந்த், 'அக்னிபத்' படத்தை இயக்கியிருந்தார். ஹிட்சாக்கின் புகழ்பெற்ற க்ளாசிக் ஆன, 'டயல் எம் ஃபார் மர்டர்' படத்தை சுட்டு இவர் எடுத்த 'ஏய்ட்பார்', திரையுலகில் நல்ல பெயரை இவருக்கு பெற்றுத் தந்தது. ஓஷோவின் சிந்தனையால் ஈர்க்கப்பட்டு சாமியாராக மாறிய வினோத் கண்ணா, மீண்டும் சினிமாவில் நடிக்க முடிவு செய்தபோது, அவர் டிக் செய்த இயக்குநர், முகுல் எஸ்.ஆனந்த்தான். அந்தப் படம், வசூலை அள்ளிய 'இன்சாஃப்'. இப்படி பெயர் வாங்கிய இயக்குநர் டைரக்ட் செய்தபோதும், சூப்பர் ஸ்டார் நடித்திருந்தபோதும் 'அக்னிபத்', வெகுஜன ரசிகர்களை ஈர்க்கவில்லை. இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டவர், யாஷ் ஜோகர்தான். 'அக்னிபத்' படத்தின் தயாரிப்பாளர் இவர்தான்.

இந்த யாஷ் ஜோகரின் மகன்தான், இன்று புகழ்பெற்ற இயக்குநராக வலம் வரும் கரண் ஜோகர். 'அக்னிபத்' படத்தை எந்தளவுக்கு தன் தந்தை நம்பினார், அந்தக் கதை மீது எப்படியெல்லாம் நம்பிக்கை வைத்தார், படம் தோல்வி அடைந்ததும் மனமுடைந்து எந்தளவுக்கு புலம்பினார், 'கல்ட்' படமாக அங்கீகரிக்கப்பட்ட போதும் கமர்ஷியல் ஆக ஏன் தோல்வி அடைந்தது என இறக்கும் வரை அவர் எங்கெல்லாம் விடை தேடி அலைந்தார் என்பதெல்லாம் இன்ச் பை இன்ச் ஆக அருகிலிருந்து பார்த்திருக்கிறார், கரண் ஜோகர்.

அப்போது அவர் முடிவு செய்திருக்க வேண்டும். என்றேனும் ஒருநாள், 'அக்னிபத்' படத்தை, அதே பெயரில் ரீமேக் செய்வது; அதை பாக்ஸ் ஆபீஸ் ஹிட் ஆக்கி காட்டுவது என்று. அதன் விளைவுதான் வரும் ஜனவரி 26 அன்று ரிலீசாக இருக்கும் 'அக்னிபத்'. அமிதாப் நடித்த வேடத்தில் ஹிருத்திக் ரோஷன் நடித்திருக்கிறார். மிதுன் சக்கரவர்த்தியின் கேரக்டரை இந்தப் படத்தில் தூக்கி விட்டார்கள். பிரியங்கா சோப்ரா நாயகியாக நடிக்க, சஞ்சய் தத், வில்லனாக அதகளம் செய்திருக்கிறார். இயக்கம், கரண் ஜோகரிடம் உதவியாளராக இருந்த கரண் மல்ஹோத்ரா. ரவி.கே.சந்திரனின் ஒளிப்பதிவில் தயாராகியிருக்கும் இப்படத்தின் கதை என்ன தெரியுமா? தந்தையை கொன்ற வில்லனை மகன் பழி வாங்குவது!


 

Post a Comment