எம்.கே என்டர்பிரைசஸ் வழங்க, ஸ்ரீ முவி மேக்கர்ஸ் சார்பில் இயக்குனர் ஜி.கிச்சா தயாரிக்கும் படம், 'எப்படி மனசுக்குள் வந்தாய்'. புதுமுகங்கள் விஷ்வா, தன்வி வியாஸ், இர்பான் ரவிகாளே, சதீஷ் உட்பட பலர் நடிக்கின்றனர். கதை, திரைக்கதை, பாடல்கள் எழுதி பி.வி.பிரசாத் இயக்கியுள்ளார். இதன் டிரெய்லர் மற்றும் பாடல் வெளியீட்டு விழா, சென்னையில் நேற்று நடந்தது. முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி வெளியிட, தயாரிப்பாளர் சங்க அட்ஹாக் கமிட்டி தலைவர் இப்ராகிம் ராவுத்தர் பெற்றார். விழாவில் வசந்தபாலன் பேசியதாவது: படம் தொடங்கும்போதே, 'புகைப்பிடித்தல் உடல்நலத்துக்கு தீங்கானது' என்றும், 'மது அருந்துதல் நாட்டுக்கும், வீட்டுக்கும் கேடு' என்றும் டைட்டிலில் இடம்பெறச் செய்துவிடுகிறோம். ஆனால், இதுபோன்ற காட்சிகள் வரும்போதெல்லாம் இந்த வாசகங்கள் வரவேண்டும் என்கிறார்கள். ஒரு படத்தை கதையோட்டத்துடன் பார்த்துக்கொண்டிருக்கும்போது, திடீரென வரும் இதுபோன்ற டைட்டில்கள் கவனத்தை திசை திருப்புகிறது. மேலும், 'யு' சர்டிபிகேட் அளிக்கப்பட்ட படத்துக்கு உடனே வரிவிலக்கு தர வேண்டும். ஆனால், படத்தை மீண்டும் ஒரு குழு பார்த்த பிறகே வரிவிலக்கு கிடைக்கும் நிலை இருக்கிறது. இது சிரமமாக இருக்கிறது. தயாரிப்பாளர் சங்கம் இந்த விஷயத்தில் தலையிட்டு, ஆவண செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். கே.பாக்யராஜ், ஆர்.கே.செல்வமணி, டி.சிவா, மனோஜ்குமார், ஜெயம் ராஜா, தமிழ்க்குமரன், விஷ்வா, தன்வி வியாஸ், ரவிகாளே உட்பட பலர் பேசினர். ஜி.கிச்சா நன்றி கூறினார்.
Post a Comment