எஸ்ஏசிக்கு ஒத்துழைப்பு இல்லை - அதிருப்தி கோஷ்டி பிடிவாதம் - நாளை போட்டி பொதுக்குழு!

|

சென்னை: தயாரிப்பாளர் சங்கத் தலைவராக எஸ் ஏ சந்திரசேகர் இருக்கக் கூடாது என்பதில் தயாரிப்பாளர் சங்கத்தின் போட்டி நிர்வாகிகள் மிகத் தீவிரமாக உள்ளனர்.

இப்ராகிம் ராவுத்தர் தலைமையில் செயல்படும் இவர்கள் நாளை போட்டி பொதுக்குழுவை ராதா பார்க் இன் ஹோட்டலில் கூட்டியுள்ளனர்.

ஆனால் இதனை சட்டவிரோதம் என அறிவித்துள்ள எஸ் ஏ சந்திரசேகரன், இந்தப் பிரச்சினை சுமூகமாகிவிடும் என முன்பு கூறியிருந்தார். நாங்கள் அண்ணன் தம்பிகள் மாதிரி, நாளை சரியாகிவிடுவோம் என்றும் சொல்லியிருந்தார்.

ஆனால் அவர் நினைப்பு தவறு என்று கூறியுள்ளனர் அதிருப்தி கோஷ்டியினர்.

இன்னொரு பக்கம், அதிருப்தியாளர்களில் கணிசமானோரை தன்பக்கம் இழுக்கும் முயற்சியில் எஸ் ஏ சி வெற்றி பெற்றுவிட்டார் என்கிறார்கள்.

பிஎல் தேனப்பன் போன்ற முக்கியப் பிரமுகர்களை தன் பக்கம் இழுப்பதில் வெற்றிகண்டுள்ளார் எஸ் ஏ சந்திரசேகரன்.

அதிருப்தியாளர்கள் அறிவித்துள்ள நாளைய பொதுக்குழு கூடுமா... கூடினாலும் வெற்றி பெறுமா? நாளை தெரிந்துவிடப் போகிறது!

இதற்கிடையே பெப்சியுடன் பேச்சு நடத்த உள்ள உயர்மட்ட குழு பற்றிய விவரத்தை வெளியிட்டுள்ளார் எஸ் ஏ சந்திரசேகரன். இந்த குழுவில் கோவைத் தம்பி, கலைஞானம், ஏ.எல். அழகப்பன், கே.டி. குஞ்சு மோன், ஆர்.வி. உதயகுமார், அமுதா துரைராஜ், சங்கிலி முருகன், சந்திரபிரகாஷ் ஜெயின், மாதேஷ், எம். கபார், ராமராஜன், ராதாரவி, சீனிவாசன் உள்ளிட்ட 15 பேர் இடம் பெற்றுள்ளனர்.

மேலும் எஸ்ஏ சந்திரசேகரன் தலைமையில் இன்னுமொரு பொதுக்குழு கூட உள்ளது. இதற்கு போலீஸ் பாதுகாப்பு கேட்க முடிவு செய்துள்ளாராம் அவர்.
 

Post a Comment