கே.பாலச்சந்தரின் இயக்கத்தில் வெளியாகி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகிய இரு பெரும் நட்சத்திரங்களின் நடிப்பில் பெரும் ஹிட் ஆன தில்லுமுல்லு மற்றும் மன்மத லீலை ஆகிய இரு படங்களையும் பாலச்சந்திரன் மகளும், தயாரிப்பாளருமான புஷ்பா கந்தசாமி ரீமேக் செய்யவுள்ளார். ஒரே நேரத்தில் இந்த இரண்டு படங்களையும் அவர் ரீமேக் செய்யவுள்ளதால் திரையுலகில் புதிய எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.
முதன் முதலில் ரஜினிகாந்த் மீசையை எடுத்த படம் தில்லுமுல்லு. பெண் பித்தராக கமல்ஹாசன் நடித்த முதல் படம் மன்மத லீலை. இரண்டுமே இரு பெரும் சூப்பர் டூப்பர் ஹிட் படங்களாக உருவாகியவை. இரண்டையும் இயக்கியவர் கே.பாலச்சந்தர்.
இரண்டு அக்காலத்தில் பெருவாரியான ரசிகர் ஆதரவைப் பெற்ற படங்கள். இதில் தில்லுமுல்லு படத்தில் கமல்ஹாசனும் இருப்பார். அதாவது கிளைமேக்ஸ் காட்சியில் போலி வக்கீலாக வரும் கமல்ஹாசன் தன்னைப் போல நூற்றுக்கணக்கான போலி வக்கீல்களுடன் வந்து கலகலப்பூட்டுவார்.
இப்போது இந்த இரு ஹிட் படங்களையும் ரீமேக் செய்யவுள்ளார் பாலச்சந்தரின் மகளும், தயாரிப்பாளருமான புஷ்பா கந்தசாமி.
இதுகுறித்து அவர் கூறுகையில், இரண்டுமே ஹிட் படங்கள். எனவே இதை ரீமேக் செய்வது எளிதான வேலை அல்ல. இருப்பினும் இரு படங்களின் கதையும் எக்காலத்துக்கும் பொருந்தும் ஒன்றுதான். எனவேதான் இப்படங்களை ரீமேக் செய்யவுள்ளோம்.
கமல், ரஜினி வேடங்களில் நடிக்கப் போவது யார் என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை. பரிசீலித்து வருகிறோம். இக்காலத்திற்கேற்ற வகையில் கதையை உருவாக்கி திரைக்கதை அமைக்கப்படும். சில பிரபல இயக்குநர்களிடம் பேசி வருகிறோம் என்றார்.
இன்னும் சில மாதங்களில் இரட்டிப்பு விருந்துக்கு ரசிகர்கள் தயாராகலாம்...!
Post a Comment