மெரினா பட இயக்குநர் பாண்டிராஜ் மீது மோசடி புகார் - விசாரணைக்கு உத்தரவு

|


Pandiraj
சென்னை: பசங்க, வம்சம் மற்றும் மெரினா ஆகிய படங்களின் இயக்குநர் பாண்டிராஜ் மீது மோசடி புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த புகாரின் பேரில் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

சென்னை வளசரவாக்கத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 35). இவர் நேற்று போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில், "பசங்க, வம்சம் ஆகிய படங்களின் இயக்குநர் பாண்டிராஜ், மெரினா என்ற படத்தை இயக்கி வெளியிட்டார். அந்த படத்துக்கு ரூ.50 லட்சம் செலவு செய்து நான்தான் தயாரித்தேன். ஆனால் என்னை ஏமாற்றி விட்டு, அந்த படத்தின் தயாரிப்பாளராக தன்னை விளம்பரப்படுத்திக் கொண்டார்.

அந்த படத்தின் தயாரிப்பு செலவையும், லாபத்தில் பங்கு தொகையும் தருவதாகவும் அவர் சொன்னார். அதில் ரூ.15 லட்சம் மட்டும் கொடுத்தார். மீதி தொகையை கொடுக்காமல் ஏமாற்றி விட்டார். இதுதொடர்பாக சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்," என்று குறிப்பிட்டுள்ளார்.

விருகம்பாக்கம் போலீஸாரை இதுகுறித்து விசாரணை நடத்தச் சொல்லி, புகார் மனுவை அனுப்பி வைத்தார் கமிஷனர்.

பாண்டிராஜ் மறுப்பு

இந்த புகார் மனு தொடர்பாக டைரக்டர் பாண்டிராஜ் கூறும்போது, தன் மீதுள்ள புகாரை மறுத்தார். பாலமுருகன் ரூ.12.5 லட்சம் கொடுத்தார். அதற்கு ரூ.15 லட்சமாக நீதிமன்றம் மூலம் திருப்பிக் கொடுத்து விட்டேன். மேலும் ரூ.12.5 லட்சம் நீதிமன்றம் மூலம் தருவதாகவும் கூறி இருக்கிறேன்.

இந்த நிலையில் என்மீது பொய் புகார் கொடுத்துள்ள பாலமுருகன் மீது நீதிமன்றத்தில் மானநஷ்ட வழக்கு தொடருவேன். எனது அலுவலகத்தில் புகுந்து ஆவணங்களை பாலமுருகன் திருடிச் சென்று விட்டார். அதுதொடர்பாக கமிஷனரிடம் நானே புகார் கொடுக்க உள்ளேன்' என்றார்.
Posted by: Shankar
 

Post a Comment